வெளியிடப்பட்ட நேரம்: 19:06 (16/10/2017)

கடைசி தொடர்பு:09:54 (17/10/2017)

தீபாவளியன்று கங்காஸ்நானம், மறுநாள் துலாஸ்நானம் ஏன் செய்ய வேண்டும்? #Deepavali

மீபத்தில் வாட்ஸ்அப்பிலும் சமூக வலைதளங்களிலும் ஒரு தகவல் சுற்றிச் சுற்றி வருகிறது.விஜய தசமி நாளில் ராவணனைக் கொன்றுவிட்டு, ஶ்ரீராமர் இலங்கையிலிருந்து 21 நாள்களில் அயோத்தி திரும்பினார் என்றும், ஶ்ரீராமர் அயோத்திக்கு வந்த நாளை தீபாவளியாகக் கொண்டாடினார்கள் என்றும் ஒருசெய்தி பரவலாகப் பேசப்படுகிறது. இதற்குத் துணையாக 'கூகுள் மேப்'பையும் போட்டு இலங்கையிலிருந்து அயோத்திக்கு 21 நாள்கள் என்று ஒரு படத்தையும் உலவவிட்டிருக்கிறார்கள். இந்தத் தகவல் உண்மைதானா என்பது பற்றி ஆன்மிக அருளாளர் எம்.வி. அனந்தபத்மநாப ஆச்சார்யரைக் கேட்டோம்.

தீபாவளி

சமூகவலைத்தளங்கள் என்பது தற்காலத்தில் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாக நம் வாழ்க்கையில் கலந்துவிட்டன. செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக் கொள்வதில் இவை பேருதவி புரிகின்றன. ஆனால், தேவையற்ற விபரீதங்களையும், தாக்கத்தையும் உண்டு அனந்தபத்மநாபன்பண்ணுவதையும் மறுப்பதற்கில்லை. அப்படிப்பட்ட ஒரு தவறான தகவலாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது. இதிகாசப் புராணங்களிலுள்ள செய்திகளை அவரவர் மனோபாவத்துக்கு ஏற்றாற் போல் திரித்துக்கூறுவது தவறு. மூல ஆசிரியர் சொல்லியதைத் தாண்டி நம் இஷ்டத்துக்கு உரை எழுதக் கூடாது. அப்படி எழுதினால், அது நம் மூலாதாரத்தையே சிதைத்து விடும்.

இலங்கையிலிருந்து புறப்பட்ட ஶ்ரீராமர் 21 நாள்கள் கழித்தே அயோத்தியைச் சென்றடைந்தார் என்பது முழுக்கமுழுக்க ஜோடிக்கப்பட்ட கதையாகும். இப்படிப்பட்ட கதைகளைக் கூறி தங்களைக் கற்றறிந்தவராகக் காண்பித்துக்கொள்வதில் என்ன லாபம்? 

ராவணனைக் கொன்ற ராமர் உடனடியாக பரதனைக் காண அயோத்திக்கு புஷ்பக விமானத்தில் பறந்து சென்றார். வால்மீகி ராமாயணத்தில் காண்பிக்கப்படும் இந்த நிகழ்ச்சிக்கு கூகுள் மேப் எப்படி பிரமாண பத்திரமாக முடியும்? 

இலங்கை டூ அயோத்தி மேப்

வட மாநிலங்களில் நடைபெறும் ராம் லீலா உற்சவத்தைக் குறிக்கும் விதமாக இலங்கையிலிருந்து அயோத்திக்குப் பயண நாள்கள் 21 என்று விளக்க நினைப்பது அறியாமையின் உச்சம். சமூக வலைத்தளம் என்பது சக்தி வாய்ந்த ஆயுதம். அதை நம் ஆச்சார்யர்கள் காண்பித்து அருளிய சரியான பாதையில் பயன்படுத்துவதே நம் சம்பிரதாயத்துக்குப் பயனளிக்கும்'' என்று கூறியவரிடம், 'தீபாவளி பண்டிகை ஏற்பட்டவிதம் அன்று நாம் என்ன வகையான பூஜைகள் செய்ய வேண்டு'மெனக் கேட்டோம்.

