Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அடர்ந்த வனத்தில் அழகு ஹனுமன்- பாகல்பட்டி ஆஞ்சநேயர்!

ருமபுரி - சேலம் சாலையில் தருமபுரியிலிருந்து சுமார் 14 கி.மீ.தொலைவில் உள்ளது பாகல்பட்டி (முத்தம்பட்டி) கிராமம். அங்கிருந்து பிரிந்து செல்லும் குறுகிய சாலையின் முனையில் ஏராளமான ஷேர் ஆட்டோக்களும் கார்களும் வரிசை கட்டி நிற்கின்றன. அந்தக் குறுகிய சாலையில் போவதும் வருவதுமாக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அடர்ந்த அந்த வனத்தின் ஊடே செல்லும் சாலை எங்கே முடிகிறது. 

அங்கே என்ன அற்புதம் இருக்கிறது?

ஆஞ்சநேயர் கோயில்

மிகப்பெரிய பாறை ஒன்றில் சற்று ஒழுங்கற்ற வடிவத்தில் செதுக்கப்பட்டிருக்கிறது ஆஞ்சநேயரின் திருவுருவம். இவரைக் காண தமிழகம் மட்டுமல்லாமல், கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வளவு ஏன், பெங்களூரிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில், பக்தர்களின் வசதிக்காக, நிறுத்தம் இல்லாத அந்த இடத்தில் இரண்டு நிமிடம் நின்று செல்கிறது என்பதில் இருந்தே, ஆஞ்சநேயரின் அருள்திறனை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆயிரக்கணக்கில் பக்தர்களின் பேச்சுக் குரல்கள் அந்தப் பகுதியில் கேட்டாலும், அத்தனை சத்தத்துக்கும் நடுவில், ஓர் அமைதி தவழ்வதை நம்மால் உணரமுடிகிறது. அமைதியின் மடியில் ஆனந்தமாக அருளும் ஆஞ்சநேயரை தரிசித்து வழிபட்ட பிறகு, ஆஞ்சநேயரின் வரலாறு பற்றி அங்கிருந்த பூஜாரி ஒருவரிடம் பேசினோம்.

ஆஞ்சநேயர் கோயில்

''இந்த ஆஞ்சநேயர் யாரால் பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்பது பற்றி யாருக்கும் தெரியாது. 1962-ம் ஆண்டு இந்தப் பகுதியில் ரயில்வே பணிகள் நடைபெற்றபோதுதான், இந்த ஆஞ்சநேயரைப் பற்றி வெளியில் தெரியவந்திருக்கிறது. காட்டுப் பகுதி என்பதால் முதலில் பக்தர்கள் வருவதற்கு அச்சப்பட்டார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பக்தர்கள் வரத் தொடங்கினர். அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால், தீப்பந்தங்களைக் கொளுத்திக்கொண்டுதான் வருவார்கள். முதலில் அமாவாசையன்று மட்டுமே வருகை தந்த பக்தர்கள் இப்போது தினமும் ஆயிரக்கணக்கில் வந்து ஆஞ்சநேயரை வழிபட்டுச் செல்கின்றனர். வேண்டுதல் நிறைவேறும் பக்தர்கள், ஆடு மற்றும் மாடுகளைக் காணிக்கையாகக் கொடுக்கின்றனர்.

பாகல்பட்டி ஆஞ்சநேயர்

கோயிலுக்கு அருகில் ஒரு நீரோடை ஆஞ்சநேயரின் திருவடிகளுக்கு அருகில் ஓடுவதால், அதைப் புனிதத் தீர்த்தமாகப் போற்றுகிறார்கள் பக்தர்கள். நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கவே, தற்போது இந்தக் கோயிலை அறநிலையத்துறை எடுத்துக்கொண்டு, பக்தர்களின் வசதிக்காக மின்விளக்குகள் அமைப்பது போன்ற வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர். தெற்கு நோக்கி அன்னை சீதாவை கண்டறிய கிளம்பிய ஹனுமனின் கோலத்தை இங்கு காணமுடிவதால் இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு காரியசித்தி உண்டாகும் என்பது நம்பிக்கை. ஹனுமனைப்போல ஒரு பக்தர் இருந்ததால்தான் ஸ்ரீராமர் அளப்பரிய வெற்றிகளைப் பெற்றார். எனவேதான் அனுமன் 'சொல்லின் செல்வர்' என்பதைத்தாண்டி 'செயல் வேந்தர்' என்ற புகழையும் பெற்றார்.

ஆஞ்சநேயர்

தெற்கு நோக்கிக் காட்சி தரும் இந்த ஆஞ்சநேயரை வழிபடும் பக்தர்களின் துன்பங்கள் உடனே நீங்கும். அவர்களுடைய வேண்டுதல்கள் வேண்டியபடியே நிறைவேறுகிறது'' என்றார். அவர் கூறியது உண்மைதான் என்பதை அந்த வனப் பகுதியில் குவிந்திருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் கூட்டமே நமக்கு உணர்த்துகிறது.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement