வெளியிடப்பட்ட நேரம்: 17:26 (30/10/2017)

கடைசி தொடர்பு:17:26 (30/10/2017)

கை, கால், கண், உடல்... உருவங்களை இறைவனுக்குக் காணிக்கையாகச் செலுத்துவது ஏன்?

``போன வருஷம் நீ வண்டியிலயிருந்து விழுந்து அடிபட்டப்போ, நம்ம குலசாமிக்கு, வெள்ளியில கை, கால் உருவம் வாங்கிப் போடுறேனு வேண்டிக்கிட்டதுப்பா. இந்த வருஷம் திருவிழா வரப் போகுது... கண்டிப்பா காணிக்கையைச் செலுத்திடணும். ஆத்தா புண்ணியத்துலதாம்ப்பா உனக்குச் சரியாச்சு’’  இப்படி இறை நம்பிக்கை சார்ந்த வாசகங்களை, வேண்டுதலை நம் வீடுகளில், உறவினர் அல்லது  நண்பர்கள் வீடுகளில் கண்டிப்பாகக் கேட்டிருப்போம். சாமிக்கு கண், கால், கை, உருவங்களைக் காணிக்கையாகச் செலுத்தும் பழக்கம் சிறு நகரங்களில் மட்டுமல்ல... பெருநகரங்களிலும்கூட  இன்றைக்கும் வழக்கத்தில் இருக்கும் ஒன்று. சென்னை, திருச்சி, மதுரை... போன்ற  மாநகரங்களில் உள்ள கோயில்களில்கூட, மெல்லியத் தகடுகளால் ஆன இந்த உருவங்கள் இப்போதும் விற்பனை செய்யப்படுகின்றன; அவற்றை வாங்கி சந்நிதியில் வைப்பது அல்லது உண்டியலில் போடுவது என்கிற நேர்த்திக்கடன் செலுத்தும் அன்றாடம் நடக்கிற ஒரு நிகழ்வாகவும் இருக்கிறது.

காணிக்கை

குடும்ப உறுப்பினர்களுக்காக மட்டுமல்லாமல், தங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோதும் இந்தச் சிறி உருவங்களை வாங்கி இறைவனுக்குக் காணிக்கையாகச் செலுத்தி, அவர்கள் நலம்பெற வேண்டிக்கொள்ளும் பழக்கம் பலருக்கு உண்டு. எம்.ஜி.ஆர் சிறுநீரகப் பாதிப்பால் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, அவருடைய கட்சிக்காரர் ஒருவர் தங்கத்தால் ஆன சிறுநீரகம் ஒன்றைச் செய்து புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் காணிக்கையாகச்  செலுத்தியது பலருக்குத் தெரிந்திருக்கும்.

புன்னை நல்லூர் மாரியம்மன்

`இப்படி உருவங்களைக் காணிக்கையாகச் செலுத்தும் பழக்கம் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் உருவானது,  எப்போதிருந்து மக்கள் இவற்றைக் காணிக்கையாகச் செலுத்த ஆரம்பித்தார்கள்?’ குமார சிவாச்சாரியாரிடம் கேட்டோம்... ``மனித உடல் இறைவனின் குமார சிவாச்சாரியார்ஆலயத்துக்கு ஒப்பானது. உடலில் உள்ள அங்கங்களின் அடிப்படையில்தான் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.  ஆலயமாகிய உடலில் உள்ள பாகங்களில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளைச்  சரிசெய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான் கோயில்களில் கடவுளுக்கு உருவங்கள் காணிக்கையாகச் செலுத்தப்படுகின்றன. 

கை, காலில் அடிபட்டால் கை, கால் உருவங்களைக் காணிக்கையாகச் செலுத்துவது , பார்வை மங்கினால் கண் போன்ற உருவை வாங்கிப் போடுவது போன்ற பழக்கங்கள் உள்ளன. அப்படிச் செய்தால், அந்த பாகங்களில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் சரியாகும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்தப் பழக்கம் நம்மிடையே ஆறாம் நூற்றாண்டிலிருந்து இருக்கிறது. 

இப்படி உருவங்களைக் காணிக்கை செலுத்தும் முறை, முதன்முதலில் அய்யனார்  வழிபாட்டில் இருந்துதான்  தொடங்கியது. அவருக்கு மண்ணால் ஆன பொம்மைகளை செய்துவைத்து வழிபடுவது வழக்கம். கை, கால் போன்ற உறுப்புகளையும் மண்ணால் செய்து வழிபாடு செய்வார்கள். 

அய்யானருக்கு மட்டும் அல்ல... பிற கிராம தேவைதைகளுக்கும் உருவங்களைக் காணிக்கையாகச் செலுத்தும் பழக்கம் நம்மிடையே உண்டு. கிராமங்களில் காவல் தெய்வங்களுக்கு உருவங்களைக் காணிக்கையாகச் செலுத்தும் பழக்கம்தான்  இன்று அனைத்துக் கோயில்களுக்கும் பரவியுள்ளது. ஆனால், இப்போது கால ஓட்டத்துக்கு ஏற்ப, இரும்பு, ஐம்பொன், வெள்ளி, தங்கம் ஆகியவற்றால் ஆன உருவங்களைக் காணிக்கையாக்குகிறார்கள்.

