வெளியிடப்பட்ட நேரம்: 08:41 (22/11/2017)

கடைசி தொடர்பு:08:41 (22/11/2017)

திருச்சானூர் தேர்த்திருவிழா கோலாகலம்... ஸ்ரீபத்மாவதி தாயார் அவதரித்த கதை! #TriruchanurBrahmotsavam

திருப்பதி வெங்கடேசப் பெருமாளின் அருளைப்பெற வேண்டுமென்றால், முதலில் தாயாரின் அன்பைப் பெற வேண்டும். பக்தர்களின் வேண்டுதல்களை ரகசியார்த்தமாக பெருமாளிடம் பேசி, நிறைவேற்றிவைப்பவர் என்பதால், வைணவ பக்தர்களுக்கு, தாயார் மீது தனிப் பிரியம் எப்போதும் உண்டு. அதனால்தான் பலரும் திருப்பதி-திருச்சானுர் சென்று தாயாரை வழிபட்ட பின்னரே மேல் திருப்பதியில் இருக்கும் பெருமாளை வழிபடுவார்கள். பத்மாவதி தாயார் பற்றிய புராண வரலாற்றை அறிவோமா?

பத்மாவதி

படங்கள் உதவி: திருமலை திருப்பதி தேஸ்தானம்

திருப்பதி சேஷாத்திரி மலைக்கு அருகில் நாராயணபுரம் எனும்  நகரத்தைத் தலைநகராகக்  கொண்டு, சுதர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். பெரியவன் பெயர் ஆகாசராஜன்; சிறியவன் தொண்டைமான்.  மூத்த மகன் ஆகாச மன்னனுக்கு முடிசூட்டி வைத்துவிட்டு, சுதர்மன் தவம்புரியக் காட்டுக்குச் சென்றுவிட்டான். 

ஆகாசராஜன் மிகவும் அறநெறி உடையவன். நாட்டை மிகவும் செம்மையாக ஆட்சி புரிந்துவந்தான். தன் நாட்டு மக்களைத் தன் கண்களைப்போல் நேசித்துக் காத்து வந்தான். 

ஆகாசராஜனின் மனைவி பெயர் தரணி தேவி. அவள் பேரழகும் புத்தி சாதுர்யமும் உள்ளவள். சிறந்த படிப்பாளி. நல்ல குணங்களின் உறைவிடமாகவும் திகழ்ந்தாள். கணவனும் மனைவியும் மிகவும் அன்புடன் இல்லறம் நடத்திவந்தனர். ஆனால், அவர்களுக்கு மகப்பேறு இல்லை. அது அவர்களுக்கு மிகவும் வேதனையைத் தந்தது.

திருச்சானூர் பிரம்மோற்சவம்

எத்தனையோ பூஜைகள், நோன்புகள், அனுஷ்டானங்களையும் கடைப்பிடித்தனர். தான தருமங்கள் பலவும் செய்தனர். என்ன செய்தபோதிலும் அவர்களுக்கு மக்கட்பேறு மட்டும் கிடைக்கவே இல்லை. 

ஒரு நாள் ஆகாசராஜன் தமது ராஜகுருவான சுகமா முனிவரை சந்தித்து வணங்கினான்.

“ரிஷிபுங்கவரே! குழந்தைப்பேறு இல்லாமல் நாங்கள் எவ்வளவு நாள்கள் தவிப்பது, எவ்வளவோ நற்பணிகள் செய்தும், எனக்கு புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை. என் வம்சம் என்னுடன் முடியவேண்டியதுதானா? இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்'' என்று மிகவும் வருந்திக் கேட்டுக்கொண்டான்.

மன்னனின் வேண்டுகோளைக் கேட்டு, சுகமா முனிவர் சிறிதுநேரம் யோசனையில் ஆழ்ந்தார். சற்று நேரம் கழித்து அவரே பேசினார்.

