மாற்றத்தையும் செல்வச்செழிப்பையும் உண்டாக்கப்போகும் சனிப்பெயர்ச்சி! - பொதுப்பலன்கள் #SaniPeyarchi2017

வகிரகங்களில் சனிபகவான் டிசம்பர் 19-ம் தேதி விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அவர் 26.12.20 வரை தனுசு ராசியிலிருந்து பலன்களைத் தரவிருக்கிறார். இந்த மூன்று ஆண்டுகளில் நடைபெறக்கூடிய பொதுப் பலன்கள் குறித்து, 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

சனி

குருப்பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சி, மற்ற கிரகங்களின் பெயர்ச்சி என்று பல கிரக பெயர்ச்சிகள் இருந்தாலும், சனிப்பெயர்ச்சியின்போது எல்லோருக்கும் கொஞ்சம் அச்சமாத்தான் இருக்கிறது. இந்தப் பெயர்ச்சியில் சனிபகவான் நம்மை என்ன செய்யப்போகிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. 

ஜோதிட சாஸ்திரம் சனிபகவானை 'நீதிமான்' என்று சிறப்பித்துச் சொல்கிறது. நம் முன் ஜன்ம வினைகளையும், நம் முன்னோர் செய்த வினைகளையும் எடுத்து ஒரு 'பேலன் ஷீட்' தயாரித்து, அதற்கேற்ப பலன்களைத் தருபவர்தான் சனிபகவான்.

'சனியைப் போல் கொடுப்பாரில்லை; சனியைப் போல் கெடுப்பாரில்லை' என்று சொல்வார்கள். இவர் கொடுக்க ஆரம்பித்துவிட்டால், கண்ணை மூடிக்கொண்டு கொடுப்பார். கெடுக்க ஆரம்பித்துவிட்டாலும் அப்படியே.

பூமி

2018 புத்தாண்டு ராசி பலன்களுக்கு க்ளிக் செய்க...

சனிபகவான் இது வரை இருந்த விருச்சிக ராசி பூமிகாரகனான செவ்வாயின் வீடு. செவ்வாய் சனியின் பகை கிரகம் என்பது நமக்குத் தெரியும். கடந்த இரண்டரை வருடங்களாக ரியல் எஸ்டேட் எந்த அளவுக்குத் தடைகளைச் சந்தித்தது என்பது நமக்குத் தெரியும்.
கால புருஷ கணிதத்தின்படி விருச்சிகம் 8-வது வீடு.

அஷ்டம ஸ்தானத்துல சனிபகவான் இருந்ததால்தான், பணப்புழக்கத்தில் பெரிய தடை ஏற்பட்டது. பணத் தட்டுப்பாடும், சின்னச் சின்ன பிரச்னைகளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதும் நடந்தது. பொருளாதார ரீதியாக பலருக்கும் நிம்மதியில்லாத நிலை இருந்தது. இனி அந்த நிலை மாறும். மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கும். 

கே.பி.வித்யாதரன்
சனிபகவான் இப்போது பிரவேசிக்கும் ராசி தனுசு. இந்த ராசியின் சின்னமாக வில் அம்பு இருப்பதால், உலக அளவில் பல நாடுகள் ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும். இந்திய ராணுவத்தின் வலிமை அதிகரிக்கும். இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் தடுப்புச் சுவர் அல்லது கம்பி வேலி ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெறும்.

இந்திய ராணுவம், காவல்துறை நவீனப்படுத்தப்படும். அவ்வப்போது போராட்டங்கள் இருக்கும் என்பதால் மக்கள் மனங்களில் ஒரு பதற்றம் இருக்கவே செய்யும். ஆனாலும், விருச்சிகத்தில் இருந்த அளவு மோசமாக இருக்காது என்பதால், ஓரளவு உற்சாகம் ஏற்படும்.

 

 

வியாபாரம் தழைக்கும் என்றாலும், சின்னச் சின்ன சச்சரவுகளும் குழப்பங்களும் இருக்கவே செய்யும். 
மழைப்பொழிவு இருக்கும். விளைச்சல் அதிகமாகும். கூடவே பூச்சித்தொல்லைகளும் கொஞ்சம் இருக்கும்.  சனிபகவான் 3 -ம் பார்வையாக கும்பத்தைப் பார்ப்பதால், ஏரி குளங்கள் நிரம்பி வழியும். அரசாங்கம் போதுமான நிதி ஒதுக்கி தண்ணீரைப் பாதுகாப்பதற்கான திட்டங்களைச் செயல்படுத்தும். இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

சட்டக்கல்வி, கோர்ட் இவற்றுக்கு உரிய கிரகமான குருவின் வீட்டில் நீதிக்கு உரிய கிரகமான சனி வந்து உட்காருவதால் வழக்கறிஞர்களின் தொழில் முறைப்படுத்தப்படும். நீதிபதிகளின் நியமனம் வெளிப்படையாக இருக்கும். தரமான வழக்குகளில் ஆஜராகி இருந்தவர்களுக்கு நீதிபதியாகும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.

கிரகம்

சனி பகவான் 7- ம் பார்வையாக மிதுன ராசியைப் பார்ப்பதால், மாணவ மாணவிகள் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். குழந்தைகளுக்கு நோய்பாதிப்புகள் ஏற்படாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும். 

சனிபகவான் 10-ம் பார்வையாக கன்னி ராசியைப் பார்ப்பதால், இளைஞர்கள் பாதை மாறிப் போகும் வாய்ப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், பழக்க வழக்கங்களில் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது அவசியமாகிறது.

சனி 9-ம் இடத்தில் வந்து அமர்வதால், உலகம் முழுவதும் செழிப்பான நிலை ஏற்படும். மக்கள் மனங்களில் கடுமையாக உழைத்தால்தான் முன்னுக்கு வரமுடியும் என்ற எண்ணம் வலுப்பெறும். குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

 பொதுவாகப் பார்க்கப்போனால், இந்த சனிப்பெயர்ச்சி உலகெங்கும் ஒரு மாற்றத்தையும் செல்வச்செழிப்பையும் ஏற்படுத்தும் என்பது உறுதி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!