திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது..!

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, ஏற்கெனவே கொடியேற்றப்பட்டிருந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான இன்று அதிகாலையில் கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபம் ஏற்பட்டது. முன்னதாக, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டிருந்தன. இன்று மாலையில், மகா தீபம் ஏற்றப்பட்டது.

மகா தீபம், இன்றிலிருந்து 11 நாள்கள் மலை மீது தொடர்ந்து எரிந்துகொண்டு இருக்கும். மகா தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து, இரவு 10 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், இதர வாகனங்களில் பஞ்ச மூர்த்தியர் தேரோட்டமும் கோலாகலமாக நடைபெறவுள்ளன. கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக நேற்று முதலே, லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டு, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரரை தரிசித்து வருகின்றனர். அதேபோல திருப்பரங்குன்றம், பழனி உள்ளிட்ட இடங்களில் கார்த்திகை தீபம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!