வெளியிடப்பட்ட நேரம்: 09:08 (30/09/2017)

கடைசி தொடர்பு:09:08 (30/09/2017)

வெற்றிகளை அள்ளித்தரும் விஜயதசமி! #AllAboutNavaratri

விஜயதசமி

வெற்றியைக் கொண்டாடும் விழாவே விஜயதசமி. ஒன்பது நாட்கள் அசுரசக்திகளை எதிர்த்து போர் புரிந்து சம்ஹரித்த ஆதிபராசக்தி, பத்தாவது நாளான தசமியன்று சாந்தமடைந்தாள். தேவியின் வெற்றியை தேவர்கள் கூடி இந்த தசமி நாளில் கொண்டாடி மகிழ்ந்தார்கள். கலைமகளும், திருமகளும், மலைமகளும் இணைந்த சக்தியை இந்த நாளில் வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது மக்களின் தொன்றுதொட்ட நம்பிக்கை.   குழந்தைகள் படிப்பு தொடங்கும் நிகழ்ச்சியும் ஏடு தொடங்குதல் என்ற பெயரில் நடைபெறும்.    மேலும் புதிய தொழில் தொடங்குவது, புதிய முயற்சிகளை மேற்கொள்வது எல்லாமே இந்த விஜயதசமி நாளில்  நடைபெறும். எல்லா சிவாலயங்களிலும் வன்னிமர வேட்டை எனும் பாரிவேட்டை நிகழ்வும் இரவில் நடக்கும். உலகமே கண்டு வியக்கும் மைசூரு தசரா பண்டிகையும் இந்த விஜய தசமி நன்னாளில் தான் கொண்டாடப்படுகிறது.

(விஜயதசமி நாளின் மகத்துவத்தையும், வழிபாட்டு முறைகளையும், இந்த நாளுக்குரிய அம்மனின் சிறப்பையும் பற்றி  'சொல்லின் செல்வர்'  பி.என்.பரசுராமன் பேசும் வீடியோவைப் பாருங்கள்!)  

 

ராவணனை ராமபிரான் வெற்றிகொண்ட திருநாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அஞ்ஞாத வாசம் முடித்த பாண்டவர்கள் தங்களது ஆயுதங்களைப்பெற்று அம்பிகையின் அருளைப் பெற்ற சுப நாளும் இதுவே. பண்டாசுரனை அழிக்கத் தொடங்கிய போரில், அம்பிகை அவனை சம்ஹரிக்க முடியாமல் ஈசனை எண்ணி வேண்டினாள். ஈசனும் அம்பிகையை ஆசிர்வதித்து உதவினார். அதன்படி அசுரனை எதிர்த்த அம்பிகையின் சினம் தாங்காமல் பண்டாசுரன் வன்னி மரத்தில் ஒளிந்தான். இதைக்கண்டு கொண்ட அம்பிகை  வன்னி மரத்தை வெட்டி, பண்டாசுரனை வதம் செய்தாள். இதுவே வன்னிமர வேட்டை என இன்றும் கொண்டாடப்படுகிறது. அற்புதங்கள் பல கொண்ட இந்த விஜயதசமி நன்னாளில் எல்லாம் வல்ல ஆதிபராசக்தியை வணங்கி நலங்கள் யாவும் பெறுவோம். 

மூகாம்பிகை

சகல தேவர்களிடமும் ஆயுதங்கள் பெற்று நரகாசுரனை வென்ற மகாசக்தி, நவராத்திரி இறுதி நாளில் வெற்றி பெற்றாள். தான் படைத்த உயிர்களை அச்சுறுத்தி வந்த தீய சக்திகளை தேவி கருணை கொண்டு சம்ஹரித்தாள். பத்தாவது நாளான விஜயதசமி நாளில் ஆதிபராசக்தியாக காட்சி தந்து சகலரையும் ஆசிர்வதித்தாள். தேவர்களிடம் தாம் பெற்றுக்கொண்ட ஆயுதங்களையும் திரும்ப தந்து அமைதி கொண்டாள். இதன் உண்மையான தத்துவம் என்னவென்றால், கடவுளால் படைக்கப்பட்ட நமது பஞ்ச இந்திரியங்களை அடக்கியாள வேண்டும். ஒருவேளை அது நமது கட்டுப்பாட்டில் இல்லாத போது, அவைகளால் தொல்லை நேர்ந்து காம, குரோத, லோப மாச்சரியங்களில் மூழ்கி கெட்டுப்போவோம். இதனால் பாவங்கள் உண்டாகும். பாவங்கள் நம்மை ஆண்டவனோடு அணுகாமல் செய்து விடும். ஆண்டவனை எண்ணாத மனிதர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து மாயவலைகளில் சிக்கி அல்லல் உருவார்கள்.

(கர்னாடக இசைக்கலைஞர் பவ்யா கிருஷ்ணன் பாடிய விஜயதசமி நாளின் பாடலை இங்கு கேட்கலாம்)

எனவே பஞ்ச இந்திரியங்கள் எனப்படும் கண், காது, மூக்கு, நாக்கு, தேகம் இவைகளிடம் கவனமாக இருக்க வேண்டும். ஒருவேளை அவை அலைந்து திரிந்து தொல்லை செய்தால் மனம் எனும் மஹாசக்தியின் அருளால் அவைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே விஜயதசமி நன்னாள் கூறும் தத்துவம். உடலின் இச்சைகளை அடக்கும் சக்தி மனதுக்கு உண்டு. அந்த மனதை கடவுளின் மீது திருப்பி அவனருளால் வெல்வதே சிறந்தது. மனதை ஒருமுகப்படுத்தி வாழ்வாங்கு வாழச் செய்யும் வல்லமையை நமக்கு அளிப்பவள் ஆதிபராசக்தி. அவளின் அருளால் ஒழுக்கமான வாழ்வைப் பெற்று சிறப்பான பேறுகளைப் பெறுவோம். 

 

 

 


டிரெண்டிங் @ விகடன்