Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பட்ட மரம் துளிர்த்தது! - ஸ்ரீராகவேந்திரர் அற்புதங்கள் உணர்த்தும் காரண காரியம்

ற்பக விருட்சம்' என்றும் `காமதேனு’ என்றும் போற்றப்பெறும் மகான் ஶ்ரீராகவேந்திரர், ஒருமுறை ஹூப்ளியை நோக்கி யாத்திரை மேற்கொண்டார். செல்லும் வழியில் ஒரு காட்டைக் கடக்கவேண்டியிருந்தது. உடன் வந்தவர்கள் களைப்புற்று இருந்ததைக் கண்டு, ஓரிடத்தில் தங்கிச் செல்ல விரும்பினார். பல்லக்கைக் கீழே இறக்கியதும், ஸ்ரீராகவேந்திரர் ஒரு மேடை மேல் அமர்ந்தார்.
சில நொடிகளில் ஒருவன் அவரிடம் ஓடி வந்தான். "ஐயா! நீங்கள் யாரோ தெரியவில்லை. பார்ப்பதற்கு மகானாகத் தோன்றுகிறீர்கள். இந்த மேடையில் அமரலாமா? தயவு செய்து எழுந்துவிடுங்கள்!" என்று படபடத்த குரலில் சொன்னான்.

ஸ்ரீராகவேந்திரர்

மகான் புன்னகையுடன், "நான் இடம் அறிந்துதான் அமர்ந்திருக்கிறேன் அப்பா! எந்தக் காரியமும் ஒரு காரணம் பற்றியே நடக்கிறது. விரைவில் அதைப் புரிந்துகொள்வாய்" என்று சொன்னார்.

காவல்காரன் புலம்பும் குரலில் "ஐயா! இது முஸ்லிம் மக்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடம். தாங்கள் அமர்ந்திருக்கும் மேடையின் அடியில் சாவனூர் நவாபின் மகனை அடக்கம் செய்திருக்கிறார்கள். பாம்பு கடித்து இறந்த அவனை இன்று காலையில்தான் இங்கே அடக்கம் செய்திருக்கிறார்கள். அந்தக் கல்லறைமீது தாங்கள் அமரலாமா?" என்று சொன்னான்.

"அப்படியா? இறந்துபோனவன் என்றுதானே கலங்குகிறாய்? எனக்கு நம்பிக்கையிருக்கிறது. உங்கள் நவாபின் மகனை என்னால் உயிர்பிழைக்க வைக்க முடியும்!" என்று மலர்ந்த முகத்துடன் கூறினார் ராகவேந்திர சுவாமிகள். காவல்காரனின் உடல் நடுங்கியது. அவனால் எதுவும் பேச முடியவில்லை.

"உங்கள் நவாபிடம் போய்ச் சொல். அவர் தனது மகன் உயிர் பிழைத்துவருவதை விரும்புவார். அவருடைய அனுமதியுடன் கல்லறையை உடைத்துப் பிரித்து, உடலை வெளியே எடுத்து வை!" என்றார் அவர்.

ஸ்ரீராகவேந்திரர்

காவல்காரனின் உள்ளம் தடுமாறியது. சுவாமிகள் சொல்வதை அவனால் நம்ப முடியவில்லை. "இறந்துபோனவர் பிழைத்து எழுந்திருப்பதாவது... என்ன சொல்கிறார் இந்த சுவாமிகள்?" என்று எண்ணினான். அதே சமயம் பாம்பு கடித்து இறந்தவன் உயிர் பிழைத்து எழுந்துவிட்டால், நவாப் அளவு கடந்த மகிழ்ச்சியடைவார்; நிச்சயமாகத் தன்னைப் பாராட்டிப் பரிசளிப்பார் என்றும் எண்ணினான்.
ஓடிப்போய் நவாபிடம் நடந்ததைச் சொன்னான். நவாப், முதலில் தனது மகனின் கல்லறைமீது யாரோ ஒருவர் வந்து அமர்ந்துவிட்டதை எண்ணிக் கோபப்பட்டான். அதே சமயம் வந்திருப்பவர் மகான் என்பதையும், அவருடைய புனித சக்தியால் ஒருவேளை மகன் பிழைத்து எழுந்துவிடக்கூடும் என்பதையும் உணர்ந்தான். தானே சுவாமிகளைத் தரிசிக்கப் புறப்பட்டு வந்தான்.

கல்லறையை உடைத்து, சுவாமிகள் விரும்பியபடி உடலை வெளியே எடுத்துவைக்கச் செய்தான். அருகே மண்டியிட்டு அமர்ந்து கொண்டான். நவாபின் மனம் சட்டென்று அமைதியடைந்தது. ஏதோ ஓர் அதிசயம் நடக்கப்போவதை உணரும்விதமாக உடம்பு சிலிர்த்து அடங்கிற்று.

