Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னைக்கு வந்த ஷீரடி சாய் பாபாவின் பாதுகைகள்... பரவசத்தில் பக்தர்கள்! #ShirdiSaiBaba

றைவனை தரிசிக்கும்போது திருவடி தொடங்கி திருமுடி வரை தரிசிக்க வேண்டும் என்பார்கள். இறைவனின் திருவடிகளுக்கு அத்தனை உயர்வு; அத்தனை பெருமை! திருவடிகளை அலங்கரிக்கும் பாதுகைகளின் மகிமையை விவரிக்க முடியாது. தீட்சைகளிலேயே திருவடி தீட்சைதான் மிகவும் உயர்வானதாகச் சொல்லப்படுகிறது. பாதுகைகளின் மகிமையை உணர்ந்ததால்தான் போலும், பரதன் ஶ்ரீராமபிரானின் பாதுகைகளை தலையில் தாங்கிச் சென்று அரியாசனத்தில் வைத்து அதன் பிரதிநிதியாக ஆட்சி புரிந்தான்.

சாய் பாபா

மகான்களின் பாதுகைகளைத் தரிசிக்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்கிறதென்றால், நாம் பாக்கியசாலிகள்தான். அந்த வகையில் சென்னைவாழ் மக்களுக்கு அத்தகைய பாக்கியம் கிடைத்திருக்கிறது. அந்த அற்புதமான நிகழ்வைப் பார்ப்போமே...

சாய்பாபா கோயில்

நம்பிய அடியவர்களைக் காக்கும் கண்கண்ட தெய்வமாம், ஸ்ரீ சாய் பாபா மஹாசமாதி அடைந்து நூறாண்டுகள் ஆகிவிட்டன. எனினும் அந்த மகானின் அருள்சக்தி நாள்தோறும் பல்கிப்பெருகி அடியவர்களைக் காத்து வருகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள ஷீரடி ஶ்ரீசாய்பாபாவின் ஆலயம் 1952-ம் ஆண்டு முதலே சாய்பக்தர்களுக்கு அருள்நிறைந்த சரணாலயமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு சாய்பாபாவின் மஹாசமாதி நூற்றாண்டு என்பதை முன்னிட்டு இந்த ஆலயம் பல சிறப்பான வழிபாடுகளையும், உற்சவங்களையும் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஷிரடி சாய் பாபாவின் சந்நிதானத்தில் உள்ள ஸ்ரீ சாய்பகவானின் திருப்பாதுகைகளைச் சென்னைக்கு எழுந்தருளச் செய்து பக்தர்களின் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. இன்று காலை 6 மணிக்கே பகவானின் பாதுகைகள் வந்து விடும் என்று எதிர்பார்த்த நிலையில், மதியம் 12.30 மணி அளவிலேயே மயிலாப்பூர் ஆலயத்தை வந்தடைந்தது.

சாய்பாபா பாதுகைகள்

காலை 6 மணி வாக்கில் இருந்தே தேவலோகம் போல அலங்கரிக்கப்பட்டு இருந்த சாய்பாபாவின் ஆலயம், பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. எங்கும் கீர்த்தனைப் பாடல்கள் ஒலிக்க ஸ்ரீ சாய்பாபா சர்வ அலங்காரத்தோடு வீற்றிருந்தார். நீண்ட வரிசையில் நின்று பக்தர்களும் சாய்பகவானை தரிசித்துக்கொண்டிருந்தார்கள். நேரம் கடந்து கொண்டே இருந்தது. சாய்பகவானின் திருவடி பாதுகைகள் வரவே இல்லை. சாய்பகவானின் திருவடிகளை அடைவது என்ன அத்தனை எளிதா என்று பக்தர்களும் பேசிக்கொண்டார்கள். அதேநேரம், எத்தனை நேரமானாலும் சாய்பகவானின் பாதுகைகளைத் தரிசிக்காமல் செல்வதில்லை என்ற வைராக்கியமும் அவர்களின் முகங்களில் பிரதிபலித்ததையும் நம்மால் காணமுடிந்தது.

கோயிலின் எல்லாப் பக்கமும் பக்தர்களும், காவல்துறையினரும் நிரம்பியிருக்க, ஒருபுறம் அன்னதான கூட்டமும் வியக்க வைத்தது. சிறப்பு ஆராதனைகளும், வழிபாடுகளும் சாய்பகவானுக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. 

