வெளியிடப்பட்ட நேரம்: 08:36 (02/11/2017)

கடைசி தொடர்பு:08:36 (02/11/2017)

மரணம் அழிவல்ல, வாழ்வுக்குச் செல்லும் ஒரு வழி! - அறிவுறுத்தும் கல்லறைத் திருநாள் #AllSoulsDay

றந்தவர்களை நினைத்துப் பார்க்கும்விதமாக `அனைத்து ஆன்மாக்கள் தினம்' அல்லது `கல்லறைத் திருநாள்' கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாளாக (All Soul's Day அல்லது The Commemoration of All the Faithful Departed) கிறிஸ்தவ சபைகள் சில இறந்தோரை நினைவுகூர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்யும் ஒரு சிறப்பு விழாவாகும்.

கல்லறைத் திருநாள்

கத்தோலிக்கத் திருச்சபை உள்பட சில சபைகளால் ஆண்டுதோறும் நவம்பர் 2-ம் தேதி கொண்டாடப்படும் இந்தத் திருவிழா, `நமது வாழ்வு முடிவற்ற ஒரு திருப்பயணம்' என்பதை இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டும்விதமாக அமைந்துள்ளது. அதாவது, இறைவன் நமக்கு வழங்கியுள்ள வாழ்வு என்னும் அருட்கொடை, மயானத்துடன் முடிந்துவிடும் ஒரு மாயை அல்ல. மாறாக உண்மை, அன்பு, சகோதரத்துவம் என்னும் இறையாட்சியின் விழுமியங்களைக் கட்டி எழுப்ப நடத்தப்பட்ட போராட்டங்களின் வரலாற்றுக் கல்வெட்டுக் காப்பியங்கள் என்பதை நினைவுபடுத்தவே இந்த விழா. கிறிஸ்தவனின் சாவு, அழிவாகப் பார்க்கப்படுவதில்லை; அது வாழ்வுக்குச் செல்லும் வழியாகவே பார்க்கப்படுகிறது.

இன்னும் சொல்லப்போனால், இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பே கிறிஸ்தவனின் சாவை ஒளிர்விக்கிறது. வாழ்வின் முடிவு மரணம். என்றாலும், அதுதான் நிலையான வாழ்வின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. இயேசுவிடம் நம்பிக்கைகொள்பவர்கள் என்றென்றும் வாழ்வார்கள். இறப்புக்குப் பின்னர், இறை அமைதியில் நிம்மதி பெறவியலாத ஆன்மாக்களுக்கு பாவங்கள் தடையாக இருக்கின்றன. அந்தத் தடைகளிலிருந்து விடுபட மன்றாட்டுகளும் (ஜெபம்), திருப்பலி (வழிபாடு) மற்றும் பிறர்மீது அன்பு செலுத்தும் செயல்களும் தேவைப்படுகின்றன.

கல்லறைத் திருநாள்

கல்லறைத் திருநாளன்று இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளைச் சுத்தம் செய்வார்கள். பூக்கள் தூவி, மலர் மாலை சூடி, மெழுகுதிரிகள் ஏற்றி, ஊதுவத்தி கொளுத்திவைப்பார்கள். ஒவ்வொருவரும் இறந்துபோன அவரவர் சொந்தங்களை நினைத்து அவர்களுக்காகக் கண்ணீர்விட்டு ஜெபம் செய்வார்கள். ஒருவகையில் இந்தக் கல்லறைத் திருநாள் நன்றியின் திருவிழாவாகவும் பார்க்கப்படுகிறது. அதாவது, `நீங்கள் இறந்துவிட்டாலும், உடலளவில் நீங்கள் எங்களோடு இல்லாவிட்டாலும், நாங்கள் உங்களை ஒருபோதும் மறப்பதில்லை. உங்களை, உங்கள் செயல்களை நினைத்துப் பார்க்கிறோம். இறப்பு, ஒருபோதும் நம்மைப் பிரித்துவிட முடியாது. நமது உறவு என்றென்றும் தொடரும்' என்கிற செய்தியையே இந்தக் கல்லறைத் திருநாள் வெளிப்படுத்துகிறது.

கல்லறைத் தோட்டங்களில் உயர்ந்தவன் - தாழ்ந்தவன், ஏழை - பணக்காரன், ஆண் - பெண் போன்ற எந்தவிதமான வேறுபாடுகளும் கிடையாது. `மனிதனின் பிறப்பிலும் சமத்துவம், இறப்பிலும் சமத்துவம். ஏனெனில், இவை இரண்டும் கடவுளின் கையில்! அனைத்து வேறுபாடுகளும் இவை இரண்டுக்கும் இடையில்தான் உள்ளன. காரணம், அவை உங்கள் கைகளில்தான் இருக்கின்றன. சமத்துவத்தில் பிறந்த நீங்கள், சமத்துவத்தில் இறக்கும் நீங்கள், ஏன் வேறுபாடுகளை ஏற்படுத்துகிறீர்கள்?' என்னும் கேள்வியை எழுப்புகின்றன கல்லறைகள். முரண்பாடுகளைக் களைந்து வேறுபாடுகளைக் கொண்டாட அழைக்கின்றன கல்லறைகள். ஆழ்ந்த அமைதியை, `மயான அமைதி’ என்கிறோம். சமத்துவ உணர்வுடன் அமைதியுடன் வாழக் கற்றுக்கொடுக்கின்றன கல்லறைகள்.

`சில்லறை தேடி அலையும் மனிதர்களே... வாழப் பொருள் தேவை. அதேவேளையில் வாழ்வதற்கும் பொருள் வேண்டாமா?’ என்று சிந்திக்கத் தூண்டுகிறது கல்லறைத் திருநாள். நமது வாழ்வு, இறைவன் நமக்குக் கொடுத்துள்ள மாபெரும் கொடை. மாண்புமிக்க அத்தகைய வாழ்வை நல்லமுறையில் வாழ நினைவூட்டுகின்றன கல்லறைகள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்