பதிவுக்கு ஆன்லைன், காணிக்கைக்கு ஆப்ஸ்... தொழில்நுட்பத்தில் கலக்கும் திருப்பதி தேவஸ்தானம்! #DataStory | Thirumala Thirupathi Devasthanam excels in technology

வெளியிடப்பட்ட நேரம்: 16:17 (04/10/2017)

கடைசி தொடர்பு:09:59 (05/10/2017)

பதிவுக்கு ஆன்லைன், காணிக்கைக்கு ஆப்ஸ்... தொழில்நுட்பத்தில் கலக்கும் திருப்பதி தேவஸ்தானம்! #DataStory

வாடிகன் நகரில் அமைந்திருக்கும் செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தை உலகிலேயே பணக்கார ஆலயம் என்று சொல்வார்கள். அதற்கு அடுத்தபடியாக உலகிலேயே பணக்காரக் கோயிலென்றால், திருப்பதியைத்தான் நம்மால் குறிப்பிட முடியும்.

திருப்பதிக்குப் போய் வந்தவர்களுக்கு 'சுவாமி தரிசனம்' ஒரு பரவச அனுபவம் என்றால், இன்னொன்று, அங்கிருக்கும் ஒழுங்கு. நேர்த்தியான நிர்வாகம், சுத்தம், தடையற்ற மின்சாரம், பராமரிப்பு எல்லாமே நம்மைக் கவர்ந்திழுக்கும். 

திருமலை திருப்பதிக்கு ஒருநாளைக்கு 60,000 முதல் 80,000 பக்தர்களுக்குமேல் வருகிறார்கள். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்களில் இந்த எண்ணிக்கை 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அதிகரிக்கும். இவர்களுக்கு, உணவு, குடிநீர் , போக்குவரத்து, தங்கும் அறைகள், லாக்கர் வசதிகள், முடி இறக்குவதற்கான இடங்கள் என அனைத்து வசதிகளும் தங்குதடையின்றி வழங்கப்படுகின்றன. பெரும்பாலான சேவைகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.

திருப்பதி

மிகத் திட்டமிட்ட ஏற்பாடுகள், நுட்பமான நிர்வாக முறை என தினந்தோறும் பிரமாண்டமாகக் கூடும் பக்தர்களுக்கு எவ்வித குழப்பங்களும் ஏற்படாமல் நேர்த்தியாக வசதிகளைச் செய்திருக்கிறார்கள் திருமலையில். 

கூட்டத்தைச் சமாளிக்க மூன்றுவிதமான தரிசனமுறைகளை வைத்துள்ளனர். 'சர்வ தரிசனம்', 'திவ்ய தரிசனம்' (கீழ்திருப்பதியிலிருந்து நடந்தே மலையேறிச் சென்று தரிசிப்பது), ஸ்பெஷல் தரிசனம். எல்லாமே பயோமெட்ரிக் முறையிலானவை. மிகவும் வெளிப்படையானவை.

உதாரணமாக, ஒருவர் திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய திடீரென திட்டமிட்டால், 'சிறப்பு தரிசனம்' செய்ய இணையதளத்தில் புக் செய்யலாம். 300 ரூபாய் டிக்கெட்.

தகவல்களை அறிந்துகொள்ள, ரயில்நிலையம், விமான நிலையம், ஆர்.டி.சி. பேருந்து நிலையம், அலிபிரி பேருந்து நிலையம், சத்திரங்கள், அலிபிரி டோல்கேட், மற்றும் ரேணிகுண்டா ரயில்நிலையத்தில் உள்ள தகவல் மையங்களை அணுகலாம். 

திருப்பதிக்குச் செல்ல ரயில் மற்றும் பஸ் டிக்கெட்டுகள், திருமலையில் தங்கும் அறை வசதிகள் மற்றும் தரிசனம் மற்றும் சேவா டிக்கெட்டுகளுக்கு, 120 நாள்களுக்கு முன்பாக, ஆன்லைனிலேயே பதிவு செய்துகொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இவைதவிர தேவஸ்தான அலுவலகங்களிலும் முன்பதிவு செய்துகொள்ளலாம். தமிழகத்தின் முக்கிய நகரங்களில் திருமலை தேவஸ்தான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. 

