`விசுவாசம் என்பது வெறும் அன்பு மட்டுமல்ல!’ #BibleStories

பைபிளின் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து உவமைகளாகவும் உருவகங்களாகவும் கூறிய `பைபிள் கதைகள்' உலகம் முழுவதும் உள்ள மக்களால் பெரிதும் விரும்பிப் போற்றப்படுபவை. 

'மனிதர்களின் மனம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது' என்கிறார்கள். அதே அளவு வலிமைமிக்கது விசுவாசம். விசுவாசம் என்பது வெறும் அன்புதானா என்றால், அன்பு மட்டும் அல்ல. அதேபோல் விசுவாசம் என்பது வெறும் நம்பிக்கைதானா என்றால், நம்பிக்கை மட்டும் அல்ல. அன்புடன்கூடிய நம்பிக்கைதான் விசுவாசம். அது மலைகளையே நகர்த்தும் வலிமை வாய்ந்தது.

இயேசு

இயேசுகிறிஸ்து தனது பிரசங்கத்தின் வழி நெடுகிலும் விசுவாசத்தையே முதன்மைப்படுத்தி போதிக்கிறார். அவர் மீது மனிதர்கள் வைக்கும் விசுவாசத்தை வைத்தே அவர் அற்புதங்களை நிகழ்த்துகிறார். இங்கே ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.

இயேசு கிறிஸ்து செல்கிற இடமெல்லாம் பெருந்திரளாக மக்கள் கூட்டம் அவரைப் பின்தொடர்ந்தது. 

ஒருமுறை, அவர் படகிலிருந்து ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு வந்தார். 

அப்போது ஜெபக்கூட்டத் தலைவர் யவீரு என்பவர் அவரருகே வந்தார். அவர் கிறுஸ்துவைப் பார்த்ததும், அவருடைய காலில் விழுந்து வணங்கி, ``என் மகளின் உடல்நிலை மோசமாக இருக்கிறது. அவளை குணப்படுத்துங்கள்’’ என்று வேண்டினார். கிறிஸ்துவும் அவருடன் செல்ல, தன் சீடர்களுடன் புறப்பட்டார். பெரும் கூட்டம் ஒன்று அவரைப் பின்தொடர்ந்து சென்றது.

அந்தக் கூட்டத்தில், ஒரு பெண்ணும் நெருக்கித் தள்ளிக்கொண்டு முன்னேறினாள்.  அந்தப் பெண் 12 ஆண்டுகளாக மாதவிலக்கின்போது ஏற்படும் மிகுதியான ரத்தப்போக்கினால் பெரும் அவதிக்கு உள்ளாகி இருந்தாள். பல மருத்துவர்களைச் சென்று பார்த்த பிறகும் அவள் குணமடையாமல் துன்பத்தையே அனுபவித்து வந்தாள். 

விசுவாசித்த பெண்ணும் இயேசுவும்

தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் இதற்கே செலவு செய்துகொண்டிருந்தாள். ஆனால், நோய் மட்டும் குணமாகவே இல்லை. அவளுக்கு இயேசு கிறிஸ்துவின் மீது அளவு கடந்த நம்பிக்கை. அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட நாள் முதலே  தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் அவரைச் சந்தித்து ஆசி பெற வேண்டும் என எண்ணி இருந்தாள்.

அவளது எண்ணம் பூர்த்தியாகும்படி, இன்று அவரே அவளுடைய ஊரிலுள்ள தெருக்களில் மக்கள் திரளுடன் நடந்து சென்றுகொண்டிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் ஒரு பெண்ணாகத்தான் அவளும் சென்றாள். ''அவருடைய மேலங்கியைத் தொட்டாலே போதும், நான் குணமாகிவிடுவேன்'' என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.

இயேசு

கூட்டத்துக்குள் புகுந்து புகுந்து வந்தவள் அவரை நெருங்கி அவரது வஸ்திரத்தை தொட்டாள். அந்தப் பெண்ணின் உதிரப்போக்கு உடனே நின்றது. தன்னைப் பாடாகப்படுத்திய நோயிலிருந்து தான் விடுபட்டதை அவள் உணர்ந்தாள்.
இயேசு கிறிஸ்து, தனது பயணத்தை நிறுத்திவிட்டு, திரும்பிப் பார்த்தார். ``என் மேலங்கியைத் தொட்டது யார்?’’ என்று கேட்டார்.  அதற்கு அவரது சீடர்கள்,

``போதகரே! கூட்டம் இப்படி நெருக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது. இப்படியிருக்கும்போது, ‘யார் என்னைத் தொட்டது?’ என்று கேட்கிறீர்களே...’’ என்று அவருக்கு பதில் சொன்னார்கள்.

ஆனாலும், தன்னைத் தொட்டது யார் என்பதை அறிந்துகொள்ள சுற்றும் முற்றும் பார்த்தார் இயேசு. உடனே அந்தப் பெண் அவர் முன்பாக வந்து மண்டியிட்டு, வணங்கி எல்லா உண்மைகளையும் சொன்னாள்.
அதற்கு, கிறிஸ்து

``மகளே... உன் விசுவாசம் உன்னை குணப்படுத்தியிருக்கிறது. உன்னைத் துயரப்படுத்திக்கொண்டிருந்த நோயிலிருந்து விடுபட்டுவிட்டாய். சமாதானமாகப் போ'' என்று அவளை அனுப்பிவைத்தார். 
இந்தப் பெண் ஆண்டவரிடம் பிரார்த்திக்கவில்லை. அவரிடம் எந்த வேண்டுகோளையும் வைக்கவில்லை. இயேசு கிறிஸ்துவின் மீது கொண்ட அன்புடன் கூடிய நம்பிக்கை விசுவாசம் அந்தப்பெண்ணை சுகமாக்கியது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!