வெளியிடப்பட்ட நேரம்: 14:32 (18/10/2017)

கடைசி தொடர்பு:09:53 (19/10/2017)

மாங்கல்ய பாக்கியம், ஆயுள் பலம், குழந்தை வரம் அருளும் கேதார கௌரி விரதம்!

ணுக்குப் பெண்ணிங்கு சமம் என்று காணீர்! 'ஆணுக்குப் பெண்ணிங்கு சமம்' என்பதை உணர்த்துவதாக அமைந்திருக்கும் பண்டிகை தீபாவளிப் பண்டிகையும், அதையொட்டி வரும் கேதார கௌரி விரதமும் ஆகும். ஆணின்றி பெண்ணில்லை; பெண்ணின்றி ஆணும் இல்லை. இவர்கள் இருவருமே இணைந்ததுதான் குடும்பம். இதை நமக்கெல்லாம் உணர்த்துவதுபோல் அமைந்த இறைவனின் திருவுருவம்தான் அர்த்தநாரீஸ்வரர் திருவுருவம். இந்த அற்புதமான அர்த்தநாரீஸ்வர வடிவத்தையே உருவாக்கித் தந்தது கேதார கௌரி விரதம். சிவனுக்கான விரதங்களில் முக்கியமானது என்று கொண்டாடப்படும் கேதார கௌரி விரதம் ஐப்பசி மாதத்தில் அமாவாசை நாளில் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்த விரதம் தீபாவளிக்கு அடுத்த நாள் வருகிறது.

கேதார கௌரி விரதம்

பிருங்கி என்று ஒரு முனிவர் இருந்தார். அவர் மிகச் சிறந்த சிவபக்தர். எப்போதும் அவர் சிவனை மட்டுமே வழிபடுவார். என்னதான் அம்பிகை ஐயனுடன் நெருக்கமாக அமர்ந்திருந்தாலும், பிருங்கி முனிவர் ஒரு வண்டின் உருவமெடுத்து, ஐயனை மட்டும் வலம் வந்து வழிபடுவார். இதன் காரணமாகக் கோபமும் வருத்தமும் கொண்ட உமையவள், மண்ணுலகம் வந்து கௌதம மகரிஷியின் ஆசிரமத்தில் தங்கினார். பிரிக்கவியலாத அளவுக்கு சிவபெருமானோடு இணைந்து சரிபாதி உடலைப்பெற கௌதமரிடம் வழியைக் கேட்டார் சக்தி தேவி. கௌதம ரிஷியின் ஆலோசனைப்படி இந்தக் கேதார கௌரி விரதத்தை 21 நாள்கள் மேற்கொண்டு உமாதேவியார் சிவபெருமானின் திருமேனியில் சரிபாதி பெற்றார் என்கிறது புராணம். அன்னை கடும் தவமியற்றி வரம் பெற்றதால் இந்தக் கேதார கௌரி விரதம் பெண்களுக்கான விசேஷ விரதமானது. இதுபற்றி மேலும் விவரங்கள் அறிய, திருநள்ளாறு கோட்டீஸ்வர சிவாச்சாரியாரைத் தொடர்பு கொண்டு கேட்டோம்...