திருமலை

படங்கள் உதவி: திருமலை திருப்பதி தேவஸ்தானம்

கோயில் மற்றும் உங்கள் வழிபாடு தொடர்பான தகவல்களுக்குத் திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலகம் ஏதேனும் ஒன்றைத் தொடர்புகொள்ளலாம் அல்லது  www.tirumala.org இணையதளத்தின் வழியாக அறியலாம்.

திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு ஒரு நாளில் காலை 3 மணிக்கு சுப்ரபாத சேவையில் தொடங்கி, தோமாலை சேவை, கொலுவு (தர்பார்), சஹஸ்ரநாமார்ச்சனை, நித்திய கல்யாணோத்ஸவம், டோலோத்ஸவம், ஆர்ஜித பிரம்மோத்ஸம், ஆர்ஜித வசந்தோத்ஸவம், சஹஸ்ர தீபாலங்கார சேவை,  இரவு 11.00 மணிக்கு ஏகாந்த சேவை வரை நடைபெறுகின்றன. இவை அனைத்துக்கும் கட்டணம் உண்டு.  

இந்தச் சேவைகளில் பங்கேற்கவும் ஆன்லைனில் புக் செய்யலாம். ஒருமுறை இந்த சேவைகளுக்கு புக் செய்தால், மறுபடியும் அவருக்கு 6 மாதங்கள் கழித்துதான் வாய்ப்பு வழங்கப்படும். இப்படி எல்லாவற்றிலுமே தொழில்நுட்பத்தைத் திறம்படப் பயன்படுத்துகிறது திருமலை நிர்வாகம்.

'Govinda tirumala tirupati devasthanams'  என்னும் மொஃபைல் ஆப் ஒன்றை திருமலை திருப்பதி தேவஸ்தானம் உருவாக்கி உள்ளது. இதன் உதவியுடன் சிறப்பு தரிசனம் செய்வதற்கு முன்பதிவு செய்யலாம். திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு உண்டியல் காணிக்கை மற்றும் நன்கொடையையும் இந்த ஆப் மூலம் வழங்க முடியும். கூகுள் பிளே ஸ்டோர் மூலம் இந்த ஆப்பை டவுன்லோடு செய்யலாம்.  

திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் தகவல் தொடர்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி ஆர்ஜித சேவைக் கட்டணம், தங்கும் வசதி, நன்கொடை திட்டங்கள், முன்பதிவு விவரம் ஆகியவற்றை இந்த மையத்தைத் தொடர்புகொண்டு அறியலாம். இந்த மையம் 24 மணி நேரமும் இயங்கக்கூடியது. தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:  0877- 2233333, 0877-2277777

பிரமோற்சவ ஏற்பாடுகள் விவரம்

தொண்டைமான் சக்கரவர்த்தி திருப்பதி ஏழுமலையானுக்கு ஆலயம் அமைத்தார். அவரைத் தொடர்ந்து, திருவரங்கத்திலிருந்து திருப்பதி வந்து தரிசனம் செய்த ராமானுஜர் வைகானஸ ஆகம விதிப்படி கோயிலில் நடக்க வேண்டிய பூஜைகள், விழாக்கள் ஆகியவற்றை நிர்மாணித்து, அவை தங்கு தடையின்றி நடக்கவும் ஏற்பாடு செய்தார். மூன்று முறை திருமலைக்கு வந்து தங்கியிருந்து பல விஷயங்களைச் செய்தார். மூன்றாவது முறை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பெருமாளை பிரதிஷ்டை செய்ததோடு, கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க சடகோப யதி என்னும் பெரிய ஜீயரையும் நியமித்தார். அது இன்றளவும் தொடர்ந்து நடைபெறுகிறது.  

சோழ அரசர்கள், சாளுக்கிய அரசர்கள் எனப் பல நாட்டவரும் வணங்கிடும் தெய்வமாக வேங்கடவன் விளங்கினார். இவர்களுடைய திருப்பணிகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல், விஜய நகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் கோயிலுக்கு ஏராளமான நகைகள், ஆபரணங்கள், நிலங்கள், சொத்துகள் ஆகியவற்றை வழங்கினார். அவை இன்றளவும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஶ்ரீ மணவாள மாமுனிகள் சின்ன ஜீயர் மடத்தை நிறுவி நிர்வாகம் மேம்படச் செய்தார். இவரது சீடர் பிரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமி என்பவர்தான் சுப்ரபாதத்தை இயற்றினார். அது இன்றும் திருமலையில் முறைப்படி பாடப்படுகிறது. அன்னமய்யா, தரிகொண்ட வெங்கமாம்பாள், ஹாதிராம் பாவாஜி ஆகியோர் ஒவ்வொரு காலகட்டத்தில் திருமலையின் மேம்பாட்டில் அக்கறை கொண்டு ஏராளமான பணிகளை ஆற்றி வந்தனர்.

