நவராத்திரிகளில் பாடகி சைந்தவிக்குப் பிடித்தது சரஸ்வதி பூஜை... ஏன்? | singer saindhavi's interview about navarathri celebration

வெளியிடப்பட்ட நேரம்: 20:53 (28/09/2017)

கடைசி தொடர்பு:21:24 (28/09/2017)

நவராத்திரிகளில் பாடகி சைந்தவிக்குப் பிடித்தது சரஸ்வதி பூஜை... ஏன்?

வராத்திரி கொலு வைபவங்களில் பெரும்பங்கு வகிப்பவை பாடல்கள். கொலு வைத்திருக்கும் வீடுகளில் பக்திப் பாடல்களை `பாவ’த்தோடு பாடும் பாடகர்களுக்கு ஏக வரவேற்பு இருக்கும். பிரபல பாடகர்களுக்கோ கால்ஷீட் தர முடியாத அளவுக்கு கோயில்களில் பாடுவதற்கான நிகழ்ச்சிகள் இருக்கும். நவராத்திரியின் ஒன்பது நாள்களும் பிஸியாக இருப்பவர்கள் இந்தப் பாடகர்களே. பலரைத் தங்கள் பாடல்களால் வசீகரிக்கும் இவர்களுடைய தனிப்பட்ட நவராத்திரி எப்படி இருக்கும் என்பது எல்லோருக்குமே எழும் ஒரு கேள்வி. ஏனென்றால், கச்சேரி இருக்கும் நாள்களில் விரதமெல்லாம் இருக்க முடியாது. அவர்கள் என்ன செய்வார்கள்? பிரபல பாடகி சைந்தவியிடம், அவருடைய பெர்சனல் நவராத்திரி கொண்டாட்டத்தைப் பற்றிப் பேசினோம்...
 

"`கொலு’ என்று சொன்னால், உங்களுக்குப் பாட்டு ஞாபகம் வருமா அல்லது பொம்மைகள் ஞாபகம் வருமா?’’
"எல்லா நவராத்திரியின்போதும், என்னைப் பாட்டு பாட அழைப்பாங்க. சின்ன வயசுல இருந்து நிறைய பாடுறதால, பாட்டுதான் சட்டுனு ஞாபகத்துக்கு வரும். அதுக்காக, என்ன பாட்டுன்னு கேட்டுடாதீங்க... எல்லா பக்திப் பாடல்களும் என்னோட ஃபேவரைட்தான்! பொம்மைகளும் ரொம்பப் பிடிக்கும். குறிப்பா சொல்லணும்னா, கிருஷ்ணர்-ராதா என்னோட ஆல்-டைம் ஃபேவரைட். அதுலயும், சாய்ந்தபடி நிற்கும் ராதையைத் தாங்கியபடி இருக்கும் கிருஷ்ணர் பொம்மை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதேபோல, செட்டியார் பொம்மை... க்யூட்டா இருக்கும்! கிருஷ்ணர் பொம்மைகள் மீது எனக்கு ஈர்ப்பு வர்றதுக்கு ஒரு காரணம் இருக்கு. சின்னப் பசங்களுக்கு கொலு நாள்கள்ல வேஷம் போட்டு விடுவாங்கள்ல... அது மாதிரி எங்க வீட்டுல செய்யும்போது, எனக்கும் எங்க அண்ணனுக்கும் கிருஷ்ணர் வேஷம்தான் கிடைக்கும். அப்பப்போ முருகன் வேஷம் போட்டுவிடுவாங்க. ஒன்பது நாள்கள்ல ஏதாவது ஒருநாள்தான் வேஷம் போட்டுவிடுவாங்க. அந்த ஒருநாள் எப்போ வரும்னு ரொம்ப ஏங்குவேன். அந்த ஒருநாள் முழுக்க நாங்க அந்தக் கடவுளாகவே எங்களை நினைச்சுக்கிட்டு வாழ்வோம். செம ரகளையா இருக்கும்.’’

கிருஷ்ணர் ராதை

"இந்த வருட நவராத்திரி எப்படிப் போகிறது?’’
"கணவர் வீட்டு வழக்கப்படி, அவங்க வீட்டுல கொலுவைக்கிற பழக்கம் இல்லை. எங்க வழக்கத்துல உண்டுங்கறதால, கல்யாணத்துக்குப் பிறகு அம்மா வீட்டுக்குப் போய் கொண்டாடுவேன். குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு இழப்பு காரணமாக, இந்த வருஷம் வீட்ல கொலுவெச்சு நவராத்திரி கொண்டாட முடியாமப் போச்சு. நவராத்திரி கொலுவைக்கலையே தவிர, மற்ற வழிபாடுகள் எல்லாம் செய்துடறேன். எப்பவுமே தினசரி பூஜை தொடங்கி எல்லா வழிபாடுகளும் சரியா செய்துடறேன். பாட்டுக் கச்சேரிகளுக்கும் போய்ட்டுதான் இருக்கேன். தொடர்ந்து கச்சேரிகள் இருக்கறதால, விரதம் மட்டும் இருக்க முடியாத சூழல். மற்றபடி எந்தக் குறையும் இல்லாமப் போகுது நவராத்திரி.’’

சைந்தவி

"சாதாரண நாள்களில்கூட பூஜை செய்துவிடுவீர்களாமே... கடவுள் பக்தி அதிகமோ?’’
"ஆமா. தினப்படி சிவனுக்கு பூஜை செய்யணும். கணவர் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமும் நான் அப்படித்தான் இருக்கேன். கிருஷ்ண ஜெயந்தி, வரலட்சுமி விரதம் மாதிரியான எல்லா பண்டிகைகளையும் சரியா ஃபாலோ பண்ணுவேன். ஸ்லோகம், மந்திரம் எல்லாம் அம்மா சொல்லிக்கொடுத்திருக்காங்க. நவராத்திரிக்கு ரொம்ப விசேஷமான லலிதா சஹஸ்ரநாமம் நான் தினமும் பூஜையில் படிக்கிற மந்திரம். ஶ்ரீசக்கரத்துக்கு குங்கும அர்ச்சனை செய்வது, லலிதா சஹஸ்ரநாமம் படிப்பது... என பூஜை, கடவுள் வழிபாடுகளை இப்போ வரைக்கும் நான் தொடர்ந்து செய்யுறேன்.’’
 

"மறக்க முடியாத கொலு அனுபவம் ஒன்றைச் சொல்லுங்களேன்...’’
"எனக்குப் பிடிச்ச பொம்மைகளை மட்டும்தான் கொலுப்படிகள்ல வைக்கணும்னு பயங்கரமா அடம்பிடிப்பேன். என்னைச் சமாதானம் பண்ண முடியாம வீட்லயும் சரின்னுடுவாங்க. அப்படி ஒரு தடவை ஒன்பது படிகள்லயும் என்னோட ஃபேவரைட் பார்பி பொம்மைகளை நிறைச்சுவெச்சிருந்தேன். இன்னொரு முறை, எல்லாப் படிகள்லயும் பிள்ளையார் வைக்கச் சொல்லி அடம்பிடிச்சேன். பொதுவாகக் குழந்தைங்க இந்த மாதிரி அடம்பிடிச்சா, கடவுள் பொம்மைகள்வெச்சிருந்த கொலு இல்லாம, அவங்க பொம்மைகளுக்குனு தனியா ஒரு கொலு வைப்பாங்க. ஆனா, எங்க வீட்ல அப்படி இல்லை. நான் சொல்ற, காண்பிக்கிற பொம்மைகளை மட்டும்தான் அந்த நவராத்திரி கொலுவுல இருக்கும்.’’
 

"நீங்கள் மிகவும் ரசித்துச் செய்யும் கொலு அலங்காரம் எது?’’
"கொலுப் படிக்கட்டுகளுக்கு பக்கத்துல, சின்னதா ஒரு தோட்டம் தயார் செய்வோம். அதுக்காக நவராத்திரிக்கு நாலைஞ்சு நாள் முன்னாடி இருந்தே பயறு, கீரை, புல் மாதிரி சட்டுனு முளைக்கிற தாவரங்களை வளர்ப்போம். ரொம்ப ஆசையா செய்யும் விஷயங்கள்ல முக்கியமான ஒன்று அதுதான். இப்போ அதையெல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன்.’’

சரஸ்வதி

"ஒன்பது நாள் நவராத்திரிக் கொண்டாட்டத்தில் உங்களுக்குப் பிடித்த நாள் எது?’’
``முதல் மூன்று நாள் துர்கை வழிபாடு, அடுத்த மூன்று நாள் லஷ்மி வழிபாடு, கடைசி மூன்று நாளும் சரஸ்வதி வழிபாடுங்கறதுதான் முறை. இதுல, என்னுடைய பாட்டுக்கு உபயோகப்படும் எல்லா பொருள்களையும் தெய்வமாக மதிச்சு பூஜிக்கிற நாளான சரஸ்வதி பூஜைதான் என்னோட ஃபேவரைட். பாட்டுக்கும் படிப்புக்கும் ரொம்ப முக்கியமான கடவுள் சரஸ்வதிதான் என்பது ஒரு காரணம். அன்னைக்கு, பாட்டுப் புத்தகம், வீணை, தம்புரா, ஸ்ருதி பாக்ஸ், கிதார் போன்ற முக்கியமான பொருள்களை எல்லாம்வெச்சு வழிபடுவோம். அடுத்த நாள் விஜயதசமி அன்னிக்கு, இதுவரைக்கும் எனக்குப் பாட்டு சொல்லித் தந்த எல்லா ஆசான்களையும் முடிஞ்சளவு நேர்ல போய் பார்த்து நன்றி சொல்லிடுவேன்.’’ - தனது நவராத்திரி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட குஷியோடு அடுத்த ரெக்கார்டிங்குக்குப் புறப்படத் தயாராகிறார் சைந்தவி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close