வெளியிடப்பட்ட நேரம்: 18:46 (12/10/2017)

கடைசி தொடர்பு:12:39 (13/10/2017)

சோதனையான அரங்கேற்றம்... வெற்றிவிழாவான 100 வது காட்சி! - ஸ்ரீதியாகராஜர் நாடகம்... ஆன்மிக அனுபவம்

'`ங்கே நாமாவளி பாட நாரதர் இருக்கிறார். இதேபோல் பூலோகத்தில் பாடுவதற்கு யார் இருக்கிறார்கள்?’' என்று சீதா தேவி கேட்க, அதற்கு ராமபிரான், '`இந்தக் காரியத்துக்காக ஏற்கெனவே திருவாரூரில் தியாகராஜன் அவதரித்துவிட்டான்’' என்று பதில் கூறுவதிலிருந்து தொடங்குகிறது `ஶ்ரீதியாகராஜர்’ இசை நாடகம். 

ஸ்ரீதியாகராஜர் நாடகம்

ராமபிரானைப் போற்றி கீர்த்தனைகள் பாடுவதற்கென்றே தோன்றிய ஶ்ரீதியாகராஜர், தம்முடைய வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்தித்தபோதும், இடைவிடாது ராமபிரானைத் துதித்து, கீர்த்தனைகளைப் பாடி, தமது 80-வது வயதில் ராமபிரானின் திருவடி சேரும் வரை நடைபெற்ற சம்பவங்களின் சுருக்கம்தான் `ஶ்ரீதியாகராஜர்’ நாடகம்.

'எந்தரோ மகானுபாவலு அந்தரிகி வந்தனமு'; 'நிதி சால சுகமா ராம நூ சந்நிதி சாலசுகமா?' போன்ற பிரசித்திபெற்ற கீர்த்தனைகளை அருளிய தியாகராஜரின் வாழ்க்கையை விவரிக்கும் இசை நாடகம் இது. `இப்படி ஒரு நாடகத்தை இதுவரை பார்த்ததில்லை’ என்று பார்த்தவர்கள் பூரிப்புடன் சொல்லும் இந்த நாடகம் பல வெளிநாடுகளிலும் மேடையேறியிருக்கிறது. 

ஆனந்த விகடனில் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற வீயெஸ்வி, பக்தி இலக்கியங்களில் ஆழ்ந்த ஞானம் பெற்றவர். அவர் 2007-ம் ஆண்டில் ஶ்ரீதியாகராஜரின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அதை நாடகமாக மாற்றியமைக்கவும் விரும்பினார். அதற்காக நாடக உலகத்தில் புகழ்பெற்று விளங்கிய டி.வி.வரதராஜனை அணுகினார். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் நாடகம் குறித்து கலந்துரையாடி, பல மாற்றங்களுக்குப் பிறகு 2015-ம் ஆண்டு மத்தியில் நாடகம் இறுதி வடிவம் பெற்றது. நாடகத்தின் முழு ஸ்கிரிப்ட் தயாரானதும், திருவையாற்றில் உள்ள தியாகராஜரின் சமாதியில் வைத்து பூஜை போட்டு நாடகத்தைத் தொடங்கினார்கள். டி.வி.வரதராஜன் நாடகத்தை இயக்கியதுடன் அவரே தியாகராஜராகவும் நடித்தார். அவருடன் 30 நாடகக் கலைஞர்களும் இணைந்து 60 நாள்கள் வரை இடைவிடாது ஒத்திகை நடத்தினார்கள்.

நாடகம்

2015-ம் வருடம் டிசம்பர் மாதம் 1-ம் தேதி, சென்னை நாடக சபாவில் `ஶ்ரீதியாகராஜர்’ நாடகம் முதன்முறையாக அரங்கேறியது. அன்றிரவே வரலாறு காணாத மழை, வெள்ளம் சென்னையைப் புரட்டிப் போட்டது. சென்னை அண்ணாசாலையில் பெருக்கெடுத்தது. அதனால், நாடகக் கலைஞர்கள் ஒருவாரத்துக்கும் மேலாக சபாவைவிட்டு வெளியேற முடியாமல் தவித்தார்கள். இப்படி `ஶ்ரீதியாகராஜர்’ நாடகத்தின் முதல் அரங்கேற்றமே சோதனையாக முடிந்தது. ஒரு நல்ல பணியை முன்னெடுத்துச் செல்லும்போது சோதனைகள் ஏற்படுவது இயல்புதானே என்று நினைத்தவர்களாக, தொடர் முயற்சியுடன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக வெற்றிகரமாக நாடகம் நடத்தி,  தற்போது 100-வது காட்சியையும் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள்.

`ஶ்ரீதியாகராஜர்’ நாடகத்தின் 98-வது காட்சி தியாகராஜரின் ஜன்ம பூமியான திருவாரூரில் கடந்த 7-ம் தேதியும், 99-வது காட்சி தியாகராஜரைப் போற்றிய தஞ்சை அரண்மனை வளாகத்தில் 8-ம் தேதியும், 100-வது காட்சி தியாகராஜர் சமாதியாகி அருள்பாலிக்கும் திருவையாற்றில் 9-ம் தேதியும் நடைபெற்றது.

'பிச்சை என்பது பசிக்கு நாம் பெறுவது.  பிக்ஷை என்பது பக்திக்கு சேர்க்கிறது.' 

'நமக்கு வீடுதேடி வந்தால் அது சாப்பாடு. வெளியில் நாலுபேரிடம் தேடி வாங்கினால் பிரசாதம்.'

'எல்லோரையும்போல பிரபஞ்சத்தில் நானும் ஒருத்தன்னு சொன்னதோடு, நம்மில் ஒருவராக சுக துக்கங்களில் பங்குகொண்டு வாழ்ந்து காட்டியவர் ராமர்.'

'நாம் எப்படி வாழறதுன்னு முறையைச் சொல்லிக் கொடுத்து, இந்தப் பிரபஞ்சமே நான்தான்னு சொன்னவர் கிருஷ்ணர்.' 

'பகவான் கூப்பிடும் தொலைவில்தான் உள்ளார்.  அவருக்கு ஜாதி, மதம் இல்லை.  அவரை அழைக்க பெரிய யாக வேள்வி பூஜைகளோ, வேத பாராயணங்களோ தேவையில்லை.  மனசுத்தியோடு `ராமா, ராமா...’ என்று அழைத்தாலே போதும். பகவான் அனுக்கிரஹம் முழுமையாகக் கிடைக்கும்.'  

- இவையெல்லாம் நாடகத்தில் கைத்தட்டல் பெறும் முக்கிய வசனங்கள்.  

நாடகம்

நாடகம் குறித்து இயக்குநர் டி.வி.வரதராஜனிடம் பேசினோம்.

``ஆரம்பத்தில் ஶ்ரீதியாகராஜரின் வாழ்க்கையை நாடகமாக்க தயங்கினேன். அதன்பிறகு அவரைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொண்ட பிறகு இந்த நாடகத்தை நடத்துவது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் என்று கருதினேன். இதற்கு முன்பு நான் 18 சமூக நாடகங்களை நடத்தி இருந்தாலும், `ஶ்ரீதியாகராஜர்’ நாடகம்தான் நான் நடத்தும் முதல் பக்தி நாடகம். துபாய், அபுதாபி, அமெரிக்கா என வெளிநாடுகளிலும், டில்லி, பம்பாய், பெங்களூரு, கொல்கத்தா என இந்தியாவின் முன்னணி நகரங்களிலும் நடத்தி இருக்கிறோம். 
இப்படி ஶ்ரீதியாகராஜரின் நாடகம் வெற்றிகரமாக நடைபெறக் காரணம், நாடக ஆசிரியர் வீயெஸ்வி; எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் இசையமைத்துத் தந்த பாம்பே ஜெயஶ்ரீ. இவர்களுக்கெல்லாம் மேலாக எங்கள் எல்லோரையும் ஆசீர்வதித்து தம்முடைய சந்நிதியில் 100-வது காட்சியை மேடையேற்றியது ஶ்ரீதியாகராஜரின் அனுக்கிரகமும்தான்.

இந்த நாடகத்தில் நடிக்க வந்த பிறகு 30 கலைஞர்களும் வேறு எந்த நாடகத்திலும் நடிக்கப் போகவில்லை. அந்த அளவுக்கு பாத்திரத்தோடு ஒன்றிவிட்டார்கள். தஞ்சையில் இந்த நாடகத்தைக் கண்ட சரபோஜி மன்னரின் வாரிசுகள் மற்றும் ஶ்ரீதியாகராஜரின் வம்சாவளியினர், 'எங்கள் தாத்தாவைப் பற்றி படித்திருக்கிறோம், கேட்டு அறிந்திருக்கிறோம். ஆனால், எங்கள் கண்முன்னே அவரைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள். அவரை நேரில் தரிசித்த பாக்கியத்தைத் தந்திருக்கிறீர்கள்' என்று கூறியபோது நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நாடக வாழ்க்கையில் எனக்கு இது ஒரு மணிமகுடம்'' என்று சிலிர்ப்புடன் கூறினார்.

கண்டுகளித்தவர்களின் கருத்துகள்

லட்சுமி கிருஷ்ணன் :

''நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு நல்ல நாடகத்தைப் பார்த்த திருப்தி இருக்கு.  பகவான் பெயரை உள்ள சுத்தியோடு உச்சரித்தாலே போதும், பகவானின் அருளாசி கிடைக்கும் என்பதை அழகாக உணர்த்தியிருக்கிறார்கள் சூப்பர்.'' 

தினகரன் :

``ஒரு பக்தி நாடகத்தை, இரண்டு மணிநேரம் யாரும் அசையாமல் ரசித்துப் பார்க்க வைத்திருப்பதே அதிசயம்தான். மக்கள் மனம் பல்வேறு பிரச்னைகளால் இருளடைந்து கிடக்கும் இந்தக் காலகட்டத்தில் அறிவு ஒளியாய், ஆன்மிக ஒளியாய், வாழ்க்கை வழிகாட்டியாய் இந்த நாடகம் அமைந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.

கலைவாணி சொக்கலிங்கம் :

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்டர்நெட் என்று அலையும் நவீன உலகில், முன்னூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மகானை நம் கண்முன் நிறுத்துகிறது இந்த நாடகம். வளரும் மாணவ சமுதாயம்  அறியும் வகையில் இந்த நாடகத்தைக் கொண்டு சென்றால் சமூக நல்லொழுக்கம் ஏற்படும் என்பது என் கருத்து.     

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்