முன்னாள் முதல்வர் என்.டி.ஆர் உருவாக்கித்தந்த வசதிகள்!

ஆந்திர முதல்வராக என்.டி.ராமராவ் பதவியேற்றதும் திருமலையில் தங்கும் இடம், முடிக்காணிக்கை, உணவு, தரிசனம் என எல்லாவற்றையும் இலவசமாக்கினார். திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பத்து, இருபது மடங்குகளாக வளரத் தொடங்கியது. திருமலையின் நிர்வாகம் ஒரு தனி அரசாங்கம்போல் மிகுந்த கவனத்துடன் நடைபெறத் தொடங்கியது. இத்தனை ஆயிரம் மக்கள் வருவதைத் தொடர்ந்து அதற்கேற்ப குடிநீர், உணவு, சுகாதாரம் ஆகியவற்றைப் பெரிய அளவில் செய்ய வேண்டியதாயிற்று.

'' நிர்வாகத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் திருமலையில் சவால் மிகுந்த நாள்கள்தான். அதுவும் விடுமுறை நாள்கள் என்றால் கேட்கவே வேண்டாம். ஆனாலும் எல்லாமே அங்கு சிஸ்டமேட்டிக்காக நடப்பதற்கு காரணம். சிறந்த திட்டமிடல்தான். லட்டு தயாரிப்பு விநியோகம், முடிக்காணிக்கை வரவு செலவு, அறைகள் பராமரிப்பு மற்றும் விஸ்தரிப்பு, உணவு மற்றும் குடி நீர் வழங்கல், கழிவுநீர் வெளியேற்றம், சுகாதாரம், மின் விநியோகம் மற்றும் பாதுகாப்பு என எல்லாமே தனித்தனித துறைகளாகப் பிரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டு பராமரிக்கப்படும். இவையெல்லாமே மிகவும் வெளிப்படையானவை. ஆலய நிர்வாகம் மற்றும் பராமரிப்புப் பணிகள், 15 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் ஶ்ரீ வாரி தொண்டு செய்யும் சேவகர்கள் மூலமே நடக்கிறது 

இன்னொரு சிறப்பம்சம், குண்டூசி முதல் பெரிய பெரிய கிரேன்கள் வரை எல்லா தொழில்நுட்ப சாதனங்களும், உடனுக்குடன்  வாங்கிப் பயன்படுத்துவார்கள். மேலும் டெக்னாலஜியில் லேட்டஸ்ட்டாக ஒன்று வருகிறதென்றால் அதை முதலில் வாங்கி அப்டேட் செய்து பார்க்கும் இடம் திருமலைதான். தினமும் காலையில் உதவி நிர்வாக அதிகாரி சீனிவாசலு தலைமையில் ஒரு கூட்டம் நடைபெறும் அப்போதே அன்றைக்கு உரிய பணிகள் அவரவர்களுக்குப் பிரித்துக்கொடுக்கப்பட்டு, முடுக்கிவிடப்படும்..."  என்கிறார் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முன்னாள் உறுப்பினர் கண்ணையா.

கண்ணையாமேலும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் பற்றியும் கூறுகிறார் கண்ணையா.

"அறங்காவலர் குழு  உதவி நிர்வாக அதிகாரிக்கு ஆலோசனை சொல்லும். அவர் நிர்வாக அதிகாரியிடம் கூற  உடனுக்கு உடன்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதுதவிர, மூன்று நாள்களுக்கு ஒருமுறை நிர்வாக அதிகாரியின் தலைமையில் தனியாக ஒரு கூட்டம் நடைபெறும். அதில் அவ்வப்போதைய தேவைகள், பக்தர்களின் சிரமத்தைக் குறைப்பது தொடர்பான விவாதங்கள் நடக்கும். இதனால். புரோக்கர்களின் செயல்பாடுகள் அடியோடு ஒழிக்கப்பட்டுவிட்டன. இத்தனை வெளிப்படையாக இருப்பதால்தான் 365 நாள்களில் 450 விழாக்களை எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல் நடத்த முடிகின்றது" என்கிறார் அவர். .

தங்க வாயிலை ஒட்டி உள்ளே இருக்கும் அறையை ‘ஸ்நாபன மண்டபம்’ என்பார்கள். இங்கே திருமலையானுக்கு பிரதி தினமும் ஆஸ்தானம் நடைபெறும். ஸ்ரீநிவாச மூர்த்தியை மங்கள வாத்தியம் முழங்க, ஸ்நாபன மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் கொலுவிருக்க வைப்பார்கள்.  

ஆஸ்தான பண்டிதர் ஸ்ரீநிவாச பிரபுவுக்கு பஞ்சாங்கத்தை வாசித்து, அன்றைய திதி, வார, நட்சத்திர, யோக, கரணங்களைச் சொல்வார்கள். அன்றைய உத்ஸவ விசேஷங்களையும் ஸ்வாமிக்குத் தெரிவிப்பார்கள்.

 நித்திய அன்னப்பிரசாத திட்டத்துக்கு சிறந்த அளவில் நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்களின் பெயர்களை வாசிப்பார்கள். 

பொக்கிஷதாரர் (கணக்கு) குமாஸ்தா முந்தைய நாள் வருவாய் விவரங்களை, ஆர்ஜித சேவையின் மூலம், பிரசாதங்களின் விற்பனை மூலம், உண்டியல் மூலம், காணிக்கையாக வந்த தங்கம், வெள்ளி, செம்பு மற்றும் இதர உலோகப் பாத்திரங்கள், நகைகள் போன்றவற்றின் மூலம் வந்த நிகர வருவாயை பைசா வரை கணக்கிட்டு ஸ்ரீநிவாச மூர்த்திக்கு விவரமாகக் கூறி பக்தி பிரபத்தியோடு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி விடைபெறுவார்.

 

 

சுவாமி புஷ்கரணி

இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கே வகுளாதேவியின் (கிருஷ்ணாவதாரத்தில் வரும் யசோதாதான் அவர்) மேற்பார்வையிலேயே பெருமாளுக்குரிய நைவேத்தியங்கள் தயாராவதாக ஐதீகம். இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம் கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று, திருப்பதி என்றாலே லட்டு, லட்டு என்றாலே திருப்பதி என்றாகி விட்டது.

பெருமாள் அணிந்துகொள்ளும் உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த தேவஸ்தான அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு 'மேல்சாத்து வஸ்திரம்' என்று பெயர். வெள்ளிக்கிழமை மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த சில வேளைகளில் ஆண்டுக் கணக்கில்கூட காத்திருப்பார்கள்.

பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

அபிஷேகத்துக்காக ஸ்பெயினிலிருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சீனாவிலிருந்து புனுகு,  பிரான்ஸிலிருந்து வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும். ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமிலிருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள், திருப்பதிக்கு விமானத்தில் வருகின்றன.

பக்தர்கள்

ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோயிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. 

திருமலையில் நடை பெறும் விழாக்கள்

திருமலையில் வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, ஜன்மாஷ்டமி போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் ரதசப்தமி (மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா மிகவும் விசேஷமானது. இந்த சமயத்தில் 7 வாகனங்களில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு நான்கு மாடவீதிகளில் தேரில் எடுத்துச் செல்லப்படுகிறார். பக்தர்களுக்குக் காணக் கிடைக்காத காட்சியாகும்

எல்லாவற்றையும் விட ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா மிகவும் முக்கியமான விழாவாகக் கருதப்படுகின்றது.

பிரம்மனே இங்கு வந்து முன்னின்று இந்த உற்சவத்தை நடத்துவதாக ஐதீகம். இந்த உற்சவத்தின்போது திருமலை வண்ண வண்ண விளக்குகளின் அலங்காரத்துடன் சுவாமி சேவை சாதிக்கிறார். இந்த நேரத்தில் ஒரு வாரத்துக்குள் 6 லட்சம் முதல் 10 லட்சம் பக்தர்கள் திருமலைக்கு வந்து குவிகின்றனர். இங்கு புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோத்ஸவம் காணக்கிடைப்பதரிது. இந்த விழாவில் கலந்துகொண்டு வேங்கடவனைச் சேவிப்பவர்களின் சகல பாவங்களும் தொலைகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்