'நரகாசுரன் இறந்த நாள், தீபாவளி நன்னாளாகவும், கிருஷ்ணனுடைய விசேஷ பூஜைக்குரிய நாளாகவும் ஆயிற்று. இந்திரனின் தாயாகிய அதிதி தேவியின் குண்டலங்களை நரகாசுரன் கவர்ந்துசென்றான். இதனால், இந்திரன் கண்ணனை வேண்டினான். கண்ணனும் சத்யபாமாவுடன் சென்று, நரகாசுரனை வதம் செய்து, குண்டலங்களை மீட்டு வந்தார்.

 

தீபம்

நரகாசுரன் இறந்த நாளன்று தேவலோகத்திலும், பூலோகத்திலும் எங்கும் மங்கள தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தன. அவை யாவும் ஒரே மாதிரியாகச் சுடர்விட்டு ஒளி பெருக்கின. மூவுலகங்களிலும் உண்டாகப்போகும் மங்களங்களுக்கு ஆதாரங்களாகவும் அவை இருந்தன. நரகாசுரன் வாழ்ந்த நாள்களில் அவனால் வேத கோஷம் எங்கும் ஒலிக்கவில்லை. அவன் மாண்டதும், வேதகோஷம் ஓங்கி ஒலித்தது. 
இப்படியாக, இந்த நரகாசுர வதம் நடந்த நன்னாள், ஐப்பசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியில் நிகழ்ந்தது. இந்த நாளில் லோகநாதனான கிருஷ்ணனையும் மகாலக்ஷ்மியையும் பூஜிப்பது மிகச்சிறந்த பலனை அளிக்கும்.

விழாக்கோலம் 

தீபாவளி அன்று எண்ணெயில் மகாலட்சுமியும் நீரில் கங்கையும் வாசம் செய்வதாக ஐதீகம். அன்று சூரிய உதயத்துக்கு முன்பு எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்வது மிகவும் சிறந்தது. நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் நீக்கவல்லது. தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் செய்வது போலவே மறுநாள் துலா ஸ்நானமும் செய்ய வேண்டும்.

ஐப்பசி மாதம் துலாஸ்தானம். இந்த மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் இருப்பார். தீபாவளிக்கு மறுநாள் காவிரியில் ஸ்நானம் செய்வது அத்தனை விசேஷமானதாகும்.  

'நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தொலைய வேண்டுமானால், கங்கையில் மூழ்க வேண்டும்' என்று சொல்கிறோம். ஒருமுறை கங்கை, 'எல்லோருடைய பாவங்களும் விலகிட என்னிடம் வருகிறார்கள். இவற்றையெல்லாம் விலக்கிட, நான் என்ன செய்ய வேண்டுமென' கங்காதேவி  பரந்தாமனிடம் வினவினாள். 'நதிகளின் தலைவியான கங்கையே! நீ காவிரியில் நீராடிப் புனிதமடைவாய்''எனப் பரந்தாமன் கூறுகின்றார். அதனால்தான் 'கங்கையினும் புனிதமான காவிரி' எனத் திவ்யபிரபந்தம் பாடிய தொண்டரடிப் பொடியாழ்வார் கூறுகின்றார். அத்தனை சிறப்பு வாய்ந்த காவிரியில் துலாஸ்நானம் செய்வது மிகவும் சிறப்பு. 

காவிரி

தீபாவளிக்கு பூஜை என்பது அவரவர் சக்திக்கேற்ப இதய சுத்தியுடன் ஒரு சிறு கற்பூரம் ஏற்றி, வழிபட்டாலும் போதுமானது. எங்கிருந்து எப்படி அழைத்தாலும் என்னையே நம்பி அழைத்தால் அங்கு நான் வருவேன் என்கிறார் பகவான் ஶ்ரீகிருஷ்ணர்" என்று கூறியதோடு விகடன் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்தார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்