"தர்மம் செய்வதைத் தள்ளிப்போடக் கூடாது"- திருமுருக கிருபானந்த வாரியார் | Interesting information about Kirupanandha Variyar

வெளியிடப்பட்ட நேரம்: 15:57 (08/11/2017)

கடைசி தொடர்பு:15:57 (08/11/2017)

"தர்மம் செய்வதைத் தள்ளிப்போடக் கூடாது"- திருமுருக கிருபானந்த வாரியார்

சிந்தையெல்லாம் சிவமே நிறைந்திருக்க, சிவப் பணி செய்த அடியார்களின் பெருமையைப் போற்றும் பெரிய புராணத்தில், 63 நாயன்மார்களின் புனித வரலாற்றை நாம் படித்திருப்போம். ஆனால், பெரிய புராணத்தில் இடம் பெறவில்லை என்றாலும், 64-வது நாயன்மாராகப் போற்றப்பெறும் சிறப்பினுக்கு உரியவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். தமிழகம் மட்டுமல்லாமல், தமிழர் வாழும் உலக நாடுகள் அனைத்திலும் அருள் மணம் கமழும் ஆன்மிகத் தென்றலைத் தவழவிட்டவர். கடவுள் மறுப்புக் கொள்கை நாடெங்கும் பரவிய காலகட்டத்தில், ஓய்வறியா பயணம் மேற்கொண்டு, தமிழின் இனிமையும் பக்திச் சுவையும் சேர்ந்த தம் சொற்பொழிவுகளால் ஆன்மிக நெறிகளை போதித்தவர் வாரியார் சுவாமிகள். எத்தனை ஆயிரம் பக்திச் சொற்பொழிவுகள்... எத்தனை எத்தனை ஆலய புனரமைப்புப் பணிகள்..!  

வாரியார்

வேலூர் மாவட்டம் காங்கேயநல்லூரில் 1906-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 25-ம் நாள் வாரியார் சுவாமிகள் பிறந்தார். மூன்று வயதில் இருந்தே தம் தந்தையிடம் கல்வி பயின்றார். கல்வியுடன் புராண இதிகாசங்களையும் கற்றுத் தேர்ந்தார். 18 வயதிலேயே இறையருள் பெற்று தமது சொற்பொழிவுப் பணியைத் தொடங்கினார். சுமார் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயிரக்கணக்கான சொற்பொழிவுகள் நிகழ்த்தியிருக்கும் வாரியார் சுவாமிகள், 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், 150-க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியிருக்கிறார். திரைத்துறையில் வசனகர்த்தாவாக அறிமுகமாகி, முருகப் பெருமானின் புகழைக் கூறும் சில படங்களிலும் நடித்தார்.

வீணை வாசிப்பதில் நிபுணத்துவம் பெற்ற வாரியார் ஸ்வாமிகள் அனைவராலும் விரும்பக்கூடிய சொற்பொழிவாளராகவே திகழ்ந்தார். ஆன்மிகப்பெரியோர்கள் அனைவரும் மதிக்கும் உயர்ந்த குணம் கொண்டவராகவே வாழ்ந்தார். பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர், வசனகர்த்தா, தீட்சை அளித்த ஞானகுரு, நடிகர், ஆன்மிக சேவகர் எனப் பன்முகம் கொண்டவராக இவர் விளங்கினார். பூமியில் பிறந்து வானுறையும் தெய்வங்களைத் தொழுது, தொண்டாற்றி வந்த இந்த மகான், வானிலேயே மறைந்து போனார். ஆம், 1993-ம் ஆண்டு லண்டன் சென்று இந்தியா திரும்பிய வாரியார் சுவாமிகள், நவம்பர் 7-ம் தேதி விமானப் பயணத்திலேயே மறைந்தார். பாமர மக்களின் பக்திக்காவலர் கிருபானந்த வாரியார் பற்றி சுவாரஸ்யமான தகவல்களை அவரது தம்பி மகனான அம்மையப்பன் அவர்களிடம் கேட்கத் தொடர்பு கொண்டோம்.

அம்மையப்பன்"தேவைக்கு மேலே ஆசைப்படுவதுதான் இன்றைக்கு மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது. வாரியார் சுவாமிகள் கடைசி வரை தனது தேவைக்கு மேல் எதையும் வைத்துக்கொண்டவர் இல்லை. எளிமையான, சிக்கன வாழ்வைத்தான் அவர் மேற்கொண்டார். ஒரு பென்சிலைக்கூட கடைசி வரை அவர் பயன்படுத்துவார். தன்னிடம் வந்தா எல்லாச் சொத்துகளையும் பிறருக்கு வாரி வழங்கிய வள்ளல் அவர். எல்லா ஆண்டும் சஷ்டி விரதத்தினை வேலூரில் இருக்கும் ஆடிட்டர் ஜானகிராமன் வீட்டில்தான் அனுஷ்டிப்பார். ஆறு நாள்கள் கடுமையான விரதமிருந்து முருகப்பெருமானை வணங்குவார். விரத நிறைவு நாளில் அவருக்கு பாத பூஜை செய்து புது வேட்டி கொடுத்து வணங்குவார் ஜானகிராமன்.

