Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`ஈசன் தீயாகிக் குளிர்ந்து நிற்கும்’ திருவண்ணாமலை திருக்கார்த்திகை விழா கொடியேற்றம் #Thiruvannamalai

ண்ணிய இடத்தில் புண்ணியத்தைத் தரும், நினைத்த இடத்தில் முக்தியைத் தரும் ஆலயம் திருவண்ணாமலை. ஆயிரம் நாவுகள் கொண்ட ஆதிசேஷனே சொல்ல முடியாத பெருமைகள் பல கொண்ட அக்கினித் தலம்.  ஈசனே நெருப்பின் வடிவெடுத்து திருமால், பிரம்மாவின் ஆணவத்தை அடக்கிய தலமிது. சைவ நெறியையே ஏற்று வாழும் அன்பர்களுக்கு எல்லாம் இந்தத் திருவண்ணாமலையே தபோவனம். பூலோக கயிலாயமான இந்தத் திருவண்ணாமலை ஆலயத்தின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று இரவு அந்த ஊரின் காவல் தெய்வமான துர்க்கையம்மன் பூஜையோடு தொடங்கியது. அதைத்தொடர்ந்து இன்று (23-11-17) அதிகாலை 4 மணி அளவில் துலா லக்னத்தில் திருக்கோயிலின் மூன்றாம் பிராகாரத்தில் அண்ணாமலையார் சந்நிதி எதிரே இருக்கும் தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அற்புதமான அலங்காரத்தில் உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளிக் காட்சியளித்தார். 'அண்ணாமலைக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கும் அரோகரா' என்ற பக்தர்களின் வாழ்த்து கோஷம் விண்ணை முட்டியது. காண சிலிர்த்துப் போகும் அந்தக் கண்கொள்ளா காட்சியை அடுத்து பஞ்ச மூர்த்திகளும் கண்ணாடி விமானங்களில் உலா வந்தனர். கொடியேற்றத்தைத் தொடர்ந்து, திருவண்ணாமலையில் நடக்கவிருக்கும் திருவிழா நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களை விரிவாகப் பார்க்கலாம்.  

அண்ணாமலையார்

 

கொடியேற்றம் நடைபெற்ற இன்றைய நாளின் இரவில் அதிகார நந்திமீது அமர்ந்த கோலத்தில் அண்ணாமலையார் புறப்பட்டு  ஆலயத்தின் மாடவீதிகளில் உலா வருவார்.

இரவில் உலா வரும் அண்ணாமலையார்

 

அடுத்து நவம்பர் 24-ம்தேதி காலையில் தங்க சூரியப்பிரபை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவில் இந்திர விமானத்தில் பஞ்சமூர்த்திகளும் உலா  வருவார்கள். 

கார்த்திகை விழா

நவம்பர் 25-ம்தேதி காலையில் சர்ப்ப வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு சிம்ம, அன்ன வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் உலா நடைபெறும்.

கார்த்திகை விழா

 

 நவம்பர் 26-ம்தேதி காலையில் சந்திரசேகரரும், இரவில் கற்பக விருட்ச வாகனத்தில் அண்ணாமலையாரும் உலா வருவார்கள். 

திருவண்ணாமலை

நவம்பர் 27-ம்தேதி காலையில் ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும், இரவில் அண்ணாமலையாரும் பவனி வந்து அருள்பாலிப்பார்கள். 

அண்ணாமலையார்

 

நவம்பர் 28-ம்தேதி காலையில் யானை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு அண்ணாமலையார் உலாவும் நடைபெறும்.

தீபத்திருவிழா

நவம்பர் 29-ம்தேதி காலையில் அண்ணாமலையார் கோயிலின் மகா தேரோட்டம் நடைபெறும். அன்று தொடங்கிதான் இந்தத் தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும். மகா தேரோட்ட நாளில் அன்று காலை தொடங்கி நள்ளிரவு நேரம் வரை ஐந்து தேர்கள் அடுத்தடுத்து உலா வந்து ஊரையே பக்திமயமாக்கி விடும். கணபதி, முருகர், அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், சண்டிகேஸ்வரர் என ஐவரும் தனித்தனி தேரில் உலா வருவர். உண்ணாமலையம்மன் பவனி வரும் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். திருவண்ணாமலை மாவட்டமே இந்த நாளில் ஆலயத்தில்தான் இருக்கும் என்று சொல்லும் அளவுக்குக் கூட்டம் இருக்கும்.

தீபத்திருவிழா தேரோட்டம்

பின்னர் நவம்பர் 30-ம்தேதி காலையில் குதிரை வாகனத்தில் சந்திரசேகரரும், மாலை வேளையில் அண்ணாமலையார் பிச்சாண்டவர் வடிவில் உலாவும் நடைபெறும். அன்றிரவு பஞ்சமூர்த்திகள் பவனியும் நடைபெறும். 

இரவில் ஜொலிக்கும் திருவண்ணமலை

 டிசம்பர் 1-ம்தேதி காலையில் புருஷாமிருக வாகனத்தில் சந்திரசேகரரும், இரவில் காமதேனு, கைலாசமலை வாகனங்களில் பஞ்ச மூர்த்திகளும் உலா வருவார்கள். 

பரணி தீபம்

 

டிசம்பர் 2-ம்தேதி, விழாவின் இறுதி உற்சவமான கார்த்திகை தீபம் ஏற்றும் விழா நடைபெறும். இதுவே இந்தப் பத்து நாள் திருவிழாவில் மிகச் சிறப்பான விழா. சுமார் 25 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளும் தமிழகத்தின் பிரமாண்ட திருவிழா இது. டிசம்பர் 2-ம்தேதி அதிகாலை 2 மணிக்குத் தொடங்கப்படும் பரணி தீப விழாவில் அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்படும். அப்போது பஞ்ச மூர்த்திகளுக்கும் தீபம் காட்டப்பட்டு வழிபாடு செய்யப்படும். விழாவின் உச்சகட்ட வைபோகமாக அன்று மாலை 6 மணி அளவில் மகாதீபம் மலை மீது ஏற்றப்படும். அப்போது ஆண்டுக்கு ஒருமுறை காட்சி தரும் அர்த்தநாரீசுவரர் திருக்காட்சி பக்தர்களுக்குக் கிடைக்கும். லிங்கமே மலையாக அமைந்திருக்கும் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் தீபம் பிரகாசமாக எரியும். அப்போது காணும் அந்த ஒளிவெள்ளத்தில் பக்தர்கள் கூட்டம் தன்னை மறந்து 'அரோகரா' கோஷம் எழுப்பி வணங்கும். 11 நாள்கள் தொடர்ந்து எரியும் விதமாகப் பிரமாண்ட வடிவில் இந்தத் தீபம் அமைக்கப்படும்.

கார்த்திகை தீபம்

மகாதீபம் ஏற்றப்படும் பொழுது பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளிக் காட்சி தருவர். இந்த ஒருநாளில் மட்டுமே பக்தர்கள் மலைமீது ஏறி தீபத்தை அருகில் இருந்தும் காண்பார்கள். ஈசன் குடி கொண்ட தலங்களில் எல்லாம் தலையாய தலம் என்று போற்றப்படும் திருவண்ணாமலையில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 2-ம் தேதி வரை திருவிழா நடைபெறவுள்ளது. இந்த நாளில் ஈசனை தரிசித்து எல்லா வளங்களையும் வாழ்வில் பெறுவோம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement