கந்தபுராணத்தைத் திருத்தித் தந்தது யார் தெரியுமா? #KandhaSashtiViratham | Who Made Corrections in Kandapuranam

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (23/10/2017)

கடைசி தொடர்பு:17:45 (23/10/2017)

கந்தபுராணத்தைத் திருத்தித் தந்தது யார் தெரியுமா? #KandhaSashtiViratham

'நகரேஷு காஞ்சி' என்ற சிறப்பைப் பெற்றிருக்கும் காஞ்சி மாநகரில் கவின்மிகு கோயில்களுக்குக் குறைவே இல்லை. குறிப்பாகக் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில், காமாட்சி அம்மன் கோயில் இரண்டுக்கும் நடுவில் அமைந்திருக்கும் குமரக்கோட்டம் ஆகிய மூன்று கோயில்களும் சோமாஸ்கந்த வடிவத்தில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. கந்த சஷ்டி விழா நடைபெறுவதை முன்னிட்டு, காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் நடைபெற்ற கந்த புராணம் அரங்கேறிய நிகழ்வைக் காணலாமே...

கந்த சஷ்டி - கந்தபுராணம் அரங்கேறிய மண்டபம்

இந்தக் குமரகோட்டத்து முருகப் பெருமான் அருளால் நமக்குக் கிடைத்த ஒப்பற்ற புராணம்தான் கந்தபுராணம். சமஸ்கிருதத்தில் அமைந்திருக்கும் `சங்கர சம்ஹிதா’ என்ற நூலின் அடிப்படையில் கந்தபுராணம் தோன்றியதே முருகப் பெருமான் நிகழ்த்திய அற்புதம்தான்.
காஞ்சியில் சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் கச்சியப்ப சிவாசார்யர். தம்முடைய பத்து வயதிலேயே முருகப் பெருமானின் பரிபூரண அருளைப் பெற்ற கச்சியப்ப சிவாசார்யர், அனைத்து ஆகமங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

இந்நிலையில்...

குமரக்கோட்டத்து அழகனுக்கு ஓர் ஆசை தோன்றியது போலும்! 

தன் பெருமை பேசும் ஸ்கந்த புராணம், அழகுத் தமிழில் பாடப்படவேண்டும் என்பதுதான் அந்த விருப்பம். முருகப் பெருமான், `தமிழ்க் கடவுள்’ என்று போற்றப்பெறுபவர் அல்லவா?! எனவே, அவருடைய மகிமையைப் பாடும் புராணம் தமிழிலும் இருக்க வேண்டும் என்று விரும்பியது நியாயம்தானே!

சரி, தனக்குத் தோன்றிய விருப்பத்தை யாரைக் கொண்டு நிறைவேற்றிக்கொள்வது?

விரும்பியவருக்குத் தெரியாதா தன்னுடைய விருப்பத்தை யார் மூலம் நிறைவேற்றிக்கொள்வதென்று?

சிறு பிராயத்திலேயே தன்னுடைய பரிபூரண அருளைப் பெற்ற கச்சியப்ப சிவாசார்யரைக் கொண்டே கந்த புராணம் பாடப்பட வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார்.

கந்த சஷ்டி - உற்சவர் முருகன்

ஒரு நாள் இரவு கச்சியப்பரின் கனவில் தோன்றிய முருகப் பெருமான், 'என்னுடைய புராணத்தை அழகு தமிழில் பாடுவாயாக!' என்று கூறி மறைந்தார். மேலும் அவரே, 'திகடசக்கர செம்முகம் ஐந்துளான்' என்று அடியெடுத்தும் கொடுத்தார்.

விழித்தெழுந்த கச்சியப்பர் முதலில் திகைத்தாலும், முருகப் பெருமானின் கட்டளை என்பதால், கந்த புராணத்தை இயற்றத் தொடங்கினார். ஒவ்வொரு நாளும் நூறு பாடல்களை இயற்றுவார். இரவானதும், தாம் இயற்றியப் பாடல்களை குமரகோட்டம் இறைவனின் சந்நிதியில் வைத்துவிட்டு, உறங்கச் செல்வார். மறுநாள் காலையில் பார்த்தால் கச்சியப்பர் எழுதிய பாடல்களில் முருகப் பெருமானால் சில திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கும். 

இப்படிக் கந்த புராணம் முழுவதையும் இயற்றி முடித்ததும், ஒரு நல்ல நாளில் குமரகோட்டத்தில் அரங்கேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. 

அரங்கேற்றத்தின்போது கச்சியப்பரின் முருக பக்தியின் சிறப்பையும், அவருடைய புலமைத் திறமையையும் உலகத்தவர்க்கு உணர்த்த திருவுள்ளம் கொண்டார் முருகப் பெருமான். அதற்கு ஒரு புலவரைக் கருவியாகக் கொண்டார். 

குமரகோட்டம் நுழைவு வாயில்

அரங்கேற்றம் நடைபெற்ற வேளையில், கந்த புராணத்தின் முதல் அடியில் இடம்பெற்றுள்ள 'திகட சக்கரம்' என்ற வார்த்தையில் சொற் குற்றம் இருப்பதாக, அவையில் இருந்த புலவர்களில் ஒருவர் கூறினார்.

முருகப் பெருமானே எடுத்துக்கொடுத்த அடியில் சொற் குற்றம் உள்ளதாகப் புலவர் கூறியதைக் கேட்டு வருத்தத்துடனேயே உறங்கச் சென்றார் கச்சியப்பர். அன்றிரவு கச்சியப்பரின் கனவில் தோன்றிய முருகப் பெருமான், புலவரின் குற்றச்சாட்டை தாமே நேரில் வந்து போக்குவதாகக் கூறி மறைந்தார். அதன்படியே மறுநாள் முருகப் பெருமான்  புலவராக வடிவம் கொண்டு அவைக்கு வந்தார். 'திகட சக்கரம்' என்ற சொல்லில் குற்றம் இருப்பதாகக் கூறிய புலவருக்கு மறுப்புத்தெரிவிப்பதுபோல், 'திகட சக்கரம்' என்ற சொல் 'வீரசோழியம்' என்ற அணியிலக்கணம் கூறும் நூலில் உள்ளதாகக் கூறி, அவையோர் பார்த்துக்கொண்டிருந்தபோதே மறைந்தார். 

வந்தவர் சாட்சாத் முருகப் பெருமானே என்று உணர்ந்த அவையோர், கச்சியப்பரின் முருக பக்தியைப் போற்றிச் சிறப்பித்தனர். கந்த புராணம் அரங்கேற்றம் கண்ட மண்டபத்தை இன்றும் நாம் குமரகோட்டத்தில் கண்டு மகிழலாம்.

 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்