எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு மட்டுமல்ல... சசிகலா, ஓ.பி.எஸ்ஸுக்கும் இவர்தான் இஷ்டம்!

சென்னை கோட்டூர்புரத்தில், மேம்பாலத்துக்குக் கீழே உள்ளடங்கியிருக்கிறது வரசித்தி விநாயகர். அந்தத் தெருவாசிகளைத் தாண்டி, வேறாரும் அறியாத அந்தக் கோயிலை நாடறியச் செய்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

ஜெயலலிதா - சசிகலா

மகிழத்தக்க சம்பவங்கள் நடக்கும்போதோ, மிகவும் வருந்தத்தகுந்த சம்பவங்கள் நிகழும்போதோ ஜெயலலிதா செல்வது வரசக்தி விநாயகரைத் தரிசிக்கத்தான். அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் மனதுக்கு நெருக்கமான தெய்வமாக இருந்தவர் வரசித்தி விநாயகர். பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை ஆகி வந்தபோது, இந்தக் கோயிலில் வண்டியை நிறுத்தி, விநாயகரை வழிபட்ட பிறகே போயஸ் கார்டனுக்குச் சென்றார்.

பலமுறை ஜெயலலிதாவும், சசிகலாவும் கோட்டூர்புரத்தில் உள்ள இந்தக் கோயிலுக்கு வந்திருக்கின்றனர். ஜெயலலிதாவுக்கு, சசிகலா மீதிருந்த அதிருப்தி விலகி மீண்டும் அவருடன்  சேர்ந்தவுடனே,  இருவரும் வந்து முதலில் வழிபட்டது வரசித்தி விநாயகரைத்தான். 

வரசித்தி விநாயகர் ஆலயம்

ஜெயலலிதாவைப் போலவே சசிகலாவுக்கும் இந்த விநாயகர்தான் விருப்பக்கடவுள். சில நாள்களுக்கு முன்பு, பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் சென்னைக்கு வந்த சசிகலா, வரசித்தி விநாயகரைத் தரிசித்த பிறகே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தன் கணவர் நடராஜனைப் பார்க்கச் சென்றர். கோயிலில் அவரது ஆதரவாளர்கள் சிறப்புப் பூஜை செய்து சசிகலாவுக்குப் பிரசாதம்  வழங்கினார்கள். 

"ஜெயலலிதாம்மா  மட்டும் அல்ல, சசிகலா, ஓ.பி.எஸ் எல்லோருக்குமே வரசித்தி விநாயகர்தான் விருப்பக்கடவுள்"  என்று மகிழ்ச்சிப் பொங்கப் பேசுகிறார் கோயிலின் தலைமைக் குருக்கள் சபாபதி சிவாச்சாரியார்.

தீபம் ஏற்றும் இடம்

“ஜெயலலிதா, தன்னுடைய  வாழ்க்கையின் முக்கியமான நேரங்களில் எல்லாம் இங்கே வந்து வழிபடுவது வழக்கம். குறிப்பாக தேர்தல் நேரங்களில் வேட்பு மனுக்களை இங்கே வைத்து அர்ச்சனை செய்த பின்னர்தான் தாக்கல் செய்வார். பிறந்த நாளன்று சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்வார். இங்கே தேங்காய் உடைத்து  பூஜை செய்த பின்னர்தான், வீட்டிலிருந்து சட்டமன்றத்துக்குச் செல்வார்.  இந்தப் பக்கம் செல்லும் போதெல்லாம் இரண்டு நிமிடங்கள் காரை நிறுத்தி விநாயகரை தரிசித்து வழிபடுவார்" என்றவரிடம்,

எம்.ஜி.ஆர்

''இந்த விநாயகரை 'வெள்ளம் காத்த விநாயகர்' என்றும் சொல்கிறார்களே ஏன்?'' என்று கேட்டோம்.

“எம்.ஜி.ஆர். ஆட்சியில் ஒருமுறை கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. அப்போது எம்ஜிஆர் படகில் வந்து இந்த விநாயகரை வழிபட்ட பிறகே மீட்புப் பணிகளை மேற்கொண்டார். அதன் காரணமாக  மக்கள் வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து காப்பாற்றப்பட்டனர். அப்போதிருந்து இந்த விநாயகருக்கு 'வெள்ளம் காத்த விநாயகர்' என்ற பெயர் ஏற்பட்டது'' என்கிறார்.

ஶ்ரீ சாந்த ஆஞ்சநேயர்

இந்த விநாயகருக்கு, 'விசா தரும் விநாயகர்' என்ற பெயரும் இருக்கிறது. அதற்கான காரணத்தையும் சுவாரஸ்யமாக விவரிக்கிறார் சபாபதி சிவாச்சாரியார்.

''வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் விநாயகருக்கு தேங்காய் மாலை சாத்தி வழிபட்டால் எளிதால் விசா கிடைக்கும். விசா கிடைத்து பலர் வெளிநாட்டில் நல்ல வேலைகளில் இருக்கின்றனர். அதனால்தான் இவருக்கு 'விசா தரும் விநாயகர்' என்ற பெயர்..." என்கிறார்.

ஜெயலலிதா பிறந்தநாளுக்கும் சசிகலா பிறந்த நாளுக்கும் சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்வார்கள். அவ்வப்போது ரத்தத்தின் ரத்தங்கள் சிலர் வந்து, ஜெயலலிதாவின் பெயரில் அர்ச்சனைகள் செய்வதும் நடக்கிறது. துணை முதல்வர் ஓபிஎஸ், எந்த முக்கியப் பணி என்றாலும் இந்தக் கோயிலுக்கு வந்து விநாயகரை வழிபட்ட பிறகுதான் செய்கிறார்.  அந்த வகையில், எப்போதும் பரபரப்பாக இருக்கிறது இந்தக் கோயி்ல்.

கோயில் நடை காலை 6.30 மணி முதல் மதியம் 11.30 வரை, பிறகு மாலை 5.30 முதல் 9.30 மணி வரைக்கும் திறந்திருக்கும். இந்தக் கோயிலுக்குள்ளேயே ஶ்ரீசாந்த ஆஞ்சநேயர் சந்நிதியும் உள்ளது. சென்னை கோட்டூர்புரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்துசெல்லும் தூரத்தில்தான் இருக்கிறார் வரசித்தி விநாயகர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!