ஶ்ரீராகவேந்திர சுவாமிகள் கமண்டலத்திலிருந்து புனித நீரை அள்ளி எடுத்து, தன்வந்திரி ஜபத்தை ஜபித்து அந்த உடல்மீது தெளித்தார். சில நொடிகளில் நவாபின் மகன் துயில் நீங்கி எழுவதைப்போல, உயிர்த் துடிப்புடன் எழுந்து உட்கார்ந்தான்! அதைக் கண்ட நவாப், தன் கண்களையே நம்ப முடியாதவனாக, மகனைக் கட்டிக்கொண்டு கண்ணீர்விட்டான்.

“சுவாமி! என்னுடைய நற்பயன் தாங்கள் தற்செயலாக இங்கு வந்து சேர்ந்தீர்கள். கல்லறை என்றும் பாராமல், எனக்கு மன ஆறுதல் கொடுப்பதற்காகவே, விஷயத்தைக் கேட்டறிந்து எனக்குச் சொல்லி அனுப்பினீர்கள். தங்கள் தெய்விக சக்தியால் எனது செல்வத்தை எனக்குத் திரும்ப அளித்துவிட்டீர்கள். இதற்கு நான் பதிலுக்கு என்ன செய்ய முடியும்? தாங்கள் எது கேட்டாலும் அளிக்கத் தயாராக இருக்கிறேன்!" என்றான்.

ஶ்ரீராகவேந்திரர்சுவாமிகளிடம் இல்லாததையா நவாப் கொடுக்க முடியும்? இருந்தும் அந்த அன்பனின் மன திருப்திக்காக, அவன் காணிக்கையாகக் கொடுத்த கிருஷ்ணாபூர் கிராமத்தை மானியமாக ஏற்றுக்கொண்டார். தனது புனிதப் பயணத்தைத் தொடர்ந்தார்...

வழியில் ஷிரஸங்கி என்ற ஊரில் தங்கவேண்டியிருந்தது. அவர் வந்திருப்பதைக் கேள்விப்பட்டதும், அந்த ஊர் மக்கள் யாவரும் திரண்டு வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வேதங்களைக் கற்றுணர்ந்த அந்தணர்கள். அவர்கள் கண்ணீர் பெருக்கியபடி கைகட்டி நின்றார்கள்.

"என்ன நடந்தது... ஏன் இப்படிச் சோர்ந்து நிற்கிறீர்கள்... குழந்தையைப்போலக் கண்ணீர்விட்டு அழுகிறீர்கள்?" என்று கேட்டார் சுவாமிகள்.

அவர்களிடையே முதியவராக இருந்த ஓர் அந்தணர், சுவாமிகளிடம் முறையிட முன்வந்தார். அவரை அடி பணிந்து நின்றபடி நடுங்கும் குரலில் "நாங்கள் மழை இல்லாமல் தவிக்கும் பயிர்களைப்போல வாழ்ந்துகொண்டிருக்கிறோம், வேதங்களை ஓதுவதையும்கூடச் செய்ய முடியவில்லை!" என்று சொல்லிக் கண்ணீர்விட்டார்.

"ஏன்? இந்தப் புனிதமான காரியத்தைச் செய்வதற்குக்கூடத் தடையா என்ன... யார் அப்படிச் செய்வது?" என்று கேட்டார் சுவாமிகள்.

"இந்த ஊரையே தனது அதிகாரத்தால் அடக்கிவைத்திருக்கும் பாளையக்காரர் நாத்திகர்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை வெறுப்பவர். நாங்கள் யாகத் தீ வளர்ப்பதையும், அக்னிக்கு அர்ப்பணம் செய்வதையும் அவர் வேண்டாத செயலாக நினைக்கிறார். அதனால் எங்களைத் தடுத்துப் பார்த்தார். நாங்கள் மறுக்கவே, நாங்கள் உணவுக்காக உழுது பயிரிட வைத்திருந்த நிலத்தையெல்லாம் பிடுங்கிக்கொண்டுவிட்டார். விளையும் நெல்லை அவரே எடுத்துக்கொண்டு போய்விட்டார். எங்களால் தொழில் செய்யவும் முடியவில்லை. உணவுக்கும்கூட வழி இல்லை!" என்று தங்கள் குறைகளை விவரமாக எடுத்துக் கூறினார் அந்தணர்.

