‘சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும்...’ - உடலையும் மனதையும் மேம்படுத்தும் கந்த சஷ்டி விரதம்! | Sashti fasting protect the body and mind

வெளியிடப்பட்ட நேரம்: 10:38 (20/10/2017)

கடைசி தொடர்பு:10:38 (20/10/2017)

‘சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும்...’ - உடலையும் மனதையும் மேம்படுத்தும் கந்த சஷ்டி விரதம்!

ழகன் என்றும், தமிழ்க் கடவுள் என்றும், தகப்பன் சாமி என்றும் எல்லோராலும் கொண்டாடப்படும் முருகப்பெருமானுக்கு உகந்த விரதம் சஷ்டி விரதம். குறிப்பாக ஐப்பசி மாதம் அமாவாசையை ஒட்டி வரும் கந்த சஷ்டி விரதம், மிகவும் விசேஷமானது. அது மட்டுமல்ல, சிறப்பான பலன்களைத் தரும் ஒப்பற்ற விரதமும் கூட. ஐப்பசி மாதம் கந்த சஷ்டி தினத்தில்தான் முருகப் பெருமான், தன் அவதாரத்துக்குக் காரணமான சூரபத்மனை சம்ஹாரம் செய்த நிகழ்ச்சி நடந்தது. முருகப் பெருமானின் சூரசம்ஹாரம் தனிச் சிறப்பு கொண்டது. ஆம். முருகப் பெருமான் சூரனை சம்ஹாரம் செய்ததுடன், அவனையே மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார். 

திருசெந்தூர் முருகன்

முருகப் பெருமானின் அவதாரம் நிகழ்வதற்குக் காரணமான சூரபத்மனின் பின்னணிதான் என்ன?

சூரபத்மன் என்பவன் சிவபெருமானைக் குறித்து தவம் இருந்து வழிபட்டான். தரிசனம் தந்த இறைவனிடம்தான் இறவாமலிருக்க வரம் கேட்டான். ஆனால், பிறப்பவர் யாவரும் இறக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி என்று சிவபெருமான் கூறவே, பெண்ணின் கருவில் உருவாகாத ஒருவனின் கரத்தால் மட்டுமே தனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அப்படியே வரம் தந்து மறைந்தார்.

தான் பெற்ற வரத்தின் காரணமாக தேவர்களையும் முனிவர்களையும் உலகத்து வாழ் மக்களையும் கொடுமைப்படுத்தினான். அவனுடைய கொடுமை தாங்க முடியாமல் தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் முறையிட்டு பிரார்த்தித்தனர். அவர்களுடைய பிரார்த்தனைக்கு இறங்கி சிவபெருமான், தம் நெற்றிக்கண்ணிலிருந்து முருகப்பெருமானைத் தோற்றுவித்தார். தேவர்கள் மற்றும் முனிவர்கள் ஆகியோரின் துன்பம் நீக்க, சூரபத்மனை வேலவன் சம்ஹரித்த நாளே ஐப்பசி மாத சஷ்டி தினம். இந்த நாளில் தீமைகள் விலகி மங்கலம் உண்டானதால் சஷ்டி விரதம் முக்கிய விரத நாளாக போற்றப்படுகிறது. இந்த சஷ்டி விரதத்தின் முக்கியத்துவம், பலன்கள் பற்றி அறிந்துகொள்ள ஆன்மிக எழுத்தாளர் வலையப்பேட்டை கிருஷ்ணனை தொடர்பு கொண்டு கேட்டோம்.

சஷ்டி விரதம்

“விரதங்கள் எல்லாமே மனதை ஒருமுகப்படுத்தத்தான் ஞானிகளால் உருவாக்கப்பட்டது. விரதம் என்றாலே 'வரிக்கப்படுவது' அல்லது 'மேற்கொள்வது' என்றுதான் அர்த்தம். மனம் போனபடி செல்லும் புலன்களை அடக்கத்தான் இந்த விரதங்கள் பயன்படுகின்றன. மனதினை அடக்க ஒரு நல்ல வழி உண்டி சுருக்குதல்தான். அதிலும் விரத நாள்களில் உண்டியை நீக்குதல் இன்னும் சிறப்பானது. வாகனங்களுக்கு ஓய்வு கொடுத்து பழுது பார்ப்பது போல, உடலின் உள்ளுறுப்புகளுக்கும் இந்த விரதங்கள் நன்மை செய்கின்றன. ஞானியர்கள், யோகியர் எல்லாம் இந்த விரதங்களால்தான் சிறப்பினை அடைந்தார்கள். பசித்த நிலையில் அவர்களின் தேஜஸ் மெருகேறி தெய்வ நிலையினை பெற்றார்கள். அதனாலேதான் அவர்களைக் கண்டவுடன் நாம் வணங்குகிறோம். விரதங்களால் உடல், மனம் கட்டுப்படும். இதனால் நோய்கள் குறையும். ஆயுள் பெருகும். எல்லா வளங்களையும் விரதம் இருந்தால் பெறலாம் என்று சொன்னது இதற்காகத்தான்.

