திருநாரையூர், குளத்துப்புழை, பேட்டைவாய்த்தலை... குழந்தை வரம் அருளும் பாலதெய்வத் திருத்தலங்கள்!

'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று; குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று' என்றும், 'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்றும் நாம் குழந்தைகளைத் தெய்வத்துக்கு நிகராகப் போற்றுகிறோம். கள்ளம் கபடம் இல்லாத குழந்தைகளின் வடிவில் இறைவனே இருக்கிறான் என்பதால்தான், நாம் குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்கிறோம். குழந்தையானாலும் சரி, தெய்வமே ஆனாலும் சரி நாம் எவ்வளவு ஆத்மார்த்தமாக விரும்பிப் பிடித்துக்கொள்கிறோமோ அவ்வளவு விருப்பமாகக் குழந்தைகளும் தெய்வங்களும் நம்மிடம் பிடிப்புடன் இருப்பர். அந்த தெய்வங்களையே குழந்தை வடிவத்தில் பாலதெய்வத் திருத்தலங்கள் சென்று நாம் வழிபடும்போது, அளவற்ற மகிழ்ச்சி கிடைக்கிறது. நமக்காகவே தெய்வங்கள் குழந்தை வடிவத்தில் காட்சி தருகின்றனர். பால கணபதி; பால முருகன்; பால கிருஷ்ணன்; பால ஐயப்பன்; பாலாம்பிகை என்று பல தெய்வங்கள் பால வடிவத்தில் காட்சி தருகின்றனர்.

பால கணபதி

பால கணபதி - கணபதியின் முப்பத்து இரண்டு வடிவங்களில் பால கணபதியே முதன்மையானவர். அம்மையப்பருடன் குழந்தை வடிவத்தில் காட்சி தரும் பால கணபதி, பொன்னிற மேனியுடன் திருக்காட்சி தருகிறார். குழந்தைகள் இவரை வணங்கினால் ஆன்மிக ஞானத்துடன், சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று வளர்வார்கள் என்றும்,  நல்ல ஒழுக்கத்தை அடைவார்கள் என்றும் கூறுகின்றனர். மேலும் பால கணபதி குழந்தையைப் போன்ற உற்சாகத்தையும், நல்ல உடல்நலத்தையும் வழிபடும் பக்தர்களுக்குத் தருவார் என ஞானநூல்கள் கூறுகின்றன. திருநாரையூரில் பால கணபதியை தரிசிக்கலாம். 

பால முருகர்

பால முருகன் -  முருகன் என்றாலே அழகன்தான். அதிலும் அந்த முருகனே குழந்தை வடிவத்தில் பால முருகனாக இருந்துவிட்டால், கொள்ளை அழகுதான்! அழகே உருவான பால முருகன் அன்னையான பார்வதி தேவியின் மடியில் அமர்ந்து காட்சி தருவார். அம்பிகையின் மடியில் அமர்ந்து காட்சி தரும் பால முருகனை வழிபட்டால், சகல விதமான நலன்களையும் பெற்றுவிடலாம் என்று ஞான நூல்கள் தெரிவிக்கின்றன. முருகப் பெருமானால் ஆட்கொள்ளப்பட்ட குமரகுருபரரும் சரி, அருணகிரிநாதரும் சரி தித்திக்கத் தித்திக்க தீஞ்சுவைப் பாடல்களால் முருகனை பாடிப் பரவசப்பட்டிருக்கின்றனர். பால முருகன் தன்னை வழிபடுபவர்களின் தீராப் பிணிகளையும் தீர்த்து வைப்பான் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேலூர் ரத்னகிரியில் பாலமுருகனைத் தரிசிக்கலாம்.  