சுவாமிகள் எல்லாவற்றையும் அறிந்தவர். அவர்களுடைய துயரத்தை நீக்கவே அங்கு வந்திருப்பவர். ஆயினும், எல்லா விஷயங்களையும் குழந்தையைப்போல் கேட்டுவிட்டு, பிறகு அவர்களுக்கு ஆறுதல் கூறுவதைப்போல, "நல்லது. இங்கே எனது தலைமையில் ஒரு பெரிய யாகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள். நானே முன்னின்று நடத்திவைக்கிறேன். கவலைப்படாதீர்கள்!" என்று சொல்லியனுப்பினார்.
மாபெரும் யாகம் நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்றன. அந்தத் தகவல் பாளையக்காரர் காதையும் எட்டியது. அவர் மிகுந்த கோபத்துடன் சுவாமிகளைச் சந்திக்க வந்து சேர்ந்தார். மிகுந்த மன அமைதியுடன் பாளையக்காரரை அழைத்து அமரச் செய்தார் சுவாமிகள்.

ஶ்ரீராகவேந்திரர்

"எதற்காக இந்த யாகம்? நல்ல உணவுப் பொருள்களையும், பட்டு வஸ்திரங்களையும், விலை உயர்ந்த ரத்தினங்களையும் எரியும் நெருப்பில் இடுவது பைத்தியக்காரத்தனம் அல்லவா?" என்று கேட்டார் பாளையக்காரர்.

"பலன் இல்லாவிட்டால் அது பைத்தியக்காரர் செய்கைதான். ஆனால், மழை பொழியவும், பயிர்கள் செழிக்கவும், நாடு வளம் பெறவும், தெய்வங்களைப் பிரார்த்திப்பதற்காக அதைச் செய்கிறோம். அந்த நற்பலன் கிடைத்தால் யாகம் செய்வது புனிதமான காரியமே அல்லவா?" என்று புன்னகையுடன் கூறினார் சுவாமிகள்.

"பயிர் விளைய விதைகளைப் போடுகிறோம். பலன் கிடைக்கிறது. இதுவும் அப்படி என்று தாங்கள் நிரூபிக்க முடியுமா? மந்திரங்களுக்கு அந்தச் சக்தி உண்டா?" என்று கேட்டார் பாளையக்காரர்.

"நிச்சயம் உண்டு. நீங்கள் சொன்னபடி விதையை எப்படிப் போடுகிறீர்கள்? காலால் மிதித்து, மாட்டைப் பூட்டி உழுத சகதியில் அல்லவா மணியான பொறுக்கு விதைகளை அள்ளி வீசுகிறீர்கள்? விவரம் தெரியாத ஒருவனுக்கு அது அநியாயம் என்று தோன்றும் இல்லையா... உண்மையை உணர்ந்த நீங்கள் அதைப் பொறுப்பான செயலாகவே கருதுவீர்கள் அல்லவா?" என்று கேட்டார் சுவாமிகள்.

பாளையக்காரர் திகைத்துப் போனார். "நல்லது. சகதியில் எறிந்த நெல் பசுமையான பயிராக முளைக்கும் என்று என்னால் நிரூபிக்க முடியும். பட்டுப்போன மரத்தைத் தாங்கள் மந்திர சக்தியால் உயிர் பெற்றுப் பசுமையாக வளர்க்கச் செய்ய முடியுமா? செய்தால், நான் உங்கள் வாதத்தை ஏற்றுக்கொள்கிறேன்." என்று சவால்விட்டார் பாளையக்காரர்.

பட்டுப்போன சில மரங்கள் இருந்த நிலப்பகுதியையே யாகபூமியாகத் தேர்ந்தெடுத்தார் சுவாமிகள். அங்கேயே யாகத்தை நடத்தினார். தாமே மந்திரங்களைக் கூறி தீர்த்தத்தை அந்த மரங்களின் மீது தெளிக்கச் செய்தார். பட்ட மரங்கள் துளிர்த்தன. வறண்டு கிடந்த அந்த பூமியைப் பெருமழை பெய்து குளிர்வித்தது!

ஶ்ரீராகவேந்திரர்

பாளையக்காரர் எல்லோரையும் அழைத்துக்கொண்டு வந்து சுவாமிகளின் பாதங்களில் விழுந்து வணங்கினார். "நான் மிகக் கொடியவனாக நடந்துகொண்டுவிட்டேன். என்னை மன்னித்து, காப்பாற்றுங்கள். தாங்கள் என்ன கட்டளை இட்டாலும், அதை உடனே நிறைவேற்றுவேன்’’ என்று பணிந்து கூறினான்.

உடனே ராகவேந்திரர் அந்தணர்களிடமிருந்து பெற்ற நிலங்களை அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கும்படி கூறினார். மேலும், அவர்கள் யாகம் செய்வதற்கு எந்தத் தடையும் விதிக்கக் கூடாது என்றும் கூறினார். பாளையத்தாரும் அவரின் சொல்லுக்கு இணங்கி அந்தணர்களிடமிருந்து பெற்ற நிலங்களைத் திருப்பி அளித்தான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement