வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (09/11/2017)

கடைசி தொடர்பு:19:53 (09/11/2017)

ரெய்டின்போதுகூட கோபூஜை செய்யுமளவுக்கு அதில் என்ன சிறப்பு?

ன்றைக்குத் தமிழகத்தைப் பரபரப்புக்குள்ளாக்கியிருக்கிறது டி.டி.வி. தினகரன் அலுவலகத்தில் நடக்கும் வருமானவரி சோதனை. ஒருபுறம் வருமானவரித் துறை அதிகாரிகளும், பாதுகாப்புக்குக் காவல்துறையினரும் படையெடுக்கிறார்கள்; இன்னொருபுறம், அதே வருமானவரி சோதனை நடைபெறும் இடத்தில் கோபூஜை! உண்மையில் கோபூஜை எதற்காகச் செய்யப்படுகிறது?

கோபூஜை - தினகரன் வீட்டில்...

'இணங்காதார் மனம் கூட இணங்கும்; நீ எதிர்வந்தால் எதிர்காலம் துலங்கும்' என்று கவியரசர் கண்ணதாசன் போற்றிப் பாடிய பசுக்களின் மகிமைகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை. பசு இருக்கும் வீட்டில் பஞ்சம் இருக்காது' என்பது வழக்கு மொழி. பசு இருக்கும் இடத்தில் சகல செல்வங்களும் நிறைந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நம் அத்தனை நிகழ்வுகளிலும் நம்மோடு துணை நின்று நம்மைக் காக்கும் 'பசு' நம் மற்றோர் அன்னை என்றால் அது மிகையில்லை

பசுவுக்கு 'கோமாதா' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. 'கோ' என்னும் சொல்லானது இறைவனையும், அரசனையும் குறிப்பிடும் சொல்லாகும். அரசனுக்கும், இறைவனுக்கும் நிகராகப் போற்றப்பெறும் பசுக்களை வழிபடுவதே கோபூஜை. நம் அத்தனை நிகழ்வுகளிலும் நம்மோடு துணை நின்று நம்மைக் காப்பதால்தான் பசுவை நம் அன்னையாகப் போற்றுகின்றோம். '

கோமாதா

பசுவைப் பற்றிப் புராணங்களில் பல இடங்களில் சிறப்பித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது, பெண்ணின் முகமும் பசுவின் உடலும் கொண்டு தோன்றிய காமதேனுவின் அம்சமாகவே பசுக்களை நாம் போற்றிக் கொண்டாடுகிறோம்.

இறைவனுடைய படைப்புகளில் அவனுக்கு நிகரான ஒரு படைப்பாக பசு சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. பசுவின் உடலில் சகல தெய்வங்களும், மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடித் தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும் வீற்றிருக்கிறார்கள். மேலும் பார் போற்றும் முனிவர்களும், நவகிரகங்களும் இருக்கின்றனர். கோமாதாவின் நான்கு கால்கள் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன.

எனவேதான், மனிதர்கள் பசுக்களிடம் அன்பு காட்டி, பக்தியுடன் பூஜிக்கவும் செய்தார்கள். பகவான் கிருஷ்ணர் பசுக்களைப் போற்றிப் பாதுகாத்து இருக்கிறார். அதனால்தான் அவருக்கு, 'கோபாலன்' என்ற திருப்பெயரும் ஏற்பட்டது. நாம் எல்லோரும் பசுக்களைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்பதற்காகவே, பகவான் கிருஷ்ணர் இப்படி ஒரு லீலையை நிகழ்த்தி இருக்கிறார். அதே துவாபரயுகத்தில்தான், பூமாதா பகவானைப் பிரார்த்திக்கச் சென்றபோது, கோமாதா வடிவத்தில் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.

அதனால்தான் கோமாதாவுக்குப் பூஜை செய்தால், நமக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கிறது. அனைத்து விதமான தோஷங்களும் நீங்குகிறது.

வணங்கும் முறை

கோபூஜை செய்யும் முறை:

இறைவனின் வடிவமாகப் போற்றும் பசுவை பூஜிக்கும்போது, முதலில் கோமாதாவுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, புது வஸ்திரம் சாத்தி, கழுத்தில் மாலை அணிவித்து, தூப தீபங்கள் காட்டி மலர்களால் அர்ச்சனை செய்யவேண்டும். நைவேத்தியமாக அகத்திக்கீரை, சர்க்கரைப் பொங்கல் மற்றும் பழ வகைகளைப் படைக்கவேண்டும். பின்னர், நெய் தீபத்தில் ஆரத்தி எடுக்க வேண்டும். தரையில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்துவிட்டு, மறுபடியும் ஆரத்தி எடுத்து, மூன்றுமுறை வலம் வந்து வணங்கவேண்டும். முக்கியமான விஷயம் பசுவை பூஜிக்கும்போது கன்றுடன் சேர்த்துத்தான் பூஜிக்கவேண்டும். கன்றுக்கும் புது வஸ்திரம், மாலை எல்லாம் அணிவித்து, நைவேத்தியம் செய்ய வேண்டும். அப்போதுதான் கோபூஜை செய்த பலன் கிடைக்கும்.

பசுவே தெய்வம்

வீட்டில் பூஜை நடத்த இயலாதவர்கள், பசுக்களைப் பராமரிக்கும் கோசாலைகளுக்குச் சென்று வழிபடலாம். கோயில்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் கோபூஜையில் வழிபடலாம்.கோபூஜை செய்வதால், அளவற்ற நன்மைகளைப் பெறலாம். முன்வினைப் பயன்களில் இருந்தும் விடுபடலாம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்