வெளியிடப்பட்ட நேரம்: 20:01 (01/12/2017)

கடைசி தொடர்பு:20:01 (01/12/2017)

செல்வகடாட்சம், குபேர யோகம் அருளும் தர்ப்பைலிங்கம்... திருவண்ணாமலையில் தரிசிக்கலாம்!

ர்ப்பைப் புல்! ஆன்மிகமும் மருத்துவமும் கொண்டாடும் ஓர் அதிசய சக்தி. `நூற்றுக்கணக்கான பிணிகளை அகற்றும் அற்புதம் தர்ப்பை’ என்கின்றன சித்தா, யுனானி மற்றும் ஆயுர்வேத மருத்துவம் சார்ந்த நூல்கள். பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்றின் தோஷங்களைப் போக்குவதுடன் சித்தா, யுனானி, ஆயுர்வேதா மருத்துவத்தில் நூற்றுக்கணக்கான நோய்களைப் போக்குகிறது என்கிறார்கள். ஆன்மிகத்தில் தர்ப்பை இல்லாத யாகமோ, பூஜைகளோ இல்லை எனலாம்.

தர்ப்பைலிங்கம்

விதையில்லாமல் முளைக்கும் தர்ப்பையை `தெய்வப்புல்’, `அமிர்த வீரியம்’, `குசப்புல்’... எனப் போற்றுகின்றன ஞான நூல்கள். `பிரம்மனின் வியர்வையில் தோன்றியது தர்ப்பை’ என்கின்றன புராணங்கள். `தர்ப்பையின் மீது அமர்ந்து சொல்லப்படும் மந்திரங்கள் வீரியம் பெறும்’ என்கிறது வேதம்.

தேவ காரியங்களுக்குக் கிழக்கு நுனியையும் பித்ரு காரியங்களுக்குத் தெற்கு நுனியையும் கொண்டு தர்ப்பையைப் பயன்படுத்துவார்கள். தர்ப்பை இருக்கும் இடத்தில் தீய சக்திகள் நுழையவே முடியாது என்பது நம்பிக்கை. பிரபஞ்ச வெளியில் உலாவும் காஸ்மிக் கதிர்களை ஈர்த்து அமைதியான சூழலை நம்முள் உருவாக்கும் அதிசய சக்தியைக் கொண்டது தர்ப்பை புல்.  தர்ப்பையிலிருந்து வெளிப்படும் மின் ஆற்றல் தீய அதிர்வுகளை விரட்டக்கூடியது. `பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் சக்தியும், நமக்குள் அமைதியையும் வல்லமையையும் உருவாக்கும் ஆற்றலும் தர்ப்பைக்கு உண்டு’ என்பது ஆன்மிகச் சான்றோர்களின் கருத்து.

ஈசான்ய மடம்

தர்ப்பைக்கு இவ்வளவு மகத்துவங்கள் எனில், தர்ப்பையாலான சிவலிங்கத் திருமேனியைத் தரிசித்து வழிபட்டால்?!

தர்ப்பையில் `ஆண் விசுவாமித்ரம்’, `பெண் விசுவாமித்ரம்’ என இரு வகைகள் உண்டு. இவற்றில், `பெண் விசுவாமித்ர தர்ப்பையைக்கொண்டு உருவான சிவலிங்கத்தைத் தரிசித்து வழிபட்டால், வறுமை நீங்கி செல்வகடாட்சம் உண்டாகும்’ என்கின்றன ஞான நூல்கள். மட்டுமின்றி தர்ப்பை லிங்க தரிசனத்தால் எதிர்பாராத அதிர்ஷ்ட யோகங்கள் கைகூடும், குபேர யோகம் ஸித்திக்கும், தர்ப்பையை இருப்பிடமாகக்கொண்ட பித்ருக்கள் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்கள், அதன் மூலம் பித்ரு சாபங்கள் விலகும் என்கின்றன.

மேலும், ‘தர்ப்பை லிங்க வடிவினை தரிசித்தால் கங்கையில் நீராடிய தூய்மையைப் பெறுவார்கள்; எத்தகைய சாபங்களைப் பெற்றிருந்தாலும், இந்தத் தர்ப்பை லிங்கத்தைத் தரிசித்தால் அவை நீங்கிவிடும் என்பது ஆன்மிகப் பெரியவர்களின் வழிகாட்டுதல் ஆகும்.

இவ்வளவு மகிமைகள்கொண்ட தர்ப்பை லிங்கத்தை, நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைப்பது பெரும் பாக்கியம் அல்லவா?

தர்ப்பைலிங்கம்

அந்த வகையில், திருவண்ணாமலையில் மகிமை மிகுந்த ஈசான்ய மடத்தின் வளாகத்தில் (ஈசான்ய தேசிகர் ஜீவ சமாதி, ஈசான்ய மடம், ஈசான்ய லிங்கம் எதிரில் - கிரிவலப் பாதை), சக்தி விகடன் மற்றும் காளீஸ்வரி ரீஃபைனரி தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனம் சார்பில், கோடி புண்ணியம் அருளும் தர்ப்பைலிங்க தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும் அழகிய வடிவில் லிங்கத்திருமேனி தர்ப்பையால் உருவாகி ஒரு மரகத லிங்கம் போல காட்சியளிக்கிறது. 

திருக்கார்த்திகை திருநாளில் மகா தீபத்தைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் அனைவரும் ஈசான்ய மடத்தின் வளாகத்தில் அமைந்துள்ள தர்ப்பைலிங்கத்தையும் தரிசித்து அருள்பெற்று வரலாம். தர்ப்பை லிங்க தரிசனத்தால் உங்கள் வாழ்வில் செல்வகடாட்சம் உண்டாகட்டும்; பித்ரு தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கட்டும்; உங்கள் சந்ததியினரின் வாழ்க்கைச் செழிக்கட்டும்.


டிரெண்டிங் @ விகடன்