Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அன்புக்கும் அருளுக்கும் பஞ்சம்வைக்காத பால முருகன்! #KandhaSashtiViratham

முருகன் -

அழகுக் குமரன்

அவனை நாளும் தரிசிக்கக் குறையொன்றும் இல்லையே..!

கந்த சஷ்டியில், 'மாறுபடு சூரர்'களை வதைத்த திருமுகத்துக்கு உரியவரான குமரனின் தரிசனம் காண்போமே... 

முருகன்

 

'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்பார்கள்.

தெய்வம், தன்னை அன்புடன் கொண்டாடி போற்றுபவர்களுக்கு, அவர்கள் கேட்காமலேயே, அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் வரமாகத் தருவது போலவே-

குழந்தையும் தன்னிடம் அன்பு காட்டி கொஞ்சுபவர்க்கெல்லாம், தன்னிடமுள்ள எது ஒன்றையும் கேட்காமலேயே கொடுக்கக்கூடியது.
'இதனால்தான் குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்று கூறியிருக்கிறார்கள். 

அந்த தெய்வமே குழந்தை வடிவில் இருந்துவிட்டால்..?
அங்கே அன்புக்கும் அருளுக்கும் பஞ்சமே இல்லை.

அப்படிக் குழந்தை வடிவத்தில் நம்மால் கொண்டாடப்பெறும் தெய்வங்கள் சைவத்தில் சிவகுமாரனும், வைணவத்தில் வசுதேவ குமாரனான கண்ணனுமே ஆவர். 

அழகுக்கும் தமிழுக்கும் ஒரு வடிவமாகத் திகழ்பவர் முருகப் பெருமான்.

முருகனைக் குழந்தையாக அன்பு செலுத்தி, அவன் புகழ் பாடிப் பரவசப்பட்டவர்கள் பலர்.

அகத்தியருக்குத் தமிழ் கற்பித்த திறம் என்ன..?

பேசாப் பிள்ளையாக இருந்த குமரகுருபர குழந்தையைப் பேசவைத்து, காசியின் காற்றிலும் தமிழின் இனிமை பரவவிட்ட திறம் என்ன..?
'சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?' என்று கேட்டு, தமிழ் மூதாட்டி ஔவைக்கு ஞானம் புகட்டிய திறம்தான் என்ன..?
இப்படி நம் அழகன் முருகப் பெருமானின் அற்புத அருளாடல்களுக்குப் பஞ்சமே இல்லை. 

பற்றுகளை அறுத்தெறிந்து, எதுவும் வேண்டாம் என்று பழநியில் ஆண்டியாக நிற்பவன் அவன்!
இச்சா சக்தியான வள்ளியையும், கிரியா சக்தியான தெய்வானையையும் மணந்து, திருக்கல்யாணக் கோலத்தில் தணிகை மலையில் அருள்பவனும் அவன்தான்!

முருகன் எந்தக் கோலத்தில் இருந்தாலும், அவனைக் குழந்தையாகப் பாவித்து, பரிவுடன் அன்பு செலுத்துவதில் தமிழக மக்களுக்கு நிகர் அவர்கள்தான். தங்கள் மொழி காக்க வந்த தமிழ்க்கடவுள் என்பதால் நமக்கெல்லாம் முருகப் பெருமானிடம் அத்தனை அன்பு, பரிவு!
திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரர் முதல், சொல்லச் சொல்ல வாய் மணக்கும் திருப்புகழ் தந்த அருணகிரிநாதர் வரை அத்தனை பேரும் முருகப் பெருமானின் அருள் திறனை அனுபவித்துப் பாடியிருக்கிறார்கள்.

முருகப் பெருமானை, நாம் பல வடிவங்களில் வழிபடுகிறோம். நாம் எந்த வடிவில் விரும்புகிறோமோ, அந்த வடிவில் நம்மை ஆட்கொண்டு அருள்பவர் முருகக் கடவுள்.

 

முருகன்


சிவ ஸ்வரூபம் என்பது ஞானத்தின் வடிவம்; முருகப் பெருமான் விருத்தி வடிவம். சிவ ஸ்வரூபம் என்பது ஒளிரும் ஞானம் என்றால், அந்த ஞானத்தை மற்றவர்க்கு எடுத்துக் காட்டும் ஜோதியாகத் திகழ்பவர் முருகப் பெருமான். எனவேதான், அருணகிரிநாதர் தம் திருப்புகழில், 'தீப மங்கள ஜோதி'யாக முருகப் பெருமானைப் போற்றிப் பாடியுள்ளார். 

சிவபெருமானின் ஞானக் கண்களிலிருந்து வெளிப்பட்ட ஞானச்சுடர்ப் பொறிகளிலிருந்து தோன்றியவர் குமரக் கடவுள். 

இதைத்தான் கந்த புராணம் அருளிய கச்சியப்பர்,

'அருவமும் உருவமுமாகி அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
பிரும்மமாய் நின்ற ஜோதிப் பிழம்பதோர் மேனியாகிக் 
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே 
ஒருதிரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய'

என்று உருகி உருகிப் பாடியிருக்கிறார்.

மால் மருகனின் அவதாரம் சூரர்களை சம்ஹாரம் செய்வதற்கு மட்டுமல்ல, இந்தக் கலியுகத்தில், ஆசாபாசங்களின் காரணமாக நம் மனதில் ஏற்படக்கூடிய அசுர குணங்களை எல்லாம் அகற்றி, நம்மை ஆட்கொண்டு அருள்வதற்காக ஏற்பட்ட அவதாரம். 

முருகப் பெருமானின் ஆறு திருமுகங்களைப் பற்றிப் பாடும்போது, முதல் வரியில் முருகனை விளையாட்டுப் பிள்ளையாக பாவித்துப் பாடுகிறார் அருணகிரிநாதர். அருணாசலத்தில் அழகன் முருகனால் ஆட்கொள்ளப்பட்ட அருணகிரிநாதர் தம் திருப்புகழ்ப் பாடல்களில் பக்தி மணம் கமழக் கமழப் போற்றிப் பாடியிருக்கிறார்.

முருகப் பெருமானின் ஆறுமுகங்களின் அழகை, அருளாடல்களை உணர்த்தும் அந்தப் பாடல் இதோ...

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

இந்தப் பாடலில் மற்ற வரிகள் உணர்த்தும் தத்துவங்கள் எதுவும் நமக்கு வேண்டாம். மயில் ஏறி விளையாடும் குழந்தையாக நாம் குமரனை தரிசித்துக் கொண்டாடுவோம்.

அந்தக் குழந்தைக் குமரன், நாம் கேட்காமலேயே நமக்கு வேண்டியன எல்லாம் அருள்வான்!

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close