Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘தமிழ்க் கடவுள் முருகன்’ தொடரின் முருகன் உண்மையில் தமிழ்க் கடவுள்தானா?

தொலைக்காட்சிகளில் புராண, இதிகாசத் தொடர்கள் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் காலமிது. `கர்ணன்’, `மாகாபாரதம்’, `ராமாயணம்’, `விநாயகர்’... என அத்தனை தமிழ் சேனல்களும் வரிந்துகட்டிக்கொண்டு புராணத் தொடர்களை ஒளிபரப்பிவருகின்றன. இவற்றில், சில வாரங்களாக விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் `தமிழ்க் கடவுள் முருகன்’ தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒன்று.  பிரமாண்டமான செட்டிங்ஸ், மிரளவைக்கும் காட்சியமைப்புகள், கிராபிக்ஸ்... என நவீன காட்சி ஊடகத்தின் அத்தனை தொழில்நுட்பங்களையும் கலந்துகட்டி ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது `தமிழ்க் கடவுள் முருகன்’. இருந்தாலும், இந்தப் புராணக் கதை நம் தமிழ்க் கலாசாரத்துடன் பொருந்திவரவில்லை என்ற சர்ச்சை பரவலாக எழுந்திருக்கிறது. முருக பக்தர்களில் பலரும், பல பார்வையாளர்களும் இந்தத் தொடர் குறித்தத் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். உண்மையில் `தமிழ்க் கடவுள் முருகன்’ தொடரின் முருகன் உண்மையில் தமிழ்க் கடவுள்தானா? முருகக் கடவுள் வரலாறு பற்றி ஆய்ந்து அறிந்து கற்ற அறிஞர் பெருமக்கள் சிலரிடம், இது பற்றிக் கேட்டோம்.

முருகன்


வலையப்பேட்டை கிருஷ்ணன் (ஆன்மிகப் பேச்சாளர்):

எடுத்த எடுப்பிலேயே ஒரு விஷயத்தைச் சொல்லிடுறேன். பக்தி மார்க்கம் வளர்றதுக்காகவும் மேல்நாட்டு மோகத்துல இப்போ உள்ள இளைய தலைமுறை போயிடாம இருக்கிறதுக்காக பக்திக் கதைகள்  டி.விவலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் சீரியலா வர்றதை நான் வரவேற்கிறேன். அதுல எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனா, 'தமிழ்க் கடவுள் முருகன்'ங்கிற தலைப்புக்கும் அதுல வர்ற நிகழ்ச்சிகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாம இருக்கிறதுதான் எனக்கு ஆதங்கமா இருக்கு. இது ரொம்ப வருத்தப்படவேண்டிய விஷயம்.

இத்தனை பெரிய கதையை சீரியலா பண்ணுறவங்க, நிச்சயம் அதற்கு ஸ்டோரி போர்டுவெச்சு விவாதிச்சுதான் இந்தக் கதையை ரெடி பண்ணி இருப்பாங்க. ஆனா, நாம காலகாலமா அறிந்து வந்த முருகக் கடவுள் பற்றிய கதை, வழிபட்டு வந்த முருகன் வேற.

இவங்க காட்டுற இந்த முருகன் வேற. பேசாம இதுக்கு 'இந்திக் கடவுள் முருகன்'னு பேரு வெச்சிருக்கலாம். இப்படிப்பட்ட கதைகள் வளர்ந்துவரும் நம்ம குழந்தைங்க மனசுல மாறுபட்ட வரலாற்றுப் பதிவாக, வேறுவிதமாகப் பதிவாயிடுமேனுதான் வருத்தமா இருக்கு.  

பூமியில முதல்ல தோன்றியது மலை. மலையும் மலை சார்ந்த பகுதியையும் 'குறிஞ்சி நிலம்'னு அழைக்கிறது தமிழர் மரபு. அந்தக் குறிஞ்சி நிலத்துக்கு உரிய கடவுள் முருகன். 'கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தத் தமிழ்'னு தமிழ் மொழியின் பெருமையாகப் பாடுவாங்க. அத்தனை சிறப்பு வாய்ந்த தமிழுக்கு முதல்வன் சிவன். அந்த சிவன் முதலில் ஞானத்தைப் போதித்தது முருகனுக்கே.

தமிழ்க்கடவுள் சீரியல் முருகன்

‘முருகன்’ என்ற சொல்லுக்கு `அழகன்’ என்றும் பொருளுண்டு. இந்தத் தொலைக்காட்சித் தொடர்ல வர்ற முருகன் அத்தனை அழகாகவும் இல்லை. நமது தமிழ் மண்ணில் அந்தக் காலத்தில் தயாரிக்கப்பட்ட புராணப் படங்களான `அருணகிரிநாதர்’, `ஔவையார்’, `திருவிளையாடல்’, `ஶ்ரீவள்ளி’, `கந்தன் கருணை’... போன்ற படங்களில் இடம்பெற்ற சிவன், பார்வதி, முருகன் உள்ளிட்ட புராணகாலப் பாத்திரங்கள் எத்தனை அழகானவர்களாக இன்றளவும் நம் மனக்கண்களில் காட்சி அளிக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்."