பால ஐயப்பன்

பால ஐயப்பன் - அச்சன்கோயிலில் அரசராகவும், ஆரியங்காவில் திருமணக்கோலத்திலும், சபரி மலையில் யோக வடிவிலும் காட்சி தரும் ஐயப்ப ஸ்வாமி குளத்துப்புழை திருத்தலத்தில் குழந்தையாக, அழகிய பாலவடிவில் காட்சி தருகிறார். பால சாஸ்தா கோயில் என்று அழைக்கப்படும் இது கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் குளத்துப்புழை என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்தச் சந்நிதியின் வாசல் குழந்தைகள் நுழையும் அளவுக்குத்தான் உள்ளது. குழந்தை வரம் அளிக்கும் கண்கண்ட தெய்வமாக இங்கு ஐயப்பன் காட்சி தருகிறார். பாலவடிவ ஐயப்பனை வணங்கினால் குழந்தைகளின் கல்வி சிறப்பாக அமையும் என்பதால் இங்கு விஜயதசமி நாளில் நடக்கும் வித்யாரம்பம் விசேஷமானது. விஷு மகோத்சவ விழாவில் இங்கு குழந்தைகளே முக்கியமாகக் கொண்டாடப்படுகிறார்கள். 

 

பால கிருஷ்ணர்

பால கிருஷ்ணன் - கிருஷ்ணனே அழகுதான். அதிலும் குழந்தை வடிவ கிருஷ்ணர் கொள்ளை அழகு. ஆயர்பாடியில் குழந்தை வடிவில் கண்ணன் செய்த லீலைகள் எல்லாம் எழுத்தில் வடிக்க முடியாத இன்ப அனுபவத்தைத் தரக்கூடியவை. வெண்ணெய் திருடி, ஆநிரை மேய்த்து, வேணு கானம் இசைத்து கோபியர்களை மயக்கிய பாலகிருஷ்ணரின் லீலாவிநோதங்களை ஆழ்வார்கள் மயங்கிக் கிறங்கிப் பதிவு செய்துள்ளார்கள். எத்தனையோ ஆலயங்களில் குழந்தை கிருஷ்ணன் வீற்றிருந்தாலும் குருவாயூரப்பன் என்று அழைக்கப்படும் குருவாயூர் குழந்தை கிருஷ்ணரே பிரிசித்தமாகக் கொண்டாடப்படுகிறார். எண்ணும் எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றித் தரும் இந்த பால கிருஷ்ணர் குழந்தைகளுக்கு என்றே பிரியமான ஒரு கடவுள். 

பாலாம்பிகை

பாலாம்பிகை - அன்னை ஆதிபராசக்தியும் பல தலங்களில் பாலசுந்தரி, பாலாம்பிகை, பால சௌந்தரி, வாலைக் குமரி, வாலாதேவி, வாலாம்பிகை என்றெல்லாம் பெயர் கொண்டு விளங்குகிறாள். திசையன்விளை அருகே உள்ள கொம்மடிக்கோட்டை ஆலயத்தில் உள்ள ஸ்ரீ வாலாம்பிகை, சித்தர்கள் வழிபாட்டை ஏற்றுக்கொள்ள சிறிய பெண் வடிவம் கொண்டு தோன்றினாள். யோக வாழ்வினை அளிக்கும் பாலாம்பிகை தேவி சாக்த வழிபாட்டில் மிகச் சிறப்பான ஸ்தானத்தில் இருப்பவள். தன்னை வழிபடும் குழந்தைகளுக்குச் சகல சௌபாக்கியங்களும் அளிக்கக் கூடியவள். பேட்டைவாய்த்தலை ஸ்ரீ பாலாம்பிகை, விருத்தாசலம் பாலாம்பிகை அம்மன் போன்ற அம்பிகைகள் குழந்தை வரம் அளிக்கக்கூடிய வரப்பிரசாதிகள் என்றே ஆலய வரலாறுகள் கூறுகின்றன.

பாலதெய்வத் திருத்தலங்கள்

கடவுளர்களே குழந்தை வடிவில் காட்சி தரும் திருத்தலங்கள் மிகவும் விசேஷமானவை என்று ஞானநூல்கள் தெரிவிக்கின்றன. கேட்டதை எல்லாம் கொடுத்துவிடும் எளிய மனம் கொண்டவர்கள் பாலவடிவ கடவுளர்கள். எனவே, பால வடிவ தெய்வங்களை வணங்கி குழந்தை வரம் பெறலாம். உங்களின் குழந்தைகள் நலமும் வளமும் பெற பிரார்த்திக்கலாம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!