விரதங்களில் வார விரதம், நாள் விரதம், பட்ச விரதம் என்று மூன்று வகை உண்டு. வியாழன், சனி போன்ற ஏதாவது ஒரு நாள் இருக்கும் விரதம் வார விரதம் எனப்படும். மாதத்தின் ஏதாவது ஒரு நாள் உதாரணமாக அமாவாசை, பௌர்ணமி தினத்தில் விரதம் இருப்பது நாள் விரதம். மாதத்தின் இரு நாள்கள் ஏதாவது ஒரு திதியில் உதாரணமாக சஷ்டி, பிரதோஷம் நாள்களில் இருப்பது பட்ச விரதம் எனப்படுகிறது. இதில் சஷ்டி விரதம் சிறப்பானது. 'சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்'  என்ற பழமொழியின் உண்மையான விளக்கமே சஷ்டியில் விரதம் இருந்தால் அகமென்னும் பை சிறப்பானதாக மாறும் என்பதுதான். இன்னொருவகையில் கூடச் சொல்லலாம். பிள்ளைப்பேறு இல்லாத பெண்கள் சஷ்டியில் விரதம் இருந்தால் அவர்களின் அகமென்னும் கருப்பையில் கரு வரும். இப்படிச் சிறப்புமிக்க சஷ்டி விரதம் காலம் காலமாக நம்மிடம் இருந்து வருகிறது. ஐப்பசி மாதம் தீபாவளி கழிந்த பிரதமை நாளில் தொடங்கும் இந்த சஷ்டி விரதம் ஆறு நாள்கள் கடைப்பிடிக்கப்பட்டு சஷ்டி நாளில் முடியும். அதுவே கந்த சஷ்டி விரதம் எனப்படுகிறது.

சூர சம்ஹாரம்

சூரனை முருகப்பெருமான் வதைத்த நாளோடு இந்த விரதம் முடிகிறது. ஐப்பசி மாத சஷ்டியில் தொடங்கி ஒரு முழு ஆண்டில் வரும் 24 சஷ்டியிலும் விரதமிருப்பது நல்லது. முடியாதவர்கள் இந்த ஐப்பசி சஷ்டி விரதம் இருக்கலாம். ஆனால் ஆறு நாள்களுமே விரதம் இருப்பதுதான் முக்கியமானது. காலையில் எழுந்து தூய்மையாகி, திருநீறிட்டு, வடக்கிலோ, தெற்கிலோ அமர்ந்து முருகப்பெருமானை தியானிக்க வேண்டும். பின்னர் பூஜையறையில் முருகனை ஆராதித்து வழிபட வேண்டும். அப்போது நைவேத்தியமாக நெய்யில் செய்த மோதகம் வைப்பது விசேஷம். சஷ்டி விரத ஆறு நாள்களிலும் உண்ணாமல் இருப்பதுதான் நல்லது. எச்சில்கூட விழுங்காமல் இந்த விரதம் இருப்பவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். மறைந்த கிருபானந்த வாரியார் ஸ்வாமிகளின் தாயார் தனது 90 வயதிலும் இந்த விரதத்தை கடுமையாகக் கடைப்பிடித்தார் என்று அவரே கூறியிருக்கிறார்.

கந்த சஷ்டி விரதம்

முடியவே முடியாத பட்சத்தில் விரத நாளில் ஒரேயொரு முறை மட்டும் ஆறு மிளகும், ஆறு கை அளவும் நீரும் எடுத்துக்கொள்ளலாம். மிளகு வயிற்றில் அமிலக்கோளாறு வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்பதால் அதை எடுத்துக்கொள்ளலாம். ஆறு நாளும் விரதமிருந்து ஏழாவது நாளில் சிறப்பான பூஜைகளை மேற்கொண்டு அடியார்களுக்கு உணவிட்டு 'மகேஸ்வர பூஜை' மேற்கொள்ள வேண்டும். ஆறு நாள்களும் உண்ணாமல், உறங்காமல் விரதமிருந்து ஏழாவது நாளில் கடலில் நீராடி விட்டே விரதம் கைவிடும் பக்தர்களைத் திருச்செந்தூரில் இன்றும் காணலாம். உடலையும் மனதையும் சீராக்கும் கந்த சஷ்டி விரதம் 20-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை வருகிறது. இந்த நாளில் முடிந்த வரை உண்ணாநோன்பிருந்து எல்லாம் வல்ல முருகப்பெருமானின் ஆசியைப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்