சுகி சிவம்

கோயிலின் உள்ளே இருந்த அரங்கத்தில் 11 மணி அளவில் சொற்பொழிவாளர் சுகி சிவம் சாய்பகவானின் அருளினைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர்கூறிய ஒரு கருத்து ஆழமாக சிந்திக்க வைத்தது. "கோயில் யானையை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். அது ஓர் இடத்தில் நிற்காமல் அசைந்து கொண்டே இருக்கும். கட்டியுள்ள நிலையிலும் முன்னும் பின்னும் அசைந்தபடியும், தும்பிக்கையை ஆட்டியபடியும் இருக்கும். அசைந்து கொண்டே இருப்பதுதான் யானையின் இயல்பு. காட்டில் இருக்கும் யானைகள் ஓர்  இடத்தில் சும்மாவே இருப்பதில்லை. கேரளத்தின் காட்டில் தொடங்கி, தமிழகம் வழியே கர்நாடக மாநிலத்தின் வடக்கு எல்லையில் உள்ள காடுகள் வரை அவை ஆறு மாதங்கள் பயணித்து இரையெடுத்தபடியே செல்லும். மீண்டும் அங்கு மழைக்காலம் ஆரம்பித்ததும், பயணத்தை வந்த வழியே தொடங்கும். இப்படி ஆண்டு முழுக்க அலைந்தபடியே இருக்கும் ஜீவராசி யானை. இதை ஒரே இடத்தில் வைத்துக்கொள்வது என்பது கடினமான விஷயம்தான். கோயிலில் இருக்கும் யானை ரொம்ப அசைகிறது என்றால் உடனே பாகன் அதனிடம் அங்குசத்தைக் கொடுத்து விடுவான். அவ்வளவுதான். அங்குசம் என்னவோ மிகப்பெரிய பாரம் என்பதைப்போல நினைத்து யானை ஆடாமல் அசையாமல் அப்படியே நிற்கும்.

மனித மனமும் அப்படித்தான் எப்போதும் அலைந்து கொண்டே இருக்கும். அதனால் சலனமும், சஞ்சலமும் தொடர்ந்து கொண்டே இருக்கும். அலைபாயும் இந்த மனதை அடக்கவே, ஒரு குரு பாகனைப்போல வந்து இறைவன் நாமம் எனும் அங்குசத்தைக் கொடுத்து விடுவார். அவ்வளவுதான் மனம் அலைபாய்வது நின்று மந்திர ஜபத்திலேயே லயித்து விடும். இந்தக் கருத்தை பகவான் ரமணர் கூறியுள்ளார். உங்கள் மன ஆட்டங்கள் யாவும் ஒருமித்து நிற்க வேண்டுமானால் சாய்பகவானின் நாமத்தை பிடித்துக் கொள்ளுங்கள். அது உங்களின் வாழ்வை வளமாக்கும்' என்றார். அவரது பேச்சினை கேட்டுக்கொண்டிருக்கும்போதே வெளியே சாய்பகவானை துதிக்கும் கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. வெடிச்சத்தங்களும் காதுகளைத் துளைத்தன. பகவானின் பாதுகைகள் வந்து விட்டன என்று பக்தர்கள் கூட்டம் வெளியே பாய்ந்தது.

சாய் பாபா

அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஸ்ரீ சாய்பகவானின் பாதுகைகள் வந்திருந்தன. மந்திர கோஷங்களோடு பாதுகைகளை எடுத்துச்சென்று, சாய்பாபா கோயிலுக்கு எதிரில் இருக்கும் ஶ்ரீகபாலீஸ்வரர் கற்பகாம்பிகை மண்டபத்தின் முதல் தளத்தில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைத்தனர்.

பாதுகைகளுடன் ஷீரடியிலிருந்து பூஜாரிகளும், சில காவலர்களும் வந்து இருந்தார்கள். அலை மோதிய பக்தர்கள் கூட்டத்தை காவல் துறை ஒழுங்குபடுத்தி வரிசையில் அனுப்பி வைத்தது. அங்கும் சாய்பக்தர்கள் கூடி கீர்த்தனைகளைப் பாடிக்கொண்டிருந்தனர். கண்ணாடிப்பேழைக்குள் இருந்த பகவான் சாய்பாபாவின் பாதுகைகளை வணங்கிய பக்தர்கள் சிலர் உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் விட்டு அழுதனர். 'சாய்பகவானின் திருவடிகளைத் தாங்கிய பாதுகைகளைத் தரிசிக்க என்ன தவம் செய்தோமோ' என்று அவர்கள் கண்ணீர் சிந்தினர். வெளியே வானமும் தன் பங்கிற்கு நீர் மலர் தூவி வரவேற்பை அளித்துக்கொண்டிருந்தது.

சாய்பாபா பாதுகை

இன்றும் (8-11-17) நாளையும் (9-11-17) மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கற்பகாம்பிகை மண்டபத்தில் இந்தத் திருப்பாதுகைகள் தரிசிப்பதற்கு வைக்கப்பட்டிருக்கும். காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சென்று தரிசிக்கலாம். நாளை இரவு 7 மணிக்கு மேல், இந்தத் திருப்பாதுகைகள் மயிலாப்பூர் மாடவீதிகளில் அலங்காரமாக ஊர்வலம் கொண்டு செல்லப்படும். பின்னர் மீண்டும் ஷீரடி ஆலயத்துக்கு உபசாரங்களுடன் அனுப்பிவைக்கப்படும். காணக்கிடைக்காத அரிய பொக்கிஷம் சாய்பகவானின் திருப்பாதுகைகள், அது நம்மருகே வந்து இருப்பது உண்மையிலேயே நாம் செய்த பாக்கியம்தான்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement