`பயன்படு கருவிகளுக்குப் படையல்’ - பாரம்பர்யம் போற்றும் ஆயுதபூஜை வழிபாடு! | history and worship of Ayudha Pooja

வெளியிடப்பட்ட நேரம்: 18:17 (28/09/2017)

கடைசி தொடர்பு:18:47 (28/09/2017)

`பயன்படு கருவிகளுக்குப் படையல்’ - பாரம்பர்யம் போற்றும் ஆயுதபூஜை வழிபாடு!

'யன்படு கருவிகளுக்குப் படையல்' என்பது தொன்மைச் சமூகங்கள் கடைப்பிடிக்கும் ஒரு நடைமுறை. அதனுடைய தொடர்ச்சியே தற்போது ஆயுத பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. முதலில் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட கற்கோடரிகள் போன்ற கற்கருவிகள், வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்ட உழவுக்கலப்பை போன்ற கருவிகள், போருக்கு பயன்படுத்தப்பட்ட வாள், வேல், வில் போன்ற கருவிகளை வழிபடும் முறை ஆதி காலம் தொட்டே இருந்துவருகிறது.

குயிலி

'கருவிகள்' வெறும் வேட்டையாடலுக்கானது மட்டும் அல்ல. தொன்மை வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் சான்றுகளாகவும் இருக்கின்றன. உதாரணமாக, `சென்னை அத்திரப்பாக்கத்தில் கிடைத்த பண்டைய கற்கோடரிகள் கிட்டத்தட்ட 16 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்டவை’ என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பண்டைய மனிதர்களின் இறந்த உடல்களோ, எலும்புகளோ, அவர்கள் பயன்படுத்திய பொருள்களோ கிடைக்காத இடங்களில்கூட அவர்கள் வேட்டையாடிய கற்கருவிகள் அதிகமாகக் கிடைத்திருக்கின்றன. அந்தக் கருவிகளில் படிந்திருக்கும் ரத்தக் கறைகளை வைத்துதான் அவர்கள் வாழ்ந்த காலத்தைக் கணக்கிடுகிறார்கள் ஆய்வாளர்கள். கற்காலம் முதல் இக்காலம் வரை மனிதனை வாழவைத்துக்கொண்டிருப்பது கருவிகளே. அதன் பரிணாம வளர்ச்சியே இன்று இயந்திரங்களாக மாறி இருக்கின்றன.

வில், அம்பு, வேல், அரிவாள், ஆண்டலையடுப்பு, ஈர்வாள், உடைவாள், கதிரருவாள், கதை, கவை, கல்லிடு கூடை, கணையம், கழுகுப்பொறி, கவசம், குத்துவாள், கைவாள், கொடுவாள், கோல், சிறுவாள், தகர்ப்பொறி, தொடக்கு, பிண்டிபாலம், ஞாயில், மழுவாள், விளைவிற்பொறி, அரிதூற்பொறி, இருப்பு முள், எரிசிரல், கழு, கருவிலூகம், கல்லமிழ் கவண், கற்றுப்பொறி, கழுமுள், குந்தம், கூன்வாள், கைபெயர், கோடாரி, சதக்கணி, தண்டம், தூண்டில், தோமரம், புதை, நாராசம், வஜ்ஜிரம் ஆகியவை சங்க காலத்தில் தொழிலுக்கும் போருக்கும் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள்.

 

ஆயுத பூஜை

தமிழர்களின் திணை வாழ்வில் கொற்றவை வழிபாடே முதன்மையானது. தமிழர்களின் தாய் தெய்வம் கொற்றவை. புரட்டாசி மாதம், அஸ்த நட்சத்திரத்தில் இருந்து திருவோண நாள் வரை பெண் தெய்வ வழிபாடு செய்யப்படுவது வழக்கம். அதில் ஒன்பதாம் நாளன்று போரில் வெற்றிபெற உதவும் ஆயுதங்களை வைத்து வழிபடும் நடைமுறையும் உண்டு. இதற்கு 'வாண்மங்கல விழவு', 'வாளுடை விழவு' என்று பெயர். இதுபற்றி சிலப்பதிகாரத்தில்,

`கலையமர் செல்வி கடனுணின் அல்லது

சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள்’

என்ற பாடலில், `கொற்றவைக்குச் செய்யவேண்டிய சடங்குகளைச் செய்யாவிட்டால், அவள் வில்லுக்கு வெற்றி தர மாட்டாள்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனில் ஆயுத வழிபாடு என்பது பண்டைய தமிழரின் வழிபாட்டு முறை என்பது உறுதியாகிறது.

ஆயுதங்களை மட்டுமல்லாமல் போருக்குப் பயன்படுத்தப்பட்ட யானைகள், குதிரைகள், தேர் ஆகியவற்றைச் சுத்தப்படுத்தி மங்கல விழாவில் வழிபடுவது பற்றி பெரியபுராணத்தில்

`பட்டவர்த் தனமாம் பண்பு

பெற்றவெங் களிறு கோலம்

பெருகுமா நவமி முன்னாள்

மங்கல விழவு கொண்டு

வருநதித் துறைநீ ராடி...’

