வெளியிடப்பட்ட நேரம்: 10:48 (25/11/2017)

கடைசி தொடர்பு:13:38 (25/11/2017)

காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம்

லகம் ஒரு புத்தகம். பயணமே செய்யாதவர்கள் அதில் ஒரே ஒரு பக்கத்தை மட்டும்தான் படிக்கிறார்கள்’ என்று சொல்லியிருக்கிறார் செயின்ட் அகஸ்டின். நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்த கிறிஸ்தவத் துறவி சொன்னது இன்றைக்கு மட்டுமல்ல... என்றென்றைக்கும் பொருந்தக்கூடிய பொன்மொழி. ஆதிகாலத்திலிருந்து மனிதனின் கூடவே நிழல்போல் தொடர்ந்து வருவது யாத்திரை. மனிதன் மட்டும் பயணம் செய்யாமல் ஓரே இடத்தில் இருந்திருந்தால், பல அரிய விஷயங்களைக் கண்டுபிடித்திருக்க மாட்டான். மனித இனம் முன்னேறியிருக்காது; நாகரிகம் அடைந்திருக்காது.

யாத்திரை

யாத்திரை மனிதனுக்கு ஒருவகையில் ஆசிரியர்; நல்லவையோ, கெட்டவையோ பிரமாதமான பல அனுபவங்களை போதிக்கும் ஆசான். பல புதிய மனிதர்களை, தாவரங்களை, விலங்குகளை, புதிய இடங்களை, பண்பாட்டை, மொழியை, கலைகளை மனிதர்களுக்கு அறிமுகப்படுத்தியது பயணமே. அதனால்தான் யாத்திரைக்கும் யாத்ரீகர்களுக்கும் எப்போதும் முக்கியத்துவம் கொடுத்துவந்திருக்கிறது நம் இந்தியப் பண்பாடு. அன்னச் சத்திரங்களும், தங்கும் விடுதிகளும், மண்டபங்களும், சுமைதாங்கிக் கற்களும் யாத்ரீகர்களின்பொருட்டே உருவாக்கப்பட்டன. அதிலும் கோயில் யாத்திரைக்குச் செல்பவர்களை தெய்விகத் தன்மையுடன் பார்த்தது நம் கலாசாரம். தெற்கிலிருந்து வடக்கே காசியாத்திரை செல்பவர்களாகட்டும்... வடக்கிலிருந்து தெற்கே ராமேஸ்வரத்துக்கு வருபவர்களாகட்டும்... அவர்களைத் துறவிகளைப்போல் கருதினார்கள் நம் மக்கள். பாதபூஜை, பல உபசாரங்கள் செய்து, பயபக்தியோடு அனுப்பிவைத்தார்கள்.

புனித யாத்திரை

புனித யாத்திரை என்பது ஒரு பக்தனுக்கும் கோயிலில் உறையும் தெய்வத்துக்கும் இடையில் இருக்கும் பந்தம் மட்டுமல்ல. கோயிலில் வழிபட்டு வருவதோடு `அந்தக் கடமை முடிந்துவிட்டது’ என நினைக்கிற காரியமும் அல்ல. அந்த வழித்தடம் விரிக்கும் காட்சிகள், எதிர்ப்படும் சிறு எறும்பு தொடங்கி சந்திக்கும் பல மனிதர்கள் வரை நமக்குத் தரும் அனுபவம் அலாதியானது. புனித யாத்திரை நாம் யார் என்பதை நம்மையே உணரச் செய்யும் அற்புதமான பாடம், தத்துவம்.

இந்தியாவில் இறைவன் உறையும் திருக்கோயில்களுக்குப் பஞ்சமில்லை. மலைகளிலும், அடர்ந்த காடுகளிலும், புனித நதிக்கரைகளிலும் எண்ணற்ற ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அப்படிப்பட்ட இயற்கை வனப்புடன் திகழும் ஆலயங்களுக்கான பயணமும், பயணத்தின்போது கிடைக்கும் அனுபவங்களும் படிப்பினைகளும் ஏராளம். அவை நம் மனதைப் பண்படுத்தி செம்மையாக்கும். மன மாசுக்களை அறவே நீக்கும். ஆனால், ஆலயங்களை தரிசிப்பதில் மக்களுக்கு ஆர்வம் ஏற்படவேண்டுமே. அதற்காகத்தான், ஒவ்வோர் ஆலயத்தையும் தரிசித்து வழிபட்டால், ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது.

புனித யாத்திரை

பலனை எதிர்பார்த்தும், எந்தப் பிரதிபலனும் கருதாமலும் இறைவன் உறையும் ஆலயங்களைத் தரிசிக்க அந்தக் காலத்தில் ஆன்மிக யாத்திரைகளை மேற்கொண்டார்கள். போக்குவரத்து அவ்வளவாக இல்லாத காலத்திலேயே பக்தர்கள் நடந்தே சென்று ஆலயங்களை தரிசித்த்தார்கள். நூற்றுக்கணக்கான மைல்களைக் கடந்து இறைவனை தரிசிக்கச் சென்றதால், அவர்களின் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெற்றது. பல இடங்களில் பல நாள்கள் தங்கிச் செல்லவேண்டி இருந்தது. அதன் காரணமாக அந்தந்தப் பகுதி மக்களின் கலை, கலாசாரம், பண்பாடு மற்றும் விழாக்கள் பற்றிய விவரங்களைக் கேட்டும், பார்த்தும் அறிந்துகொள்ள முடிந்தது. 'வேற்றுமையிலும் ஒற்றுமை' என்ற நம் தேசத்தின் மகத்துவத்தை அவர்களால் புரிந்துகொள்ளவும் முடிந்தது.

இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் அமைந்திருக்கும் ஆலயங்களை தரிசிக்கச் செல்லும்போது, உடல் ஆரோக்கியம் மேம்படும். பல சிரமங்களைக் கடந்து செல்வதால், மனதிடம் உண்டாகும். நம்முடைய மனம் முழுக்க, 'எப்போது இறைவனை தரிசிப்போம்?' என்ற ஆர்வமே நிறைந்திருப்பதால், மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படாது.

இன்றைக்கும் காசி யாத்திரை, ராமேஸ்வரம் யாத்திரை, கயிலாய யாத்திரை, பழநி யாத்திரை, சதுரகிரி யாத்திரை, சபரிமலை யாத்திரை என்று பல யாத்திரைகளை பக்தர்கள் நடைப்பயணமாகவே மேற்கொள்கின்றனர். இதுபோன்ற பிரபல யாத்திரைகள் மட்டுமல்ல... யாத்திரை செல்ல, இன்னும் பல புனிதத் தலங்கள் இருக்கவே செய்கின்றன. வெளியுலகத்துக்கு அதிகம் தெரியாத அது போன்ற புண்ணியத் தலங்களை ஆன்மிக அன்பர்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பினோம்.

அதற்காக சில யாத்திரைகளை மேற்கொண்டு, அவற்றில் நமக்குக் கிடைத்த அனுபவங்களையும் படிப்பினைகளையும் விகடன் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என நினைத்தோம். எங்கள் முதல் யாத்திரை தொடங்கியது.

பயணம்

வேலூர் மாவட்டம், ஞானமலைக்கு நம் நிருபர் குழு பயணம் மேற்கொண்டது. ஆன்மிகத் தேடல் என்பதே ஞானத்தைத் தேடிய பயணம்தானே? அந்த வகையில் நம் முதல் யாத்திரை ஞானமலை யாத்திரையாக அமைந்திருப்பது மிகவும் பொருத்தமானதே.

ஞானமலையும் சரி, சுற்றிலும் இருக்கும் வேறு சில மலைகளும் சரி... அளவற்ற தெய்விக ஆற்றல் கொண்டவை. அபூர்வ மூலிகைகளின் பொக்கிஷமாகத் திகழ்பவை. ஞானமலைக்கு அத்தனைச் சிறப்புகளும் உள்ளன. கூடவே ஒரு தனிச்சிறப்பு... திருமணம் முடித்த தெய்வத் தம்பதியர், தேனிலவு கொண்டாடிய மலை இது.

அந்த தெய்வத் தம்பதியர் யார் தெரியுமா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்