ஒரு கந்தசஷ்டியின்போது, விரத நிறைவு நாளில் வழக்கம்போல் ஒரு புது வேட்டியை ஜானகிராமன் கொடுத்து வணங்கினார். சுவாமிகளும் மகிழ்ச்சியுடன் அந்த வேட்டியை உடுத்திக்கொண்டார். அப்போது சுவாமிகளின் அடியார் ஒருவர், சுவாமிகள் உடுத்தியிருந்த வேட்டியை தானமாகக் கேட்டார். உடனே, சுவாமிகளும் மாற்று வேட்டியைக் கட்டிக்கொண்டு புது வேட்டியைக் கொடுத்து விட்டார். நாங்கள் பதறிப்போய், 'நாளைக்குக் கொடுத்து இருக்கலாமே, இது என்ன, புது வேட்டியை உடனே கொடுத்துவிட்டீர்கள். அதுவும் உங்களுக்குப் பரிசாக அளித்தவர் அருகில் இருக்கும்போதே ஏன் இந்த அவசரம்?' என்று கேட்டோம். அவர் சிரித்தவாறே, 'தானம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டால் உடனே கொடுத்து விட வேண்டும். அதுதான் தர்மம். யோசித்தால், நாள்களை தள்ளிப்போட்டால் அது மனதில் சஞ்சலங்களை உருவாக்கி விடும்' என்றார். தானம் அளிப்பதில் அத்தனை இன்பம் அவருக்கு! கோயில்களுக்கு மட்டுமல்ல, தமிழகமெங்கும் உள்ள பல அநாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்களுக்கும் மாதாமாதம் பணம் அனுப்புவார். அதையும் யாரையோ விட்டு எல்லாம் செய்ய மாட்டார். அவரே மணி ஆர்டர் படிவங்களைப் பூர்த்தி செய்து அனுப்புவார். அள்ளிக்கொடுப்பதில் அவருக்கு அலாதிப் பிரியம். கடைசி வரை ஒரு சந்நியாசியாகவே வாழ்ந்தார். அடுத்த வேளை உணவை எடுத்து வைத்துக்கொள்வதுகூட ஆன்மிக அடியாருக்கு இழுக்கான செயல் என்று நம்பினார்.

1993-ம் ஆண்டு வாரியார் சுவாமிகள் லண்டன் செல்ல இருந்தபோது நானும், சிலரும் வழியனுப்ப விமான நிலையம் சென்றோம். அப்போது அவரின் வழிச்செலவுக்கு பிரிட்டன் பவுண்ட்ஸ் வேண்டும் என்பதால், எவ்வளவு பவுண்ட்ஸ் வேண்டும் என்று அவரிடம் கேட்டோம். பதிலுக்கு வழக்கம்போல் சிரித்து விட்டு, 'என்னிடம் இப்போது இருக்கும் ஐம்பது காசுகளே எனக்குச் சுமைதான். என்னை இங்கிருந்து அனுப்பி வைக்கும் முருகப் பெருமான், என்னை லண்டனில் கைவிட்டு விடுவானா? எல்லாப் பயணத்தையும் அவன் பார்த்துக்கொள்வான்' என்று கூறிவிட்டார்.

கிருபானந்த வாரியார்

தன் வாழ்க்கை முழுவதையும் முருகப் பெருமானின் புகழை வாய் மணக்க மணக்கப் பாடிப் பரவிய வாரியார் சுவாமிகளின் வாழ்க்கை உயர்வான வாழ்க்கை; உன்னதமான வாழ்க்கை! அதனால்தான், அவருடைய புனித வாழ்க்கையும் உயரத்திலேயே நிறைவு பெற்றது. ஆம். லண்டனிலிருந்து புறப்பட்ட வாரியார் சுவாமிகள், விமானத்தில் வந்துகொண்டிருக்கும்போதே தம்முடைய மூச்சை நிறுத்திக்கொண்டு, முருகப் பெருமானுடன் ஐக்கியமாகிவிட்டார். சிந்தனை, சொல், செயல் என்று அனைத்தையும் முருகப் பெருமானுக்கே அர்ப்பணித்து வாழ்ந்த வாரியார் சுவாமிகள் இன்று இல்லையென்றாலும், அவர் விட்டுச்சென்ற இலக்கியங்களும், பொன்மொழிகளும் இன்றும் நம்மை வழிநடத்திச் செல்கின்றன'' என்று சிலிர்ப்புடன் கூறினார்.

 

 


டிரெண்டிங் @ விகடன்