தீபாவளி விரதம்"சிவனைக்குறித்து அன்னை பார்வதி மேற்கொண்ட விரதங்களில் முக்கியமானது இந்த கேதார கௌரி விரதம். சிவசக்தி இணைந்த சொரூபத்தை இந்த விரதம் பெற்றுத் தந்ததால் பெண்கள் விரும்பிய எல்லா வளங்களையும் இந்த விரதம் அள்ளித் தரும். புரட்டாசி மாதம் சுக்ல பட்ச தசமியில் ஆரம்பிக்கும் இந்த விரதம் ஐப்பசி மாதம் அமாவாசை அன்று 21-வது நாளில் பூர்த்தியாகும். பெண்கள் கடைப்பிடிக்கும் இந்த விரதம் சிவபெருமானை மகிழ்விக்கும் சிறப்பைக் கொண்டது. கேதாரம் எனப்படும் இமாலயப்பகுதியில் அவதரித்த கௌரி வடிவமான சக்தி, சிவனை பூஜித்து இந்த விரதம் இருந்ததால் கேதார கௌரி விரதம் என்றானது. இதே விரதத்தை பின்னர் நான்முகன், திருமால் உள்ளிட்ட எல்லா தேவர்களும் கடைப்பிடித்து அருள்பெற்றார்கள் என்பது புராணம் சொல்லும் தகவல். இந்த விரத நாள்களில் புனித நீர் சேர்ந்த மங்கல கலசத்தில் சிவபெருமானை ஆவாஹணம் செய்து 21 நாள்களும் பூஜைகள் செய்ய வேண்டும். நாளும் ஒரு நைவேத்தியம், ஒரு மங்கலப் பொருள் வைத்து வழிபட வேண்டும். சிவபெருமானைக் குறித்த பாடல்களைப் பாடி, கதைகள் சொல்லி வணங்க வேண்டும்.

விரதம் மேற்கொள்ளும் நாள்களில் நாளுக்கு ஒரு கயிறு என சிவபெருமானுக்குச் சாத்தி இறுதி நாளில் அந்த 21 கயிறுகளை ஆண்கள் வலக்கையிலும் பெண்கள் இடக் கையிலும் கட்டும் முறை உள்ளது. அர்த்தநாரி வடிவத்தை இந்த விரதம் சொல்வதால் திருச்செங்கோட்டு அர்த்தநாரிஸ்வரரை வணங்குவது இந்த நாளில் சிறப்பானது. ஆரம்ப காலத்தில் 21 நாள்களும் நடந்து வந்த இந்த விரதம், தற்போது காலமாற்றத்தால் சுருங்கி இறுதி நாளான ஐப்பசி அமாவாசை நாளில் மட்டும் அனுஷ்டிக்கப்படுகிறது. மாங்கல்ய பாக்கியம், கணவனுக்கான ஆயுள் பலம், குழந்தை வரம் எனக் குடும்ப நலனுக்கான வரங்களைத் தரும் இந்த விரதம் கிராமங்களில் கூட்டு வழிபாடாக ஒரே கோயிலில் கூடி பெண்கள் கொண்டாடுகிறார்கள். இந்த பூஜைக்கு வரும் சுமங்கலிப் பெண்களை அன்னை பார்வதியாகவே கருதியே அவர்களுக்கு 'சோபன திரவியம்' என்னும் மங்கல பொருள்களை அளிப்பதை பார்த்திருக்கலாம்.

சிறிய கண்ணாடி, மரத்தால் ஆன சொப்புச் சாமான்கள், கருக மணி, காதோலை, மருதாணி, மஞ்சள், குங்குமம் போன்ற 21 பொருள்களை வைத்து வணங்கி, அதை பெண்களுக்கு வழங்குவார்கள். 21 நாள்கள் கொண்டாடாமல் கடைசி நாளில் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதால் மொத்தமாக 21 அதிரசங்கள், 21 வெற்றிலை, 21 பாக்கு, 21 மஞ்சள், 21 மங்கலப் பொருள்கள் எனப் படைப்பது வழக்கமாக உள்ளது. விரத நாள் அன்று உணவு எடுத்துக்கொள்ளாமல் சிவனையும் அம்பிகையையும் துதித்து இந்த விரதம் இருப்பது சிறப்பானது. விரதம் முடித்தபிறகே உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லா மங்கலங்களையும் அருளும் இந்தக் கேதார கௌரி விரதம் குடும்ப நலனை மேம்படுத்தும் ஒரு மங்கல வழிபாடு. இதை எல்லாப் பெண்களும் அனுஷ்டித்து சிவசக்தி அருளைப் பெறுதல் விசேஷமானது" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்