Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவிலேயே நம்பர் 1... நம்ம மதுரை மீனாட்சி! #SwachhIconicPlace #MeenakshiAmman

Madurai: 

துரை மீனாட்சி அம்மன் கோயில் புராதனமான ஆன்மிகத் தலம் மட்டுமல்ல, தமிழர்களின் தொன்மையான வரலாற்றுச் சிறப்பைக் கூறும் கேந்திரமாகவும் திகழ்கிறது. மாதம்தோறும் திருவிழா காணும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் அதன் சுற்றுப்புறங்களும் மிகவும் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மத்திய அரசின் தூய்மை பாரத இயக்க திட்டத்தின்கீழ் தூய்மையான புனிதத் தலங்களை உருவாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி செயல்பட்டு சுத்தம் மற்றும் சுகாதாரத்தில் முதலிடம் பெறும் கோயிலுக்கு அக்டோபர் 2-ம் தேதி பரிசு வழங்குவதென்றும் முடிவு செய்யப்பட்டது. மதுரை, திருப்பதி, பூரி ஜகந்நாதர் கோயில் போன்ற பத்து கோயில்கள் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பதற்காக மதுரை மாநகராட்சியுடன் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் இணைந்து ரூ.11.65 கோடி செலவில் தூய்மை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டது.

மீனாட்சியம்மன் கோயிலும், கோயிலின் சுற்றுப்புறங்களும் தொடர்ந்து சுத்தம் செய்யப்பட்டு சுகாதார மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குப்பைகளைத் தரம் பிரித்து அகற்றுதல், மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்துப் போட தனித்தனி நிறங்களில் குப்பைத் தொட்டிகள் அமைத்தது, மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி பிளாஸ்டிக் பைகளைத் தடை செய்தது, துப்புரவுப் பணியாளர்களை நியமித்து நாள் முழுவதும் சுத்தம் செய்தது, மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவது, மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றிலும் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கியது என்று பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகளின் அடிப்படையில் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில், தூய்மை மற்றும் சுகாதாரத்தில் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கான விருதை அக்டோபர் 2-ம் தேதி (இன்று) காந்தி ஜயந்தி விழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மற்றும் மதுரை கார்ப்பரேஷன் கமிஷனர் அனீஷ் சேகர் ஆகியோர் குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகத்திடம் இருந்து பெற உள்ளதாக மதுரை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் பற்றிய யுனெஸ்கோ அறிக்கையினால் ஏற்பட்ட சர்ச்சைகளைக்கூட மதுரை மக்கள் மறந்துவிட்டனர்.

நடராஜன்மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பெருமை குறித்து, மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் நடராஜனிடம் பேசினோம். “கடந்த வருடம் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தின்கீழ் பத்து கோயில்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றுள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் ஒன்று. இந்த பத்து கோயில்களில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் மிகவும் தூய்மையான கோயில் என்று தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. நீதிமன்றங்களின் அறிவுறுத்தலின்படியும், மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் கார்ப்பரேஷன் உதவியோடு பல தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மதுரை மக்களும், கல்லூரி மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் பல வகைகளிலும் உதவி செய்தனர். ஒரு வருட உழைப்பு மற்றும் முயற்சிகளுக்கு இப்போது விருது கிடைத்திருக்கிறது. இந்தச் செய்தி எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது'' என்றார்.

சுற்றுலாத்துறை அலுவலர் பாலமுருகனிடம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குக் கிடைத்திருக்கும் சிறப்பு பற்றி கருத்து கேட்டோம்.பாலமுருகன்

“மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு விருது கிடைத்திருப்பதால், மதுரைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மதுரை மக்கள் மீனாட்சியம்மன் கோயிலையும், சுற்றியுள்ள பகுதிகளையும் தூய்மையாக வைத்திருப்பதைப் பார்த்து, வருகை தரும் வெளியூர் மக்களும் அப்படியே தூய்மையைக் கடைப்பிடிக்கின்றனர். இந்த விருது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு இந்த விருது கிடைத்திருப்பதில் மதுரை மக்களுக்கும் பங்கு உள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியரும், மதுரை மாநகராட்சி கமிஷனரும் மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கது'' என்றார்.

அபர்ணாமீனாட்சியம்மன் கோயில் கார் பார்க்கிங் பகுதியில் வண்ண வண்ணக் குடைகள் மூலம் நிழல் ஏற்படுத்தித் தந்து சேவை செய்த சமூக ஆர்வலர் அபர்ணாவிடம், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு விருது கிடைத்திருப்பது பற்றி கேட்டபோது, “மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தூய்மைக்கான விருது கிடைத்திருப்பது மிகவும் பெருமை அளிக்கிறது. இந்த விருதின் பின்னணியில் பலருடைய உழைப்பு அடங்கி இருக்கிறது. கோயிலைச் சுற்றிலும் பல இடங்களில் சிறுநீர் கழிப்பது, துர்நாற்றம் வீசும் பொருள்களைக் கொட்டுவது என்று பல சுகாதாரக் கேடான விஷயங்களைச் செய்தனர். சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து அசுத்தம் செய்யப்பட்ட பல இடங்களில் புராதனமான ஓவியங்கள் வரைந்து வைத்துவிட்டனர். அதற்குப் பின் அசுத்தம் செய்வது நின்றுவிட்டது. இந்த விருது அனைவருக்கும் பெருமை தரும் விருதாகும்” என்றார்.
சோலை கண்ணன்

ஆனால், இந்த விருது பற்றி இந்து முன்னணியின் மதுரை மாவட்ட நிர்வாகி சோலை கண்ணன் கூறும் கருத்து எதிர்மறையாக உள்ளது. அவரிடம் பேசியபோது, “இந்தத் தூய்மை விருது எந்த அடிப்படையில் கிடைத்தது என்று தெரியவில்லை. மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றிலும் கழிப்பறை, குடிநீர் போன்ற வசதிகள் போதுமான அளவுக்கு இல்லை. கோயிலைச் சுற்றிலும் இன்னும் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. சுத்தம் என்பது ஓரளவுக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இந்திய அளவில் தூய்மையான கோயில் என்று சொல்வதை ஏற்கமுடியாது” என்றார்.

சிக்கந்தர் மதுரையைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவரிடம் பேசினோம். “மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு இந்த விருது கிடைத்திருப்பது பெருமைக்குரிய விஷயம். இந்த வெற்றிக்கு தற்போதைய நெல்லை மாவட்ட ஆட்சியராக இருப்பவரும், முன்பு மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்தவருமான சந்தீப் நந்தூரிக்கும் பங்கு உண்டு. பல விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, மதுரை மக்களின் மனதில் சுத்தம் சுகாதாரம் போன்றவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதில் பல கட்டுப்பாடுகளை விதித்து, செயல்படுத்தவும் செய்தார். மதுரை மக்களும் புரிந்துகொண்டு செயல்பட்டனர். ஆனாலும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு இன்னும் பல வசதிகள் தேவைப்படுவது என்னவோ உண்மைதான். போதிய அளவு கழிப்பறை வசதி, குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவதுடன், குப்பைகளைப் போடுவதற்காக போதுமான அளவு குப்பைத் தொட்டிகளையும் வைக்கவேண்டும்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement