Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஞானம், சக்தி அருளும் ஸ்ரீமுருகன்-தெய்வானை திருக்கல்யாண வைபவம்! #KandhaSashtiViratham

னிதர்களாகப் பிறந்த நம் ஒவ்வொருவருக்கும்தான் எத்தனை எத்தனை விருப்பங்கள்? நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள நாம் செயல்படவேண்டும். செயல்படுவதற்கு உரிய சக்தி நமக்கு வேண்டும். விருப்பமும் செயல்படும் சக்தியும் நமக்கு இருந்தாலும்கூட, நாம் விரும்புவதும், செயல்படுவதும் முறையானதுதானா என்பதைத் தெளிந்து அறியும் ஞானம் நமக்கு வேண்டும். அப்போதுதான் நம்முடைய விருப்பத்தின் அடிப்படையில் அமையும் செயல், நமக்கும், நாம் சார்ந்திருக்கும் சமூகத்துக்கும் நன்மை தருவதாக அமையும்.

திருக்கல்யாணம்


நம் விருப்பம், அதைச் சார்ந்த செயல், அது சரியானதுதானா என்பதைத் தேர்ந்து தெளியும் ஞானம் இந்த மூன்றும் நமக்கு அருளக்கூடிய தெய்வ மூர்த்தங்கள்தான் முருகப் பெருமானும் அவர்தம் தேவியரான வள்ளியும், தெய்வானையும்.

வள்ளி என்பவள் நம்முடைய விருப்பத்தின் குறியீடு; தெய்வானை நம்முடைய செயலின் குறியீடு; முருகப் பெருமான் நம்முடைய விருப்பமும் செயலும் சரியானதுதானா என்பதை நமக்கு உணர்த்தும் ஞானத்தின் குறியீடு. எனவே, முருகப் பெருமானை தேவியருடன் வழிபடுபவர்களின் விருப்பம், செயல் எல்லாம் நெறிப்படி அமைந்து, அவர்களின் வாழ்க்கை செழித்துச் சிறக்கும் என்பது உறுதி.
கந்த சஷ்டி விழா நேற்று சூரசம்ஹாரத்துடன் நிறைவுபெற்றது. சூரபத்மனை சம்ஹாரம் செய்து தேவர்களின் துன்பம் அகற்றிய முருகப் பெருமானுக்கு, தேவேந்திரன் வாக்களித்தபடி தன் மகள் தெய்வானையை மணம் முடித்துக் கொடுத்த மங்கலத் திருநாள் இன்று!
முருகப் பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்ற திருப்பரங்குன்றம் தலபுராணம், அந்த தெய்வத் திருமணத்தைப் பற்றி விவரிக்கையில்,

'நான்முகன் வேதம் ஓத, சூரிய சந்திரர்கள் தீபங்கள் ஏந்தி நிற்க, சிவ சக்தியர் ஆசி வழங்க, இந்திரன் தெய்வானையைத் தாரை வார்த்துக் கொடுக்க, சுப்பிரமணியக் கடவுள் தெய்வானையைத் திருமணம் செய்துகொண்டார்' என்கிறது.

கந்த சஷ்டி சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் அனைத்து முருகன் ஆலயங்களிலும் முருகன் -  தெய்வானை திருமணம் கோலாகலமாக நடைபெறுகிறது. சாதாரணமாக கந்த சஷ்டி விழா ஆறு நாள்கள் மட்டுமே நடைபெறும். சில முருகன் ஆலயங்களில் முருகன் தெய்வானை திருமணத்தோடு சேர்த்து ஏழு நாள்கள் விழா நடைபெறும். ஆனால், சூரனை வென்ற திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாவை பன்னிரண்டு நாள்கள் கொண்டாடுகின்றனர். அதன்படி ஏழாம் நாளான இன்று காலையில் தெய்வானை திருச்செந்தூர் ஆலயத்தின் தபசு மண்டபத்தில், முருகப்பெருமானை மணந்துகொள்ள விரும்பி தவமிருப்பார். தெய்வானையின் தவத்துக்கு மகிழ்ந்து, மாலையில் குமரவிடங்கர் என்ற முருகப்பெருமான் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி அருள் செய்வார். அன்று இரவு முருகப்பெருமான் தெய்வானை உற்சவ மூர்த்திகள்  திருக்கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருளுவார்கள். அங்கு வேத மந்திரம் முழங்க பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடக்கும். 

முருகன் தெய்வானைத் திருமணம்

கந்த சஷ்டியின் எட்டாம் நாள், அதாவது நாளை முருகப்பெருமான், தெய்வானை வீதியுலா நடக்கும். திருக்கல்யாணம் முடிந்த மூன்று நாள்களும் முருகர் தெய்வானை தம்பதிகள் திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார்கள். கந்தசஷ்டி விழாவின் இறுதி நாளில் முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அப்போது, பக்தர்கள் முருகப்பெருமானை போற்றியும், போரில் வென்ற வேலவரின் வெப்பம் தணிக்கவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றிக் கொண்டாடுவார்கள். இது வித்தியாசமான கொண்டாட்டமாக தென் மாவட்டங்களில் நடைபெறுகிறது. ஞானத்தின் வடிவான முருகப்பெருமான் கிரியாசக்தியை தன்னோடு இணைத்துக்கொள்ளும் தெய்விக நிகழ்வே, முருகர் தெய்வானை திருமணம்.

இன்று முருகப் பெருமானின் ஆலயங்களில் நடைபெறும் முருகப் பெருமான் - தெய்வானை திருக்கல்யாண வைபவத்தை தரிசித்து, சக்தியும் ஞானமும் சேர்த்துப் பெற்று சிறப்புற வாழ்வோம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement