கல்வி, செல்வாக்கு, புகழ் அருளும் சரஸ்வதியை சரணடைவோம்! நவராத்திரி 9-ம் நாள் வழிபாடு! #AllAboutNavaratri | Let us worship Saraswathi! Navaratri Series Day 9

வெளியிடப்பட்ட நேரம்: 09:36 (29/09/2017)

கடைசி தொடர்பு:11:34 (06/10/2017)

கல்வி, செல்வாக்கு, புகழ் அருளும் சரஸ்வதியை சரணடைவோம்! நவராத்திரி 9-ம் நாள் வழிபாடு! #AllAboutNavaratri

நவராத்திரி 9-ம் நாள்

வராத்திரியின் நிறைவு நாள் இன்று. முதல் மூன்று தினங்கள் துர்கை, அடுத்த இரண்டு தினங்கள் லட்சுமி, தொடர்ந்த மூன்று தினங்களில் சரஸ்வதி என்று முப்பெரும் தேவியரை பல்வேறு பெயர்களில் வழிபடும் விழாவே நவராத்திரி. கடந்த ஒன்பது நாள்களாக நாடெங்கிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நவராத்திரி வைபவம், நாளை விஜயதசமியுடன் நிறைவு பெறுகின்றது. நவராத்திரி 9-ம் நாள்   இன்று நாம் வழிபடவேண்டிய தெய்வம் சரஸ்வதி தேவி. குமாரியின் பெயர் - சுபத்ரா;, மந்திரம் - ஓம் சுபத்ராயை நம;, சுவாசிநியின் பெயர் - ஸித்திதாத்ரி; மந்திரம் - ஸித்திதாத்ரியை நம: மலர் - மருக்கொழுந்து;, நைவேத்தியம் - அக்காரவடிசல்;. இன்று பத்து வயது உள்ள பெண்குழந்தைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கு வரவழைத்து, அவர்களை சுபத்ரா தேவியாக பூஜித்து வழிபட்டு, மங்கலப் பொருள்களை பிரசாதத்துடன் வழங்கி மகிழ்விக்கவேண்டும். இதன் மூலம் நமக்கு சகல விதமான நன்மைகளும் கிடைக்கும். செல்வாக்கும் புகழும் அதிகரிக்கும்.

நவராத்திரி 9-ம் நாள் இன்று நாம் சரஸ்வதி தேவிக்கு விசேஷமாக பூஜைகள் செய்து வழிபடுகிறோம். கொலு வைக்கும் வழக்கம் இல்லாதவர்களும்கூட சரஸ்வதி பூஜையைக் கொண்டாடுகின்றனர்.

நவராத்திரி 9-ம் நாள்

சரஸ்வதி பூஜையன்று காலையில் வீட்டைச் சுத்தம் செய்து, பூஜையறையில் சரஸ்வதி தேவியின் திருவுருவப் படத்தை நன்றாக அலங்கரித்து, தேவியின் திருவுருவப் படத்துக்கு முன் புத்தகங்கள், மற்றும் கல்விக்குப் பயன்படுத்தும் பேனா, பென்சில் போன்ற பொருள்களை வைத்து வழிபடவேண்டும். மேலும் சரஸ்வதி தேவியே அனைத்து கலைகளுக்கும் அதிபதி என்பதால், நம்முடைய கலை சார்ந்த கலைப் பொருள்களையும் வைத்து பூஜை செய்யலாம்.

(நவராத்திரி, ஒன்பதாம் நாளின் மகத்துவத்தையும், வழிபாட்டு முறைகளையும், இந்த நாளுக்குரிய அம்மனின் சிறப்பையும் பற்றி  'சொல்லின் செல்வர்'  பி.என்.பரசுராமன் பேசும் வீடியோவைப் பாருங்கள்!) 

 

நவராத்திரியின் ஒன்பதாம் நாள் ஆயுதபூஜையாகவும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் தொழில் செய்வோரும் தங்கள் தொழிலுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து மலர் சாற்றி பூஜிப்பர்.

இறைவனையே வசப்படுத்தும் இசைக் கலைக்கும் அதிபதி சரஸ்வதி தேவியே என்பதால், சரஸ்வதி பூஜை நாளில் ராகங்கள் தோன்றிய புராண வரலாற்றைப் பார்ப்போம்.

(நவராத்திரி ஒன்பதாம் நாள் கோலம்)

 

 

தட்சனின் மகளாகப் பிறந்து சிவபெருமானை திருமணம் செய்துகொண்ட தாட்சாயணி, சிவபெருமானை மதிக்காமல் தட்சன் செய்த யாகத்துக்குச் சென்று அவமானப்பட்டு, யாகத் தீயில் விழுந்தாள். பிறகு அவள் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து, சிவபெருமானை திருமணம் செய்துகொண்ட புராணக் கதை நமக்குத் தெரியும். பார்வதி தேவியை திருமணம் செய்துகொண்டு, கயிலைக்குத் திரும்பும்போது, சங்கீதம் பாடி அவரை வரவேற்று மகிழ்விக்க தேவர்கள் விரும்பினர்.

(கர்னாடக இசைக்கலைஞர் பவ்யா கிருஷ்ணன் பாடிய நவராத்திரி ஒன்பதாம் நாளுக்கான பாடலை இங்கு கேட்கலாம்)

 

அப்போது அங்கே வந்த நாரதர் தாம் சங்கீதம் இசைப்பதாகக் கூறினார். நாரதரின் இசையைக் கேட்கச் சகிக்காமல் ராகங்களே உரு மாறிவிட்டன. உடனே சிவபெருமான் தாமே இசைப்பதாகக் கூறி இசைத்தார். அப்போது ராகங்கள் தங்கள் இயல்புக்குத் திரும்பின. இப்படித்தான் ராகங்கள் உருவாகின.

சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதி தேவியை பூஜித்து, கல்வியிலும், கலைகளிலும் புகழ் பெற்று சிறப்புற வாழ்வோம் ..


டிரெண்டிங் @ விகடன்