''அரசே கவலை வேண்டாம். கடவுளின்  ஆசியும் தயையுமிருந்தால், உன் விருப்பம் நிச்சயம் நிறைவேறும். முற்காலத்தில் தசரதச் சக்கரவர்த்தி முதுமைப் பருவம் அடைந்த பின்னரும்  குழந்தைப்பேறு இல்லாமல் புத்திரகாமேஷ்டி யாகம் செய்த பின்னரே, நான்கு புதல்வர்களைப் பெற்றெடுத்தார். தாங்களும் அதுபோல் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் நல்ல  மக்கட்பேறு அமையும்'' என்றார்.

பத்மாவதி தாயார்

ராஜகுருவின் வார்த்தைகளைக் கேட்டு, யாகம்செய்யும் இடம், நேரம் ஆகியவற்றைத் தேர்வுசெய்து, அதற்கு உரிய ஏற்பாடுகளில் இறங்கினான். ஆகாசராஜன் யாகம் செய்யும் இடத்தை, பொன்னேர் பூட்டி, உழுது  செம்மைப்படுத்தினான். அப்படி உழும்போது அந்த பொன்னேர் பூமியில் பதிந்திருந்த ஓர் அழகான பெட்டியின் மீது இடித்தது. உடனே அந்தப் பெட்டியை அரசர் வெளியே எடுத்தார். அந்தப் பெட்டியில் அழகான ஒரு குழந்தையுடன் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரையும் இருந்தது.

அங்கு கூடியிருந்த அவையோர்  அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர். அப்போது  வானத்தில் ஓர் அசரீரி கேட்டது, 
''மன்னா! நீ பெரும் பாக்கியசாலி! இன்றுதான் உன் அதிர்ஷ்டம் பலித்திருக்கிறது. இந்தக் குழந்தையை எடுத்து, வளர்த்து பெரியவளாக்கு. இந்தக் குழந்தையால் உங்கள் குலம் சகல சௌபாக்கியங்களையும் பெற்று புனிதமடையும்''என்று கூறியது.

திருப்பதி வெங்கடேசப்பெருமாள்

ஆகாசராஜனுக்கும் அவனது துணைவியார் தரணிதேவிக்கும் மட்டடற்ற மகிழ்ச்சி. அந்தக் குழந்தையைப் பெட்டியிலிருந்து வெளியே எடுத்துக்காட்டி, முத்தமிட்டான். தன் மனைவியிடம் கொடுத்தான். தரணிதேவியும் மகிழ்ச்சியுடன் குழந்தையை வாங்கிக்கொண்டாள். 
மன்ன,ர் அந்தணர்களை வரவழைத்து நல்லநாள் பார்த்து அந்தக் குழந்தைக்குப் பெயரிடும்படி வேண்டினான். அவர்கள் நன்கு யோசித்த பின்னர், பத்மத்தில் (தாமரையில்) கிடைக்கப் பெற்ற காரணத்தால், `பத்மாவதி’ (அலர்மேல் மங்கை) எனப் பெயர் சூட்டினர்.

அரண்மனையே கோலாகலத்தில் மூழ்கியது. எங்கு பார்த்தாலும் விருந்துகளும் கொண்டாட்டங்களும் நிகழ்ந்தன. திருமகளே தமது வீட்டில் வந்து பிறந்துவிட்டதாக, அரசனும் அரசியும் சந்தோஷம் அடைந்தனர். 

திருமலை திருப்பதியில் வெங்கடேசப் பெருமாளுக்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடைபெறுவதுபோலவே, திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம்  கடந்த 15 -ம்தேதி (புதன்கிழமை) தொடங்கி, 7 நாள்களாக நடைபெற்றுவருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தினந்தோறும் தாயாரை தரிசித்து வருகிறார்கள். எட்டாம் நாள் நிகழ்ச்சியாக பத்மாவதி தாயார் தேர் பவனி நடைபெறுகிறது.
***

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்