வெளியிடப்பட்ட நேரம்: 19:44 (06/10/2017)

கடைசி தொடர்பு:19:45 (06/10/2017)

திருப்பதி லட்டு, பிரசாதங்கள் யாருடைய மேற்பார்வையில் தயாராகின்றன தெரியுமா?#ThirumalaTirupathy

திருப்பதியில் சுவாமி தரிசித்து விட்டு வந்ததும், இடதுபுறம் படியேறி, 'தீர்த்தம்' 'சடாரி' வாங்கச் செல்லும்போது மடப்பள்ளியைக் கவனித்திருக்கிறீர்களா? அங்குதான் திருப்பதி பெருமாளுக்கு உரிய தயிர்சாதம், சர்க்கரைப் பொங்கல், மிளகு சாதம், புளியோதரை என வகைவகையான நைவேத்தியங்கள் மணக்க மணக்கத் தயாராகின்றன. அவை அத்தனையையும் சீனிவாசனின் வளர்ப்புத்தாயான வகுளாதேவியின் மேற்பார்வையில்தான் தயாராகின்றன. இந்த வகுளாதேவி யார் தெரியுமா? தெரிந்தால் வியப்பு மட்டுமல்ல ஒரு பரவசமும் உங்களைப் பற்றிக்கொள்ளும்.

திருப்பதி

பாசம் மிகுந்த ஒரு தாயின் அன்பும் பக்தியும் கலந்த வரலாறு அது. துவாபரயுகத்தில் தொடங்கி இந்தக் கலியுகத்திலும் தொடரும் தாய்மையின் அன்புப் பிரவாகம் அது!
துவாபரயுகத்தில், கண்ணன் தன் அவதாரத்தை முடித்துக் கொள்வார் என்பதை அறிந்ததும், துவாரகையில் வசித்த அனைவரும் மிகவும் வேதனையடைந்தனர். பகவான் ஶ்ரீகிருஷ்ணரைப் பிரிந்து வாழ்வதற்கு அவர்களுக்கு மனமில்லை. அவர்கள் அழுது அரற்றி, 'எங்களுக்கு ஏதாகிலும் ஓர் உபாயத்தை நீங்கள் அருளியே ஆகவேண்டும்' என்று கதறி அழுதனர்.
    அதற்கு பகவான் ஶ்ரீகிருஷ்ணர் ,''நீங்கள் அனைவரும் கலியுகத்தில் என்னோடு பிறந்து வாழ்வீர்கள்'' என்று வரமளித்தார். 
அப்போது கண்ணனின் வளர்ப்புத் தாயான யசோதையும் கண்ணனை மனமார சேவித்தாள். கோகுலத்தில் வசுதேவர் தன்னிடம்  கண்ணனைக் கொடுத்தது முதல் பிள்ளைப் பருவத்திலிருந்து கண்ணனை கண்ணிமை போல காத்து வளர்த்து வந்தவள். யசோதையின்  நல்லப்பிள்ளையான கண்ணன், கோகுலத்துக்கே செல்லப்பிள்ளையானதெல்லாம் நாம் அறிந்ததே. ஆனால், கண்ணன்,  கிருஷ்ணனாக வளர்ந்து வாலிபப் பருவம் அடைந்ததும் நடந்த இரு திருமணங்களில் ஒன்றையும் அவள் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. அது அவளுக்கு ஒரு பெரும் குறையாகப் பட்டது. அவதாரம் முடியும் தருணத்தில் தன் விருப்பதைக் கண்ணனிடம் தெரிவித்தாள். 

திருப்பதி

அதற்குக் கண்ணன் மிகுந்த சந்தோஷத்துடன் ''அம்மா அப்படியே ஆகட்டும். கலியுகத்தில் சீனிவாசனாக திருவேங்கடத்தான் உருவில் நிறைவேற்றி வைக்கிறேன். தாங்கள் வகுளாதேவியாக உருவெடுத்து சேஷாத்திரிமலையில் தங்கி, அங்கே எழுந்தருளியிருக்கும் வராக மூர்த்தியை வழிபட்டு வாருங்கள். அங்கே தங்களை நான் சந்திக்கிறேன்” எனக் கூறினார்.
கண்ணபிரான் சொல்லியபடியே யசோதை தன் உடலை விட்டு கலியுகத்தில் வகுளாதேவியாக அவதாரம் எடுத்தாள். சேஷாத்திரி மலையில் இருந்த வராகமூர்த்தியின் ஆசிரமத்தில், வராகப் பெருமாளுக்கு பக்திபூர்வமாகக் கைங்கர்யங்கள் செய்துகொண்டும் அவருடைய உபதேசங்களைக் கேட்டுக்கொண்டும், கண்ணன் கொடுத்த வாக்கு நிறைவேறப்போகும் காலம் கனியக் காத்திருந்தாள். துவாபரயுகத்தில் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவேண்டி பகவான்தான் எத்தனை துன்பங்களுக்கு தம்மை ஆட்படுத்திக்கொண்டார்?!
பிருகு முனிவரால் வந்த வினை!
  மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரில் சாந்த மூர்த்தி யார்? என்பதை உலகுக்கு உணர்த்த விரும்பிய பிருகு முனிவர், முதலில் பிரம்மனின் அவைக்கு வந்தார். பிரம்மன் தேவாதி தேவர்களுக்கு தர்ம உபதேசம் செய்து வந்ததால், இவரைக் கவனிக்கவில்லை. அதனால் அவரை சபித்துவிட்டு, கயிலாயம் சென்றார். அங்கும் முனிவரை யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. கோபத்துடன் பிரம்மாவுக்கும் சிவனுக்கும் சாபம் கொடுத்துவிட்டு, வைகுண்டத்துக்கு வந்தார்.  

விஷ்ணு

அங்கோ மகா விஷ்ணு மோகனப் புன்னகையுடன் கண்கள் மூடிய நிலையில் படுத்திருந்தார். லட்சுமிதேவி அவரது திருவடிகளைப் பிடித்த வண்ணம் இருந்தார். இங்கும் தன்னைக் கண்டு கொள்ளாத பரந்தாமனின் செயலால் கோபம் கொண்ட பிருகு முனிவர், பரந்தாமனின் நெஞ்சிலே உதைத்தார். ஆனால்,  நாராயணமூர்த்தியோ பிருகு முனிவரின் செயலுக்குக் கோபப்படாமல், எங்கே தன்னை உதைத்ததால் முனிவரின் திருவடிகள் வலிக்குமோ என்று நினைத்து, முனிவரின் கால்களை இதமாகப் பிடித்து விட்டார். மூன்று உலகங்களிலும் சாந்தமானவர் மகா விஷ்ணுவே என்று மகிழ்ந்த பிருகு முனிவர் அவரை வாழ்த்திவிட்டுச் சென்றார்.
ஆனால், பிருகு முனிவர் உதைத்த மகா விஷ்ணுவின் இடது மார்பில் நீங்காதிருப்பவள் மகாலட்சுமி அல்லவா? அவர் பிருகு முனிவரின் செயலால் கடும் கோபம் கொண்டாள். 
''என்னதான் மகரிஷி உங்களுக்கு அடியவரென்றாலும் நான் வாசம் செய்யும் பரந்தாமனின் நெஞ்சில் உதைத்த பிருகு முனிவரின் பாதத்தை நீங்கள் பற்றியதை சிறிதும் விரும்பவில்லை. அதனால், உங்களைப் பிரிந்து செல்லப்போகிறேன் என்று கூறி, திருப்பதிக்கு அருகே இருக்கும் கொல்லாபுரம் வந்தடைந்தார். அவரைத் தேடித்தான் நாராயணன், சீனிவாசனாக அவதரித்து, திருமலை முழுவதும் அலைந்து திரிந்தார். 
அப்படி அவர் திருமலை முழுவதும் அலைந்து திரிந்துகொண்டிருந்தபோது ஒருநாள் வகுளாதேவி அவரைப் பார்த்தாள்.
அவரிடம், ''அப்பனே, நீ யார்? ஏன் இந்தக் காட்டில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டாள்.

யசோதா கண்ணன்

குழந்தையற்ற எனக்கு நீயே குழந்தை!
அதற்குப் பதிலளித்த நாராயணன், ''அம்மையே! நான் மிகவும் துரதிர்ஷ்டசாலி. எவ்வளவோ துன்பங்கள்  அடைந்து நான் இம்மலையை அடைந்தேன். எனக்குத் துணை என்று யாருமில்லை. என்னை ஆதரிப்பாரும் யாருமில்லை. உங்களையே நான் என் தாயாகக் கருதுகிறேன்.  இதைவிட இப்போதுள்ள என் நிலையில் ஒன்றும் கூறுவதற்கில்லை'' என்றார்.
இதைக் கேட்டதும், வகுளாதேவியின் கண்களிலிருந்து தாரை தாரையாக ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. 
''குழந்தாய், உன்னைப்போல நானும் திக்கற்றவள். இந்த மலையில் வராகமூர்த்தியை தரிசித்துக் கொண்டு காலம் கடத்தி வருகிறேன். அவரது கருணையால் நீ என்னிடம் வந்து சேர்ந்தாய். குழந்தையற்ற எனக்கு நீயே குழந்தை. உன்னை என் கண்மணி போல் காப்பாற்றுவேன். என்னைவிட்டு நீ பிரியக் கூடாது" என மிக அன்புடன் வேண்டிக்கொண்டாள்.

லட்டு பிரசாதம்

அதைக்கேட்ட  சீனிவாசன் புன்னகை செய்தான். ''அம்மையே! இன்றுதான் நான் பெரிய பாக்கியசாலியானேன். வாயார 'அம்மா' என அழைக்கும் வாய்ப்பு எனக்கு இன்றுதான் கிட்டியது. நீங்கள்தான் என் தாய். உங்களைவிட்டு எங்கும் செல்ல மாட்டேன்'' எனக் கூறினார். இதைக்கேட்ட வகுளா தேவி ஆனந்தம் அடைந்தாள். கானகத்தில் கிடைக்கும் கனி வகைகள் கொண்டு வந்து சீனிவாசனுக்கு உணவூட்டி பெற்ற தாயைப்போல் நேசித்தாள். 
வகுளா தேவியிடம் சீனிவாசன் சுகமாக வளர்ந்து வந்தார். அந்த வகுளா தேவியின் மேற்பார்வையில்தான் இப்போதும் சுவாமிக்கு உரிய நைவேத்தியங்கள் தயாராகின்றன. அந்த நைவேத்தியங்கள்தாம் இப்போதும் வெங்கடேசப் பெருமாளுக்குப் படைக்கப்பட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது. சுவாமிக்கு நைவேத்தியம் படைக்கப்படும்போது மிகப்பெரிய காண்டா மணி ஒன்றை ஒலிக்கச்செய்வார்கள். அந்த மணியின் ஓசை வகுளமாலிகா சீனிவாசனை அழைக்கும் கனிவான குரலாக திருமலை முழுவதும் ஒலிக்கின்றது.     

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்