திருமணத்தடை ஏற்படுத்தும் நாகதோஷம்... அதற்கு உரிய பரிகாரங்கள்!- விளக்குகிறார் ஜோதிட நிபுணர் கே.பி.வித்யாதரன்

''திருமணத்துக்கு வரன் தேடிக்கிட்டிருக்கிற பெற்றோரைக் கேட்டால், அவங்களே சொல்லிடுவாங்க, 'நாகதோஷத்தாலதாங்க திருமணம் தடையா இருக்குன்னு. அதென்ன நாகதோஷம்... தீர்க்க முடியாத தோஷமா அது... அதுக்கும் பரிகாரங்கள் இருக்கு..." நம்பிக்கையோடு பேசுகிறார் ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரன். 

நாகதோஷம்

 

"நாகதோஷத்துக்கு உரிய கிரகங்கள் ராகு, கேது. ஜோதிட சாஸ்திரத்துல தொடக்கத்துல ஏழு கிரகங்கள்தான் இருந்திருக்கு. பிற்காலத்துலதான் ராகுவும் கேதுவும் சேர்க்கப்பட்டிருக்கு. சில ஜோதிட நூல்கள், சனியைப் போல் ராகு, செவ்வாயைப் போல் கேது எனக் கூறுகின்றன.  

சனி கிரகம், நீள் வட்டப் பாதையில் சுற்றுகிறது. அப்படிச் சுற்றும்போது ஏற்படக்கூடிய புழுதிப்புயலை ராகு என்றும், செவ்வாய் கிரகம் சுற்றும்போது அந்தக் கிரகத்தைச் சுற்றி ஏற்படும் புழுதிப்புயலை கேது என்றும் கூறுகிறார்கள். இவற்றை சாயா கிரகங்கள், நிழல் கிரகங்கள் என்றும் சொல்லுவாங்க. இந்த நிழல் கிரகங்கள், நிஜ கிரகங்களான சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், செவ்வாய், புதன் மற்றும் சனி ஆகிய கிரகங்களின்  தன்மையை வேகத்தைக் குறைக்கச் செய்கின்றன. அதனால்தான் இந்த ராகு, கேது தோஷம் பெரிய அளவுல பேசப்படுது. 

ராகு என்ன மாதிரியான கிரகம்னு பார்த்தீங்கனா நம்ம பாட்டன், பாட்டியோட கிரகமாகும். நம்முடைய பாட்டன், பாட்டி ஏதாவது தவறுகள், பாவங்கள் செய்திருந்தால் அந்த தோஷமானது ஜீன் வழியாக நமக்குத் தொடர்கிறது. 

பூஜைகள்

கணவன், மனைவியின் தாம்பத்திய வாழ்க்கையில் இயற்கையாக கரு கலைந்துபோவது பாவம் அல்ல. ஆனால், அடிக்கடி கருக்கலைப்பு செய்வது, 'இதுவா, அதுவா'னு பார்த்துவிட்டு கருக்கலைப்புச் செய்வது பாவமாகும். இப்படிச் செய்பவர்களுக்கு அடுத்து வரும் வாரிசுக்கு ராகு, கேது தோஷம் ஏற்படுகிறது. ராகு,பெண்கள் ஆதிக்கம் உள்ள கிரகம். பெண்களுக்குத் துரோகம் செய்தாலும் தோஷம் ஏற்படும். 'கல்யாணம் செய்துகொள்கிறேன்' என காதலிச்சிட்டு, பிறகு அவர்களைக் கைவிவிடுவது, கொஞ்ச நாள்  சேர்ந்து வாழ்ந்துட்டு, பிறகு விலகுவது இதெல்லாம் பாவமாகும். இவர்களின் வாரிசுகளுக்கும் ராகுவால் தோஷம் ஏற்படும்.

கே.பி.வித்யாதரன்கேதுங்கிறது ஆன்மிக கிரகம். ஞானக்காரகன் என்றே கேதுவைச் சொல்வார்கள். குருவை நிந்தனை செய்யும்போது, நமக்கு ஆசானாக இருப்பவர்களுக்குக் கெடுதல் செய்யும்போது, வழிபாட்டுத் தளங்களைச் சிதைக்கும்போது, வழிபாட்டுக்கு உரியவர்களை வசைபாடும்போது அவர்களின் சந்ததிகளுக்கு கேது தோஷம் ஏற்படுகிறது. 

புதையல் பொருள்கள், அடுத்தவர்களின் பொருள்கள், கோயில் சொத்துகள் இவற்றையெல்லாம் எடுத்துக்கொள்ளும்போது, பிறருக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஆலய பொருள்களை கவர்ந்துகொள்ளும்போது ராகு- கேது தோஷம் ஏற்படுகிறது. அடுத்தவர்களை ஏமாற்றினாலும், நம்பிக்கைத் துரோகம் செய்தாலும் இந்த ராகு, கேது தோஷம் ஏற்படுகிறது. 

 

தீண்டாத பாம்புகளை அடித்துக்கொன்றாலும், இந்த தோஷம் ஏற்படும். பாம்புப் புற்றை எக்காரணம் கொண்டும் சிதைக்கக் கூடாது. பாம்புப் புற்றில் பல ஆயிரம் ஜீவராசிகள் வாழும் அவற்றை பாழ்படுத்தக்கூடாது. பாம்புப் புற்று ஒரு தெய்வீக அடையாளம். 

முதியவர்கள், கைவிடப்பட்டவர்கள்,  ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம், பொருளுதவி செய்வதால்,  இந்த தோஷத்தின் வேகத்தைக் குறைக்கலாம். யாருமற்ற நிலையில் இறந்தவர்களின் சவ அடக்கத்துக்கு உதவுவதன் மூலமாகவும் இந்த தோஷத்தை விலகச் செய்யலாம்.

திருமணம்

கேது தோஷம் விலக, ஆலயங்களைப் புதுப்பிக்க உதவலாம். வாராவாரம் நடக்கும் உழவாரப் பணிகளில் கலந்துகொண்டால், கேது தோஷம் விலகும்.

ராகு தோஷம் விலக பெண்களுக்கு உதவணும். குறிப்பாக கணவனை இழந்த பெண்கள், விவகாரத்துப் பெற்ற பெண்களுக்கு உதவிகள் செய்யவேண்டும். மாற்றுத் திறனாளிகள், வாய்ப்பேசாதவர்கள், கண் பார்வையற்றவர்களுக்குப் பொருளுதவி செய்யலாம். ராகு, கேதுவை ஆணுமற்ற, பெண்ணுமற்ற கிரகம் என்று சொல்வார்கள். அதனால் மூன்றாம் பாலினம்னு சொல்லக்கூடிய திருநங்கைகளுக்கு உதவலாம் . இதுபோன்ற பரிகாரங்களை எல்லாம் நாம் செய்து வந்தால் ராகு- கேது தோஷம் விலகி விரைவில் திருமணம் நடைபெறுவதுடன் சுகமான வாழ்க்கையும் அமையும்'' 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!