Aiyanar

இறைவனுக்கு உருவங்களைக் காணிக்கையாகச் செலுத்தும்போது சில நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். ஒரு தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு வைத்து மந்திரங்கள் ஓதித்தான் அவற்றைக் காணிக்கையாக்க வேண்டும். நேரடியாக உண்டியலில் போடக் கூடாது. இதுபோன்ற உருவங்களை நேரடியாக உண்டியலில் போடுவதால் எந்தப் பயனும் இல்லை.

இறைவனுக்கு நம் உடல் அங்கங்களை நேரடியாகத் தானம் செய்ய முடியாது.  அதனால்தான்  அவற்றைப் போன்ற உருவங்களை காணிக்கையாக்குகிறோம். அதையும் சரியான வழிபாடு, நடைமுறைகளோடு செய்தால் பலன் கிடைப்பது நிச்சயம்’’ என்கிறார் குமார சிவாச்சாரியார்.

சிவசுப்ரமணியன்இது பற்றி `மந்திரமும் சடங்குகளும்’ என்ற புத்தகத்தை எழுதியவரும், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளருமான சிவசுப்பிரமணியனிடம் பேசினோம்... ``இது போன்ற காணிக்கைகள் தொற்று மந்திரம் ( Contagious magic) என்கிற தத்துவத்தின் அடிப்படையில் செய்யப்படுகின்றன. `மந்திரம்’ என்றவுடன், இப்போது கோயில்களில் சொல்லப்படும் மந்திரங்களை நினைக்கக் கூடாது. அதாவது ஒரு பொருள் மற்றோரு பொருளுடன் உறவுகொள்ளும்போது ஒரு பொருளின் தன்மை மற்றொன்றில் கடத்தப்படும் என்பது நம்பிக்கை. 

வீடுகளில் குழந்தைகளுக்குத் தலையைச் சுற்றி திருஷ்டி கழிப்பதுகூட இந்த நம்பிக்கையில்தான். குழந்தைமீது பட்ட பிறரின் தீய பார்வைகள் விலகும் என்பது திருஷ்டி கழித்தலில் உள்ள நம்பிக்கை. ஆரம்பகாலங்களில் மாடு கன்றுக்குட்டி போட்டால் அதன் நச்சுக்கொடியை ஆலமரம், அரசமரம் போன்ற பால் சுரக்கும் மரங்களில் கட்டுவது வழக்கமாக இருந்தது. பால் உள்ள மரங்களில் நச்சுக்கொடியைக் கட்டினால் பசு நன்றாக பால் சுரக்கும் என்று நம்பினார்கள்.

குழந்தை இல்லாதவர்கள், குழந்தை பிறந்தால் அதைக் கோயிலுக்குத் தத்துக் கொடுப்பதாக வேண்டிக்கொள்ளும் பழக்கம் இன்றைக்கும் சில கிராமங்களில் உண்டு. குழந்தை பிறந்தவுடன், குழந்தைக்குப் பதிலாக சுடு மண்ணால் ஆன பொம்மைகளை கோயிலுக்குத் தத்துக் கொடுப்பார்கள். இதற்கு 'உருவம் நேர்ந்துவிடுதல்' என்று பெயர்.

இது காலம் காலமாகப்  பின்பற்றப்பட்டுவரும் ஒரு நம்பிக்கை சார்ந்த பழக்கம். அதைப் போன்றதுதான் உருவங்களைக் காணிக்கையாகச் செலுத்தும் பழக்கமும். உறுப்புகளில் ஏதாவது பாதிப்பிருந்தால், அந்த பாதிப்பை இந்த உருவங்களின் மூலமாகக் கடத்தி இறைவனின் காலடியில் சமர்ப்பித்தால் குணமாகும் என்பது நம்பிக்கை.

இது உலகளாவிய பழக்கம். அனைவராலும், ஒரு காலத்தில் இது கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், நம்மிடம் மட்டுமே இன்று வரை தொடர்கிறது. சிவன், அம்மன், பெருமாள் கோயில்களில் மட்டுமல்ல... வேளாங்கண்ணியில்கூட உருவங்களைக் காணிக்கையாகச் செலுத்தும் பழக்கம் இருக்கிறது. 

தொட்டி கட்டுதல்

சமயத்தின் முந்தைய வடிவங்களில் ஒன்று மந்திரம். வேட்டைச் சமூகத்தில் தொடங்கி வேளாண் சமூகம் வரை மந்திரச் சடங்குகள் உருப்பெற்று வளர்ந்தன. மனித சமூக வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ள மந்திரமும் மந்திரச் சடங்குகளும். தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த சமூகங்களிலும் முற்றிலும் மறைந்துவிடவில்லை. அதன் துணையுடனேயே தொடர்ந்து வருகின்றன’’  என்கிறார் சிவசுப்பிரமணியன்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்