என்ற பாடலில் குறிப்பு இருக்கிறது. இதன் தொடர்ச்சிதான் இன்று வாகனங்களுக்கு பூஜை செய்யும் நடைமுறையாக தொடர்ந்துவருகிறது. தொல்காப்பியத்திலும் `மானார்ச் சுட்டிய வாண்மங்கலமும்’ என்று ஆயுத வழிபாடு பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

போர் வீரர்கள் கேடயத்தையும் வாளையும் வாகைப் பூ மாலை சூடி வணங்கிய செய்தியை,

'றொன்மிசைந் தெழுதரும் விரிந்திலங் கெஃகிற்

றார்புரிந் தன்ன வாளுடை விழவிற்

போர்படு மள்ளர் போந்தோடு தொடுத்த

கடவுள் வாகைத் துய்வீ யேய்ப்ப'

என்ற பதிற்றுப்பத்து பாடல் மூலம் அறிய முடிகிறது.

தமிழ் மூதாட்டி ஔவையாரும் ஆயுத வழிபாடு பற்றி அழகாகப் பாடியுள்ளார்.

பண்டையத் தமிழ் குறுநில மன்னர்களான அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் ஒருமுறை போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இதைக் கண்ட ஔவைக்கு நெஞ்சம் பதறியது. போரைத் தடுக்கும் பொருட்டு தொண்டைமானிடம் தூதுக்குச் செல்கிறார் ஔவை. அப்போது ஆயுத சாலையில் அத்தனை ஆயுதங்களுக்கும் மாலை சூடி வணங்கப்பட்டிருப்பதைக் கண்ட ஔவை,

"இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்

கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து,

கடியுடை வியன்நக ரவ்வே : அவ்வே,

பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து,

கொல்துறைக் குற்றில மாதோ ; என்றும்

உண் டாயின் பதம் கொடுத்து,

இல் லாயின் உடன் உண்ணும்,

இல்லோர் ஒக்கல் தலைவன்,

அண்ணல்எம் கோமான், வைந் நுதி வேலே."

இவ்வாறு பாடி அதியமானின் படைபலத்தைப் பற்றி மறைமுகமாக உணர்த்தியதாகவும், அதன்பின்னர் தொண்டைமான் சமாதானம் ஆனதாகவும் சொல்லப்படுகிறது.

பெண்கள் கத்தி சண்டையிடும் சிற்பங்கள்

குலதெய்வங்களாகட்டும், காவல் தெய்வங்களாகட்டும் ஆயுதங்கள் இல்லாமல் யாரும் இல்லை. தெய்வங்களுக்கு படையலிடும்போது ஆயுதங்களுக்கும் சேர்த்தே படையலிடுகிறோம். முருகப்பெருமான் கூட கையில் வேலுடன்தான் காட்சிதருகிறார். வாகனங்களும், சிவசுப்பிரமணியன்ஆயுதங்களும் இல்லாமல் காட்சி தரும் தெய்வங்கள் அரிது. ஆண்கள் மட்டும் இன்றி பண்டைய கால பெண்களின் வீரத்தைச் சொல்லும் வகையில் பெண்கள் கத்திச் சண்டையிடும் எண்ணற்ற சிற்பங்கள் கோயில்களில் இன்றும் உள்ளன.

பண்டைய காலங்களில் ஆயுதங்களை ஏன் வழிபட்டோம் என்பது பற்றி நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் கூறுகிறார்...``கருவிகளை வழிபடுவது என்பது உலகளாவிய மரபு. படைக்கருவிகளுக்கு மட்டும் அல்ல... தொழில்கருவிகளும் இதில் அடக்கம். அதாவது ஒவ்வொரு கருவிக்குள்ளும் ஒரு அணங்கு இருக்கும் என்று நம்பப்படுகிறது. மானுடவியலில் இது அனிமிசம் (ஆன்ம வாதம்) என்று சொல்லப்படும். அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஆயுதங்களுக்குப் படையல் வைத்து வணங்கி வந்தார்கள். அதனுடைய தொடர்ச்சிதான் இன்று கருவிகளை வைத்து ஆயுதபூஜையாக வழிபடுவதும்.

இன்று துப்பாக்கிகளுக்குக்கூட பொட்டு வைத்து வணங்குகிறார்கள். என்னதான் விஞ்ஞானம் நவீன வளர்ச்சியை நோக்கிச் சென்றாலும் படையல் என்ற பண்டைய, பண்பாட்டு மரபு இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று.’’

ஐய்யனார்

நம்மை நாம் மேம்படுத்திக்கொள்ள தொழில் கருவிகளாகவும், நம்மை தற்காத்துக்கொள்ள போர்க் கருவிகளாகவும் ஆயுதங்கள் விளங்குகின்றன. பண்டைய தமிழ் மரபின்படி நமக்குப் பயன்படும் கருவிகளை வழிபடுவோம்... பாரம்பர்யத்தைப் போற்றுவோம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்