சுகாதாரத்துக்குச் சவால்விடும் சபரிமலை, பம்பா நதி..! தூய்மை பேணுவது அனைவரின் கடமை #Sabarimala | Will the devotees save the purity of the Bamba River in this season?

வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (16/11/2017)

கடைசி தொடர்பு:20:30 (16/11/2017)

சுகாதாரத்துக்குச் சவால்விடும் சபரிமலை, பம்பா நதி..! தூய்மை பேணுவது அனைவரின் கடமை #Sabarimala

வ்வோர் ஆண்டும் பக்தர்கள் வருகையால், சபரிமலை சந்நிதானத்தின் மகிமை பெருகிக்கொண்டேவருகிறது. சுமார் ஐந்து கோடி பக்தர்கள் ஆண்டுதோறும் இங்கே வருவதாக ஆலய நிர்வாகம் குறிப்பிடுகிறது. அழகான மலை, நீரோடைகள், பம்பா நதி, ஓங்கி உயர்ந்த அரியவகை மரங்கள், வன விலங்குகள், பறவைகள் என எழில் சூழ்ந்து காணப்படும் பகுதி சபரி மலை. பக்தர்களின் கூட்டத்தால் இந்தப் பகுதியின் எழிலும் தூய்மையும் கெட்டுவிடுவதாக இயற்கை ஆர்வலர்கள் புகார் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் கேரள அரசும், ஐயப்பன் கோயில் தேவசம் போர்டும் பல கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. இந்த ஆண்டுகூட `பம்பை ஆற்றில் சோப்பு, ஷாம்பூ போட்டுக் குளித்தால், ஆற்றை அசுத்தம் செய்தால் ஆறு ஆண்டுகள் வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படும்’ என்று பத்தணந்திட்டா மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது. எத்தனை விதிகள், கட்டுப்பாடுகளைப் போட்டாலும் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் பல சுகாதார, சுற்றுச்சூழல் கேடுகளை நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கிறது. இந்தச் சுகாதாரக்கேடுகள், பக்தர்களுக்கு ஏற்படும் குறைகள் குறித்து `சென்னை ஐயப்பா சேவா சங்க’த்தின் முன்னாள் தலைவர் சுப்பிரமணியத்திடம் பேசினோம்.

சபரிமலை

``சபரிமலையும், பம்பா நதியும் புனிதமான இடங்கள். 48 நாள்கள் கடுமையாக விரதமிருந்து செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் அங்கே சென்றவுடன் விரத நியதிகளை மறந்து அசுத்தம் செய்கிறார்கள் என்பது வேதனையான உண்மை. பம்பாவிலிருந்து பக்தர்கள் கால்களில் செருப்பணியாமல்தான் மலையேறுவார்கள். அந்த மலைப்பாதையை நீங்கள் பார்த்தால் அருவருப்படைவீர்கள். பாக்குப் போட்டு எச்சிலை துப்பி இருப்பதும், வழியெங்கும் மனிதக்கழிவுகளால் நிரம்பி இருப்பதையும் பார்த்தால், யாருக்குமே ஓர் எரிச்சல் வந்துவிடும்தான். கோயில் நிர்வாகமும் அரசும் பல வசதிகளைச் செய்து கொடுத்திருந்தும் இது போன்ற அசுத்தங்களைச் செய்பவர்கள் மன்னிக்க முடியாதவர்கள். பம்பாவிலும் சபரிமலையிலும் இருக்கும் எல்லாக் கழிவிடங்களுக்கு அருகேயும் சிகரெட்டும் போதைப் பாக்கு விற்பனை இன்று வரை தொடர்கிறது. எத்தனை கண்காணிப்பு இருந்தும், வியாபாரம் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இவற்றை வாங்கிப் பயன்படுத்துபவர்களால்தான் இந்த மலையே அசுத்தம் ஆகிறது.

பம்பா நதி

பம்பா நதி, கங்கைக்கு நிகரான புனித நதி. அங்கு நடக்கும் அசுத்த காரியங்களும் அளவில்லாதவை. சோப்பு, ஷாம்பூ தேய்த்துக் குளிப்பது, இயற்கை உபாதைகளைக் கழிப்பது, உள்ளாடைகள், வேட்டிகளைத் துவைப்பது, பழைய ஆடைகளை நீரில் வீசுவது, ஐயப்ப மாலைகளைக் கழற்றி வீசிவது, எச்சில் இலைகளைப் போடுவது, மீதமிருக்கும் உணவுகளைக் கொட்டுவது... என அந்தத் தூய்மையான நதியை ஒருவழியாக சாக்கடைபோல மாற்றிவிடுகிறார்கள். நதியை அசுத்தம் செய்துவிட்டு, கடவுளிடம் எப்படி பக்தர்கள் வரங்களை வேண்ட முடியும். மற்றவர்களுக்குத் தொந்தரவு தராமல் இருப்பதே பெரிய பக்திதான். இதை ஒவ்வொரு பக்தரும் உணர வேண்டும். 

மற்றபடி இந்தியாவெங்கும் இருந்து வரும் பக்தர்களுக்கும் பல குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. சபரிமலையில் இருக்கும் பக்தர்களின் தங்குமிடம் சுத்தமாக இருப்பதில்லை. `ஐயப்ப சேவா சங்கம்’ அந்தத் தங்குமிடங்களை அவ்வப்போது சரிசெய்தாலும், அவை இன்னமும் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பதே உண்மை. சபரிமலை எங்கும் சுற்றித் திரியும் பன்றிகள், சீசன் இல்லாத நேரங்களில் இந்தத் தங்குமிடங்களுக்குள் புகுந்து நாசம் செய்துவிடுகின்றன. பதினெட்டுப் படிகளின் அருகிலேயே சுற்றித்திரியும் பன்றிகள், பக்தர்கள் அளிக்கும் தானியங்களை மூட்டையைக் கிழித்து உண்பதை சர்வ சாதாரணமாக நாம் பார்த்திருப்போம். மலையில் திரியும் பன்றிகளை விரட்ட வேண்டும். பல ஆண்டுகளாக பக்தர்களுக்கு இலவச உணவளிக்கும் பணியை ஐயப்ப சேவா சங்கம்தான் செய்துவந்தது. இப்போது இரண்டு ஆண்டுகளாக ஐயப்பன் கோயில் நிர்வாகம் செய்துவருகிறது. அவர்கள் அளிக்கும் உணவு தரமானதாக இருக்க வேண்டும் என்று பக்தர்கள் விரும்புகிறார்கள். அதுபோலவே சபரிமலைப் பாதை மற்றும் ஆலயத்தில் உள்ள மருத்துவ முகாம்களும் பக்தர்களுக்காகச் சிறப்பாக இயங்கி வருகின்றன. எருமேலி போன்ற பகுதியிலும் இது விரிவுப்படுத்தப்பட வேண்டும். 

ஐயப்ப பக்தர்கள்

கோட்டயம், திருச்சூர், எர்ணாகுளம் வழியாக வந்து இறங்கும் பக்தர்கள் அரசுப் பேருந்துகள் அதிகம் இல்லாததால், தனியார் வாகனங்களில் அதிகக் கட்டணம் கொடுத்து சபரிமலைக்குச் செல்லவேண்டியிருக்கிறது. அரசு வாகன வசதியையும், மலைச் சாலை வசதியையும் மேம்படுத்தினால் நல்லது. சபரிமலை அருகில் கோட்டயம் மாவட்டம், காஞ்சிரப்பள்ளியில் இருக்கும் செருவல்லி எஸ்டேட் பகுதியில் விமான நிலையம் அமைக்கவிருப்பதாக கேரள அரசு ஆறு மாதங்களுக்கு முன்னரே அறிவித்திருந்தது. அந்தப் பணிகள் வேகமடைய வேண்டும். வாகனங்களை நிறுத்திவைக்கும் நிலக்கல் பகுதியிலும் பெரும் கூட்டத்தால் குழப்பம் உண்டாகிறது. சபரிமலை யாத்திரை முடித்த பக்தர்கள், தங்களது வாகனங்கள் நிலக்கல்லிலிருந்து வர வெகு நேரம் காத்திருக்கவேண்டியிருக்கிறது. தரிசன வசதியைப் பொறுத்தவரை பிரச்னையில்லை என்றே சொல்லலாம். கூட்டம் அதிகம் இருக்கும்போது காத்திருப்பது கட்டாயமாகிறது. அப்போது பக்தர்கள் பொறுமை காத்து, கோயில் காவல் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பல நாள்கள் விரதமிருந்து செல்லும் பக்தர்கள், கலியுக வரதனாம், ஐயப்பன் குடிகொண்டுள்ள பகுதிகளைச் சுத்தமாகவைத்திருக்க வேண்டும். இதுவே கடவுளுக்கு நாம் செய்யும் பக்தி. ஆலய நிர்வாகமும் கேரள அரசும் சேர்ந்து பக்தர்களுக்கான வசதிகளைச் செய்து கொடுப்பதும் அவசியம்" என்கிறார் சுப்பிரமணியம். 

ஆலயம் தொழுவது சாலவும் நன்று. ஆலயத்தைத் தூய்மையாகப் பராமரிப்பது அதனினும் நன்று!


டிரெண்டிங் @ விகடன்