வெளியிடப்பட்ட நேரம்: 19:17 (29/09/2017)

கடைசி தொடர்பு:19:17 (29/09/2017)

மைசூர் தசரா விழா... வரலாறு, பெருமைகள், சிறப்புகள்!

தேவி பராசக்தி சாமுண்டீஸ்வரியாக வடிவம் கொண்டு மகிஷனை சம்ஹாரம் செய்த இடமே மகிஷாபுரம், மஹிஷா மண்டலம், மஹிஷுர் என்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டு பின்னர் மைசூர் என்று மருவியது. மகிஷ வதம் நடைபெற்ற இந்த இடத்திலேயே நவராத்திரி விழா நடைபெறுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. 407-வது ஆண்டாக இந்த ஆண்டு நடைபெறும் தசரா விழாவைக்காண உலகெங்கும் இருந்து மக்கள் கூடுவர்.

மைசூர் தசரா

தசரா பண்டிகையை பற்றிய சுவாரசியமான சில தகவல்களை பார்க்கலாம்

* தசரா பண்டிகையின் முதல் நாள் மைசூர் உடையார் வம்ச மன்னர் சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கி சிறப்பு பூஜைகள் செய்து விழாவினை தொடங்கி வைப்பார்.  பின்னர் புகழ்பெற்ற அரச தர்பார் வைபோகம் நடைபெறும் அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அரச வம்சத்தினரின் தர்பார் கோலத்தினை காண்பார்கள்.

* நவராத்திரி ஒன்பது நாட்களும் சிறப்பான பூஜைகளும் கொண்டாட்டங்களும் மைசூரில் நடக்கும். மைசூர் அரண்மனை, டவுன் ஹால், கலாமந்திர், கானபாரதி, ஜகன்மோகன் அரண்மனை, சிக்க கடியாரா, குப்பண்ணா பார்க் மற்றும் சாமுண்டி மலைகள், பெங்களூரு பகுதிகளிலும் தசரா போட்டிகளும் கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

* விஜயதசமி தினத்தன்று ஜம்பூ சவாரி எனும் யானைகள் அணிவகுப்பு சிறப்பானது. அலங்கரிக்கப்பட்ட தலைமை யானையில் சாமுண்டீஸ்வரி அம்மன் 750 கிலோ எடை கொண்ட தங்க மண்டபத்தில் பவனி வருவாள். அதன்பிறகு தீப ஒளி அணிவகுப்பு எனும் மாபெரும் விளக்கொளி வைபோகம், வாணவேடிக்கை, நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை போன்றவைகளால் நகரே தேவலோகம் போல் காட்சி தரும். தசரா பொருட்காட்சி, தசரா திரைப்பட விழா, தசரா உணவு விழா, பாரம்பரிய நாட்டியங்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகள், மல்யுத்தப்போட்டி, மலர் கண்காட்சி, தசரா பட்டம் விடும் திருவிழா என எங்கு நோக்கினாலும் கேளிக்கை நிகழ்ச்சிகளால் நிரம்பி இருக்கும். ரங்கயானா எனும் புராண நாடகம் தசராவின் சிறப்பான அடையாளம்.  பத்து நாட்கள் விழாவுக்குப் பிறகு விழாவின் நிறைவாக தீப்பந்தம் ஊர்வலம் நடத்தப்படும்.

* அசோக சக்கரவர்த்தி காலத்திலேயே மஹிஷூர் சிறந்து விளங்கியதாக கி.மு 245-ம் ஆண்டின் இலக்கிய குறிப்புகள் உள்ளன. எனினும் வரலாற்று ரீதியாக 10-ம் நூற்றாண்டு ஆவணங்கள் மூலம்தான் மைசூர் பகுதி வளம் பெற்று இருந்ததாகத் தெரிய வருகிறது. 

* கி.பி 1399-ம் ஆண்டிலிருந்து யது ராஜ மன்னர்கள் எனப்படும் உடையார் வம்ச அரசர்கள் புகழ்பெற்ற விஜய நகர அரசின் பிரிதிநிதியாக இருந்து மைசூரை ஆட்சி செய்தனர். இந்த அரசின் சிறப்பான மன்னர் பெட்டடா சாமராஜ உடையார் என்பவர் மைசூர் கோட்டையை புனரமைத்து தனது  தலைமையகமாக மாற்றினார்.

விஜயதசமி

 

* 1573-ம்  ஆண்டு நான்காம் சாமராஜ உடையார் மைசூரை ஆண்டு வந்தார். இவரின் குல தெய்வமான சாமுண்டீஸ்வரியின் ஆலயத்தை தரிசித்து விட்டு திரும்பும்போது மழையும் இடியும் சூழ்ந்து கொண்டது. அப்போது மன்னரையும் அவரது ஆட்களையும் காப்பாற்றிய அன்னை சாமுண்டீஸ்வரிக்கு நன்றி தெரிவிக்க மைசூரின் எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் தெரியும் விதமாக சாமுண்டீஸ்வரி ஆலயத்தை விரிவாக  எழுப்பினார். 

* மைசூர் நகரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. 3486 அடி உயரத்தில் கொலு வீற்றிருக்கும் இந்த சாமுண்டீஸ்வரி கோயிலை 1872-ம் ஆண்டு கிருஷ்ணராஜா உடையார் புனரமைத்து விரிவாக்கினார். மகிஷனை சம்ஹரித்த காலம் அறிய முடியாத காலம் தொடங்கி இன்று வரை பல மாற்றங்களை மைசூர் கண்டு வந்தாலும் அங்கு மாறவே மாறாத ஒரே சக்தியாக தேவி சாமுண்டீஸ்வரி விளங்குகிறாள்.

* உடையார் மன்னர்களுக்கு முன்னரே இந்த விழா விஜயநகரப் பேரரசர்களால் கொண்டாடப்பட்டு வந்தது என சொல்லப்படுகிறது. பெர்சிய நாட்டின் அறிஞர் அப்துர் ரஜாக் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்தபோது  இந்த விழாவைப் பற்றி தனது இரு  நட்சத்திரக் கூட்டங்களின் எழுச்சி, இரண்டு கடல்களின் சங்கமம் என்ற நூலில் மகாநவமி எனும் தசரா கொண்டாட்டங்கள் நடந்தன என்று குறிப்பிட்டுள்ளார். எனினும் உடையார் வம்ச மன்னர்களின் ஆட்சியில் தான் தசரா பிரபல விழாவாக மாறியது. 1610-ம் ஆண்டு ராஜ உடையார் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் தசரா விழாவை கொண்டாட ஆரம்பித்தார். 

* தசரா விழாவில் மூன்றாவது கிருஷ்ணராஜ உடையார் காலத்தில்தான் புகழ்பெற்ற அரச தர்பார் நிகழ்ச்சி இடம் பெற்றது. இவரே 1872-ம் ஆண்டு சாமுண்டீஸ்வரி கோயிலை சீரமைத்து பல அணிகலன்களையும் காணிக்கையாக அளித்தார். ஜெயசாம ராஜேந்திர உடையார் காலத்தில்தான் இந்த விழா உலகப்புகழ் கொண்டதாக மாறியது. ஆங்கிலேயர் ஆட்சியில், ஆங்கிலேய ஆளுநர்களை  விருந்தினர்களாக அழைத்து விழாவை நடத்தினார். 1972-ம் ஆண்டு ஜெயசாம ராஜேந்திர உடையார் மறைந்து போனதும் இந்த விழாவை நடத்தும் உரிமை கர்நாடக அரசுக்குச் சென்றது. 

* சாமுண்டீஸ்வரி தேவி ஆடிமாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை மஹிசூரில்  தோன்றினாள். கத்தி, சக்கரம், திரிசூலம், வாள், வேல், வில் என அனைத்து ஆயுதங்களையும் தாங்கி 16 கரங்களுடன் பயங்கரியாக மாறி மகிஷனை போருக்கு அழைத்து வதம் செய்தாள். தேவர்களால் சாந்தமான அன்னையின் அருட்கோலத்தை மார்க்கண்டேய மகரிஷி 8 கரங்களுடன் வடிவமைத்து சாமுண்டீஸ்வரி மலைப்பகுதியில் அமைத்தார். அமர்ந்த கோலத்தில் இன்றும் இந்த அன்னை அருளாசி வழங்கி வருகிறாள். 

 

விஜயதசமி

 * கர்நாடக அரசு மைசூர் தசரா விழாவினை வெகு பிரம்மாண்டமாக நடத்தி வருகிறது. அரசு விழாவாக மன்னர்கள் குடும்பத்தின் முன்னிலையில் இது நடைபெறுகிறது. அரசுப்படைகளின் அணிவகுப்பு, அரசின் பெருமைகளைச் சொல்லும் அலங்கார வண்டிகளின் அணிவகுப்பு என உலகமே வியக்கும் வகையில் இது நடைபெற்று வருகிறது. 

* ஒரு லட்சம் அலங்கார விளக்குகளால் மைசூர் அரண்மனை அலங்கரிக்கப்பட்டு தசரா நாளில் ஒளிவெள்ளத்தில் மூழ்கி இருக்கும். மைசூர் நகரம் மட்டுமின்றி, சாமுண்டீஸ்வரி மலைகள், பெங்களூரு நகரம் யாவும் விழாக்கோலம் பூண்டு இருக்கும். மைசூர் தசராவின் இன்னொரு சிறப்பு அம்சமான தசரா சிறப்பு  பொருட்காட்சி மைசூர் அரண்மனையின் எதிர்ப்புறம் உள்ள  தொட்டக்கெரே மைதானத்தில் நடைபெறுகிறது. 

* தசரா பண்டிகையை கண்டுகளிக்க இங்கு எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. எனினும் வசதி கொண்ட மக்களின் விசேஷ தரிசனத்துக்காக தங்க அட்டை என்ற கட்டண வசதி அளிக்கப்படுகிறது. இந்த அட்டையை கொண்டு இரண்டு பெரியவர்கள், ஒரு குழந்தை உள்ளிட்டவர்கள் தசரா விழா நடைபெறும் 11 முக்கிய பகுதிகளுக்கு வசதியாக சென்று வரலாம். சிறப்பு தரிசனம், முன்வரிசை போன்றவைகளை இந்த கட்டணம் பெற்று தரும். 

* தசரா விழாவின் இறுதி நாளான விஜயதசமி அன்று சாமுண்டீஸ்வரியின் பிரம்மாண்ட ஊர்வலம் பண்ணிமண்டபத்தில் நிறைவு பெறுகிறது. அங்கு பஞ்சின கவாயத்து என்ற தீப ஒளி அணிவகுப்பு நடைபெறுகிறது. புராணப் புகழ்பெற்ற ஒரு வன்னி மரத்துக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது. அந்த இடத்தில் இருந்த இதே போன்ற ஒரு வன்னி மரத்தில்தான் பஞ்ச பாண்டவர்கள், தங்களது அஞ்ஞாத வாசத்தின்போது தங்கள் ஆயுதங்களை மறைத்து வைத்து இருந்தார்களாம். அவர்களுக்கு சாமுண்டீஸ்வரி தேவிதான் காட்சி தந்து அருள் செய்தாள் என்று சொல்லப்படுகிறது.

 

 

 


டிரெண்டிங் @ விகடன்