டாக்டர் கைலாசம் சுப்பிரமணியம் (ஒருங்கிணப்பாளர் குமரன் குன்றம் திருக்கோயில்) 

“இந்தியாவுல இந்துக் கடவுள்களைக் குறிக்கக்கூடிய ஆறுவிதமான சமயங்கள் இருக்கின்றன. சைவம்-சிவன் வழிபாடு, சாக்தம் - சக்தி வழிபாடு, காணாபத்யம் - கணபதி வழிபாடு, வைணவம் - திருமால் வழிபாடு, கௌமாரம் - முருகன் வழிபாடு, சௌரம் - சூரிய வழிபாடுனு ஆறு வகையான சமயங்கள் இருக்குது.  டாக்டர் கைலாசம் சுப்ரமணியம்

கௌமாரம் எனும் முருக வழிபாடு, பக்தர்கள் தங்கள் பிறவிப் பெருங்கடலைக் கடந்து முருகனுடன் கலத்தலே முக்தியாகும் என்கிறது. முருகப்பெருமானின் வழிபாடு தென் தமிழ்நாட்டில்தான் அதிகமாக இருந்தது. இருந்துவருகிறது. 

சிவக்குடும்பம்

வட இந்தியாவுல முருகனை, கார்த்திகேயனாக மூர்த்தியாக வழிபடுறாங்க. அங்கே முருகனுக்கென்று தனியாகக் கோயில்கள் கிடையாது. ஆனால், தென்னிந்தியாவில் குன்று இருக்கும் இடமெல்லாம், குமரன் இருக்கும் இடமென முருகனுக்குத் தனிக் கோயில்கள் ஏராளம் இருக்கு. ஆனா இந்தக் கதை இந்தப் பக்கமும் இல்லாம அந்தப் பக்கமும் இல்லாம தனி ட்ராக்ல போகுது.’’

முருகன்

டாக்டர் சுந்தரம் (அறங்காவலர் குழுத் தலைவர், அறுபடை வீடு முருகன் கோயில், பெசன்ட்நகர்): 

“சமஸ்கிருதத்தில்  இந்து மதப் புராணங்களான சிவபுராணம், விஷ்ணு புராணம், கருட புராணம், ஸ்கந்த புராணம் உள்பட 18 புராணங்கள் உள்ளன. இவை நான்கு லட்சம் சுலோகங்களாக கதை வடிவில் அமையப்பெற்றுள்ளன. இவற்றில் 'ஸ்கந்த புராணம்' மட்டும் ஒரு லட்சம் ஸ்லோகங்களில் உள்ளன. தமிழில் கச்சியப்ப சிவாச்சாரியார் தமிழ்க்கடவுள் முருகனின் வரலாறாக 10,345 செய்யுள்களில் கந்தபுராணத்தைப் பாடியுள்ளார். அவரைத் தொடர்ந்து அருணகிரிநாதர் திருப்புகழில் முருகனின் பெருமைகளை, புகழைப் பாடுகிறார்.  

''ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே! டாக்டர் சுந்தரம்
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!''

இந்த ஒரு பாடல் போதும், கந்தபுராணம் முழுவதையும் நாம் படித்து முடித்ததற்குச் சமம். அருணகிரிநாதர் திருப்புகழின் வாயிலாக எப்பேர்ப்பட்ட பங்குப் பணியை ஆற்றியிருக்கிறார் என்று பாருங்கள். இப்படியாக ஒரு வரலாற்றைச் சொல்லும்போது மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டியதிருக்கிறது. ஆனால், இந்தத் தொலைக்காட்சித் தொடர் அள்ளித்தெளித்த அவசரகோலமாக இருக்கிறது. ராமானந்த சாகரின் `ராமாயணம்’, பி.ஆர்.சோப்ராவின் `மகாபாரதம்’ ஆகியவை இன்றளவும் தமிழ் மக்களால் வரவேற்கப்படுபவை. அந்தளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்காவது நன்றாக இருக்க வேண்டாமா?. 

சிவன்,  பார்வதி உள்பட கதாபாத்திரங்களின் தேர்வு ரொம்பவும் சிறுபிள்ளைத்தனமா இருக்கிறது. சிவன் மீசையும் தாடியும் வெச்சிக்கிட்டு யாரோ மாதிரி இருக்கார். சம்பவங்களும் நமக்கு மிகவும் அந்நியத்தனமாக இருக்கின்றன. கற்பனையான விஷயங்களைச் சமூகக் கதைகள், க்ரைம் த்ரில்லர்கள், சரித்திரக்கதைகளில் எவ்வளவு வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால் நமது புராண, இதிகாசங்களில் வைப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும். அதுவும் மற்ற கதைகள் என்றால்கூட பரவாயில்லை. நமது மக்களால் பெரிதும் அறியப்பட்ட முருகக் கடவுளின் கதையில் இப்படி இருக்கலாமா? என்பதுதான் நம் கேள்வி.’’

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement