படி பூஜை, 1,008 கலச பூஜை, அஷ்டாபிஷேகம்... சபரிமலை சிறப்பு பூஜைகள் #Sabarimala #infographic

மேற்குத் தொடர்ச்சி மலையின் புனிதம் நிறைந்த பகுதி என்றால், அது சபரிமலை என்றே சொல்லலாம். நெய்யபிஷேக பிரியரான ஶ்ரீசபரிகிரி வாசன் இந்த மண்டல பூஜை நாள்களில் நாள்தோறும் விதவிதமான அலங்காரங்கள், அபிஷேகங்கள் என்று ஜொலித்துக் கொண்டிருப்பார். மண்டல பூஜை நாட்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் என்னென்ன பூஜைகள், எப்போது நடைபெறுகிறது என்பதை இங்கு காண்போம்.

சபரிமலை

நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்ட ஐயப்பன் கோயில் சந்நிதி மண்டல பூஜைகளுக்காக அடுத்த மாதம் அதாவது டிசம்பர் மாதம் 26-ம் தேதி வரை திறந்து இருக்கும். அப்போது தினசரி அதிகாலை 3.30 மணி அளவில் கோயில் நடை திறக்கப்படும். அப்போது தொடங்கி பகல் 11.30 மணி வரை ஸ்ரீ ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடக்கும். பக்தர்கள் இருமுடியில் தாங்கி வந்த நெய் தொடர்ச்சியாக ஐயப்பனுக்கு அபிஷேகிக்கப்படும். விசேஷ ஹாரத்திக்குப் பிறகு நண்பகல் 1 மணிக்கு சந்நிதி அடைக்கப்படும்.

மீண்டும் நண்பகல் 3 மணி அளவில் திறக்கப்பட்டு ஸ்ரீ ஐயப்பனை மலர்களால் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். இரவு 11 மணி அளவில் தீப,தூப வழிபாட்டுக்கு பின்னர் ஹரிவராசனம் பாடப்பட்டு சந்நிதி அடைக்கப்படும். இதுவே வழக்கமான நடைமுறை எனலாம். பக்தர்கள் கூட்டத்தினைப்பொறுத்து நடை திறப்பு மற்றும் மூடும் நேரம் மாற்றி அமைக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் கூறுகிறது. தினமும் உஷத்கால பூஜை, உச்சிகால பூஜை, அத்தாழ பூஜை என்று மூன்று வேளைகள் சிறப்பான பூஜைகள் ஸ்ரீ ஐயப்பனுக்கு செய்யப்படுகின்றன. இதைத் தாண்டி பல சிறப்பான பூஜைகளும் சபரிமலை சந்நிதானத்தில் நடைபெறுகிறது.

படிபூஜை - சபரிமலை சந்நிதானத்தில் ஐயப்ப விக்கிரகத்துக்கு எத்தனை பெருமை உள்ளதோ அத்தனை மகத்துவம் இங்குள்ள 18 படிகளுக்கும் கொடுக்கப்படுகிறது. இருமுடி தலையில் இல்லாமல், மாலை அணியாமல் இருப்பவர்கள் கூட சபரி மலை ஐயப்பனை தரிசித்து விடலாம். பெண்கள் எல்லோரும் கூட ஐயப்பனை தரிசித்து விடலாம். ஆனால் இருமுடி இல்லாமல், விரதம் இல்லாமல் வந்த ஒருவர் கூட இந்த படியின் மீது ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அத்தனை பெருமை கொண்ட இந்த படிகளுக்கு செய்யப்படும் பூஜையே படி பூஜை எனப்படுகிறது.

18 மலைகளையும், 18 தத்துவங்களையும், 18 தேவர்களையும் குறிப்பதாக இந்த படிகளைச் சொல்வார்கள். மேல்சாந்தி, கீழ்சாந்தி, தந்திரிகள் மற்றும் அந்த பூஜைக்கான செலவினை ஏற்றுக்கொண்ட உபயதாரர்கள் இணைந்து இந்த படி பூஜையினை செய்வார்கள். படிகளை விதவிதமான மலர்களால் அலங்கரித்து, விளக்குகளால் ஜொலிக்கச் செய்து வாத்தியங்கள் முழங்க இந்த பூஜை பிரமாண்டமாக நடைபெறும். இந்த பூஜையைச் செய்ய இப்போது பதிவு செய்தால் 20 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என்பதில் இருந்தே இந்த பூஜை எத்தனை சிறப்பானது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். சபரி மலையில் கீழ்க்காணும் எல்லா பூஜைகளும் உபயதார்களால் நடத்தப்படுவதுதான். முன்கூட்டியே பதிவு செய்து இந்த பூஜைகளை நடத்தலாம்.

படி பூஜை

ஆயிரத்தெட்டு கலச பூஜை - இரண்டு நாட்கள் ஐயப்பனுக்காக 1008 கலசங்களை வைத்து செய்யப்படும் பூஜை இது.

ஸ்ரீ ஐயப்ப லட்சார்ச்சனை - சபரிகிரி வாசனின் திருப்பெயர்களை லட்சம் தடவை ஜபித்து செய்யும் பூஜை இது.

புஷ்பாஞ்சலி - நடை திறந்து இருக்கும் நாட்களில் எல்லாம் இரவு 8 மணிக்கு ஐயப்பனுக்கு மலர்களால் புஷ்பாஞ்சலி நடைபெறும். உபயதாரர் அதிகம் இருந்தால் ஒரே நாளில் பலமுறைகூட புஷ்பாஞ்சலி நடைபெறும். பலவித மலர்களால் ஐயப்பன் அர்ச்சிப்பதைக் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என பக்தர்கள் கூறுவார்கள்.

அஷ்டாபிஷேகம் - விபூதி, பால் , பன்னீர் , நாணயம், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர் போன்ற பதினெட்டுப் பொருள்களால் ஸ்ரீ ஐயப்பனுக்கு செய்யப்படும் அபிஷேகம் இது. இதற்கு முன்பதிவு தேவையில்லை. பக்தர்கள் இந்த பொருட்களை கொண்டு வந்தால் அனுமதி பெற்று செய்து கொள்ளலாம்.

ஐயப்பன் பூஜை

கணபதி ஹோமம் - அதிகாலை 4 மணி அளவில் ஐயப்பன் சந்நிதிக்கு முன்புறமாக இந்த ஹோமம் நடைபெறும். பக்தர்கள் பணம் செலுத்திவிட்டு இந்த ஹோமத்தில் கலந்து கொள்ளலாம்.

சந்தன அபிஷேகம் - தூய, குளுமையான, வாசனை நிரம்பிய சந்தனம் ஐயப்ப ஸ்வாமிக்கு உகந்த பொருளாக கருதப்படுகிறது. அதுவே பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. அரைத்த தூய சந்தனத்தை ஐயப்ப ஸ்வாமிக்கு அபிஷேகிக்கும் பூஜை இது.

இப்படி பல சிறப்பான பூஜைகள் இந்த மண்டல காலத்தில் ஐயப்பனுக்கு செய்விக்கப்படுகிறது. சபரிமலை செல்லும் பக்தர்கள் சந்நிதியில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய கட்டணத்தை செலுத்தி, அனுமதி பெற்று இந்த பூஜைகளில் பங்கேற்கலாம். தனிநபர் எவரிடமும் பணத்தைக் கொடுத்து விட்டு ஏமாற வேண்டாம் என்று சபரி மலை சந்நிதான நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.

ஐயப்பனின் அறுபடை வீடு

ஐயப்பனின் பெருமை சொல்லும் இந்த அறுபடை வீடுகள் குளத்துப்புழை, அச்சன்கோவில், ஆரியங்காவு, சபரிமலை, எரிமேலி, பந்தளம் போன்றவை. இந்த ஆறு இடங்களில் ஸ்ரீ சாஸ்தாவான ஐயப்ப ஸ்வாமி வித்தியாசக் கோலங்களில்  அருள்பாலிக்கிறார். பக்தர்கள் இங்கு சென்று ஐயப்பனை தரிசிக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!