வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (04/10/2017)

கடைசி தொடர்பு:19:20 (04/10/2017)

அடுத்தவரின் பணத்தை எடுத்து ஆண்டவனுக்குக் கொடுக்கலாமா? - ராமதாசர் கதை சொல்லும் நீதி!

ளிமையான அடியவரின் வேண்டுதலுக்கு மனமிரங்கி ஆண்டவனே இறங்கி வந்து ஆட்கொண்ட பல கதைகளை நாம் கேட்டு இருக்கிறோம். வந்தியின் வேண்டுதலுக்கு ஈசன் மண் சுமந்தான். மாணிக்கவாசகரை சிறையிலிருந்து மீட்க ஈசன் நரியைப் பரியாக்கினான். இப்படி சைவம் பல திருவிளையாடல்களைச் சொல்கிறது. அதைப்போலவே வைணவமும் திருமால் ஆட்கொண்ட பல புண்ணிய அடியார்களை பெருமையோடு சொல்லி வருகிறது. அதில் முக்கியமான ராமபக்தர் ஒருவரைத்தான் இங்கு காணவிருக்கிறோம். பத்ராசலம் ராமதாசர்..ராம நாமத்தின் வழியே பெரும் பக்தி மார்க்கத்தை உருவாக்கிய மகான். எத்தனை துன்பங்கள் வந்தபோதும் ராம பக்தியை விடவே விடாத மெய்யான அடியவர் ராமதாசர்.

ராமதாசர்

1603-ம் ஆண்டு ஆந்திராவின் கொல்ல கொண்ட பல்லம் (தற்போதைய கோல்கொண்டா பகுதி) என்ற இடத்தில் லிங்கண்ணா, காமாம்பாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார் கோபண்ணா என்ற இயற்பெயரைக்கொண்ட ராமதாசர். சிறுவயது முதலே ராமாயணக் கதைகளில் ஆவல் கொண்ட கோபண்ணா, ராமபிரானின் மீது பக்தி கொண்டு வளர்ந்தார். இவரது ஓயாத ராமபக்தி நாளுக்கு நாள் வளர்ந்தது. அப்போது தான் கபீர்தாசர் என்ற புகழ்பெற்ற ஞானி ராமதாசர் கனவில் வந்து ராம நாமத்தை உபதேசம் செய்தார். ராமநாமத்தின் பெருமைகளை சொல்லி ராமனின் திருவடிகளே மோட்சத்தை கொடுக்கும் என்று வலியுறுத்தினார். அன்று முதல் ராமநாமத்தை ஜபிக்கும் வேலையை மட்டுமே செய்து வந்தார் கோபண்ணா. இவரது பக்தியை மெச்சி கபீர்தாசர் 'ராமதாசர்' என்று திருநாமம் இட்டார். பத்ராசலம் பகுதியில் வாழ்ந்ததால் 'பத்ராசலம் ராமதாசர்' என்று புகழப்பட்டார். உறவினர் வேண்டுகோளுக்காக கமலம்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ராமனின் திருத்தொண்டராக, இமைப்பொழுதும் அவரது நாமத்தை மறக்காமல் ஓதி வந்த ராமதாசரை சோதிக்க திருவுளம் கொண்டார் ஸ்ரீராமபிரான். உளிபட்டால்தானே கல் சிலையாகும்?!. சோதனைகள் வந்தால்தானே தனது பக்தனின் பெருமை உலகம் அறிய வரும் என்று ராமச்சந்திரப் பிரபு எண்ணினார். 

ராம நாமம்

ஒரு ராமநவமி அன்று ராமதாஸரின் வீட்டில் ராம நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடைபெற்றது. ராமநாமத்தில் லயித்திருந்த ராமதாசரும் அவருடைய மனைவி கமலம்மாவும் தங்கள் பிள்ளையை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். குழந்தை தவழ்ந்து கொண்டே சென்று, கொதிக்கும் சோற்று பாத்திரத்தில் விழுந்து விட்டான். விஷயம் அறிந்த தம்பதிகள் கலங்கினார்கள். ராமபிரானை எண்ணி கதறினார்கள். என்ன ஆச்சரியம்! வாடிவதங்கி இறந்து போன பிள்ளை புதுமலரைப்போல எழுந்தான். எல்லாம் ராமரின் கருணை என்று ராமதாசர் மகிழ்ந்தார். அன்றிலிருந்து முழுக்க முழுக்க ராம தாசராகவே மாறி தனது சொத்துக்கள் முழுவதையும் ராம பக்தர்களுக்கு அள்ளி அள்ளி வழங்கினார். காலம் செல்ல செல்லச் செல்வம் குறைந்து வறியவரானார் ராமதாசர். அப்போதும் ராம பக்தர்களை உபசரிப்பதில் தவறவே இல்லை. வறுமை வாட்டிய நிலையில் ராமதாசரை, அவரது  தாய்மாமன்கள் வற்புறுத்தி ஹைதராபாத் மன்னர் தானி ஷாவிடம் தாசில்தாராக பணிக்கு சேர்த்தார்கள். ஆட்சிக்கு உட்பட்ட இடங்களில் வரி வசூலித்து மன்னருக்கு அனுப்புவதே ராமதாஸரின் பணியாக இருந்தது. கொஞ்சகாலம் எல்லாமே நல்லபடியாக நடந்து வந்தது. பத்ராசலத்தில் இருந்த ராமர் ஆலயம் மிகவும் பழுதடைந்து இருந்தது. அதைக்கண்ட ராமதாசர் கவலை கொண்டார். அதை சீர் படுத்த  மன்னரின் வரிப்பணத்தை எடுத்து செலவு செய்ய ஆரம்பித்தார். ஆறு லட்சம் வராகன் பணத்தை செலவு செய்து ராமபிரானின் கோயிலை அழகாக புதுப்பித்தார். அரண்மனைக்கு பத்ராசலம் பகுதிக்கான வரிப்பணம் வந்து சேரவில்லை என்பதை அறிந்த மன்னர் தானி ஷா கோபம் கொண்டார். ராமர் கோயிலை கட்ட அந்த பணம் செலவானது என்று அறிந்ததும் மேலும் சினம் கொண்டு ராமதாசரை கைது செய்தார். 

விசாரணைக்குப் பிறகு 12 ஆண்டுகள் சிறைவாசம் விதித்து ராமதாசரை சிறையில் அடைத்தார். சிறையில் சொல்லொணாத கொடுமையிலும் ராமதாசர் ராமநாமத்தை சொல்லி வந்தார்.  12 ஆண்டுகளாக வதைபட்டு, ராமனை எண்ணி பல உருக வைக்கும் பாடல்களை பாடினார். நீயே இனி காக்க வேண்டும் என்று கதறி சரண் அடைந்தார். 12 ஆண்டுகள் முடியும் தறுவாயில் ராமதாசரை காக்க ராமபிரான் திருவுளம் கொண்டார். மன்னர் தானி ஷா முன்னிலையில் ராமபிரானும், அவரது தம்பி லட்சுமணரும் வியாபாரிகளைப்போல வேடமிட்டு வந்தனர். ராமதாசர் கட்ட வேண்டிய ஆறு லட்சம் வராகன் பொன்னையும் மன்னரிடம் கட்டி விட்டு அதற்கான ரசீது சீட்டையும் பெற்றுக்கொண்டனர். பணம் கட்டிய ரசீதை ராமதாசர் அருகில் வைத்து விட்டு சென்றனர்.

ஹனுமான்

மன்னர் தானி ஷா பணம் அளித்தது ராம, லட்சுமணர்கள் என்று அறிந்ததும் மகிழ்ந்தார். உடனடியாக ராமதாசரை விடுவித்தார். மன்னருக்கு காட்சி தந்த ராமபிரான், தனக்கு காட்சி தரவில்லையே என்று ராமதாசர் மனமுருகி பாடலைப்பாட, அவருக்கு ஸ்ரீராமர் காட்சி தந்து, பக்தனே ஆனாலும் மக்கள் பணத்தினை எடுத்து மன்னருக்கு அறிவிக்காமல் தனக்கு கோயில் காட்டியது தவறு என்றும், அதனாலேயே சிறை வாசம் அனுபவிக்க நேர்ந்தது என்றும் கூறினார். ராமரின் திருக்காட்சியை தரிசித்த நாள் முதல் ராமதாசர் ஊர் ஊராக சென்று ராமநாமத்தை பாடி மக்களை பக்தி வழிக்கு திருப்பினார். மக்கள் அவரை அனுமனின் அவதாரம் என்று எண்ணி வணங்கினர். பதினேழாம் நூற்றாண்டில் ராமநாமத்தை பரப்பி மாபெரும் சமயப்புரட்சியை உண்டாக்கியவர் பத்ராசலம் ராமதாசர். இன்றும் அவரது நெஞ்சை உருக்கும் பல பாடல்கள் கர்நாடக சங்கீத கச்சேரிகளில் பாடப்பட்டு வருகிறது. ராமநாமத்தை ஜபித்தபடியே வைகுந்தம் சென்ற இந்த வைணவப்பெரியவர் பக்திக்கு எடுத்துக்காட்டாக என்றும் திகழ்பவர்.

 

 

 


டிரெண்டிங் @ விகடன்