Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்- அமானுஷ்யத் தொடர்! - 3

சித்தர்கள் ஜீவசமாதி

இந்தத் தொடரின் முதலாம் அத்தியாயத்தைப் படிக்க ......

இந்தத் தொடரின் இரண்டாம் அத்தியாயத்தைப் படிக்க ......

மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்

குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ

உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்

முலைமேல் அமிர்தம் பொழியவைத்தானே!
 

-திருமந்திரம் - 2882

 

பொருள்

கொல்லனின் பட்டறை உலையில் இட்ட இரும்பு, நெருப்போடு நெருப்பாக உருமாறிவிடுவதைப்போல், சீவன் சிவனோடு இரண்டறக் கலந்து விடுகிறது. தியானப் பயிற்சியின் உச்சத்தில் சீவன் சிவனோடு கலந்து அடையும் பேரானந்த நிலையை வர்ணிக்கிறது இந்தப் பாடல்.

'கடவுளைக் காண முயல்பவர்கள் பக்தர்கள். கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள்!' - என்பது சித்தர் ஆய்வாளர்களிடையே புழங்கும் சொலவடை.

 

'பாரப்பா விப்படியே சித்தரெல்லாம்

பலவிதமா யகண்ட பூமியெல்லாம்

ஆரப்பா வங்குமிங்கு நிறைந்துநின்றா

ரவரவர்கள் பிள்ளைகளு மப்படியே நின்றார்

சீரப்பா சித்தருட மூலங்காணச்

செகத்திலே யெவரறியப் போராரையா

நேரப்பா நாமறிந்து சிறிது சொன்னோம்

நிலைகாட்டாச் சித்தர்களு மறைந்திட்டாரே'
 

எனச் சித்தர்களைப் பற்றி போகர் உரைக்கிறார். (ஜெனன சாகரம் - பாடல்: 314) சித்தர்கள் இந்த அகண்ட பூமியில் மலைகளிலும், குகைகளிலும், வனங்களிலும் மறைந்து நின்றனர். அவர்களின் மூலத்தைக் கண்டறிய யாருக்கும் சக்தியில்லை. என் சக்திக்கு எட்டிய சிலவற்றைச் சொன்னேன். நிறைவாவதற்கென மறைவாகவே வாழ்கின்றனர் எல்லா சித்தர்களும் என்பதே இந்தப் பாடலின் சாரம்.

சித்தர்கள்
 

'நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காதே!' - என்ற சொலவடை வந்தது இதனால்தான். அவர்களைப் பற்றிய ஆராய்ச்சியைத் தவிர்த்து, அவர்கள் காட்டிய நெறிகளில் மனதைச் செலுத்தி உலக வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே இதன் அர்த்தம்!

முழுமை பெற்ற சித்தர்களின் அடையாளங்கள் எவை என்பதை கோரக்கர் 'பிரம்ம ஞான தரிசனம்' என்னும் பகுதியில் இப்படிப் பாடுகிறார்.

'கூரான வாசி மறித்தவனே சித்தன்

குறிகண்டு மாயை வென்றவனே முத்தன்

பூராயம் தெரிந்தவனே கிரியைப் பெற்றோன்

பூவுலகில் வசித்தவனே சரியை மார்க்கன்

நேரான தீட்சை பெற்றோன் சிவமுத்தன்

நிறைசிவயோகம் புரிந்தான் ஞானியாமே'

முழுமையான சிவயோகம் புரிந்து, சித்தனாகி, குருவாகிய ஆதிசித்தனிடம் தீட்சை பெற்று சீவன் முக்தனாகி, பூவுலக இல்வாழ்வில் கடமையாற்றி, சரியை வழி அடைந்தவனாகி, மூன்று மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை வென்று, சித்தர்களின் பரம ரகசிய மையமான பிரம்ம மூப்பைக் கண்டு பேரானந்த பிரம்மானந்த நிலையில் சதாசர்வ காலமும் லயித்து இருப்பவனே பூரண சித்தன் என கோரக்கர் சித்தர்களை அடையாளப்படுத்துகிறார்.

சித்தர்களில் தனியிடம் போகருக்கு உண்டு. ஏனெனில் பல சித்தர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளை அவர் இயற்றிய ஜெனன சாகரம் நூலின் வழியேதாம் அறிய முடிகிறது.

அவர் பழநிமலையில் சமாதி அடைவதற்கு முன்பாக தன் வரலாற்றை ஜெனன சாகரம் என்னும் நூலில் எழுதி வைத்தார். பிறகு கோரக்கரை அழைத்தார். தன்னை சமாதி அடக்கம் செய்துவிட்டு உரகை என அழைக்கப்படும் நாகப்பட்டினத்துக்குச் செல்லும்படி கட்டளையிட்டார். அங்கு சென்றபின், தான் பழநியில் அடக்கம் செய்த சமாதியிலிருந்து வெளிப்பட்டு நாகை சென்று அங்கு கோரக்கரைச் சந்திப்பதாகவும் சொன்னார். அவரின் சொற்படி பழநியில் முறையாக போகரை சமாதி நிலையில் அடக்கம் செய்துவிட்டு கோரக்கர் நாகை சென்றார்.

பழநியிலிருந்த போகர், ககனமார்க்கமாக நாகப்பட்டினம் சென்றார். கோரக்கரைச் சந்தித்து அவரை வடக்குப் பொய்கை நல்லூர் கிராமத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு கோரக்கரை அடக்கம் செய்துவிட்டு ககனவெளிப்பாதையில் கடல் தாண்டிச் சென்றார்.

இந்தச் செய்திகள் கோரக்கரின் தனிநூல் தொகுப்புகளில் காணப்படுகிறது. (நூல் எண்: 4,5,6)

சித்தர்கள் ஜீவசமாதி
 

ஆகிட இந்நூல்களைச் சித்தன் யானும்

அறிந்த மட்டும் காவிரியின் நதிபாங்குற்று

மோகிதமாய்ச் சோழநாட்டின் கொள்ளிட மப்பால்

முத்தாநதிதீரம் பரூர்ப்பட்டி சிற்றூர்

ஏகிநிறை சமாதியுற்றேன் அதுமுன்னால்

இயற்றும் இந்நூல் வழுத்தல் இனி உற்றேனார்

பாகிதமாய்ப் பாடியபின் பலதேசம் போய்

பரிவாய் முன்னுற்ற பொய்கையூரில் வந்தேன்.

 

வந்தவுடன் சடையப்பக் கவுண்டன் என்னை

வாகுடனே அனுசரித்து வாழ்த்தி நின்றான்

அந்தமுடன் பரிவிருத்தி நானூற்றெட்டு

ஐப்பசிநேர் தசமிதிதி பரணித்திங்கள்

சிந்தையுறச் சமாதிநிலை யானடைந்து

சிதறாமல் சீருலகில் வாழ்ந்து சித்தாய்க்

கந்தமணம் வீசிடவும் காட்சியாகக்

காசினியில் சாவு இவனுக்கில்லை யாமே
 

22-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிய பின் கோரக்கர் வான்வெளி வழியாக பல தேசங்களுக்கும் போய் வந்திருக்கிறார். பழனிமலைக்கு வந்த கோரக்கர், போகருடன் இணைந்து மூலிகைகளை ஆராய்ச்சி செய்து பல அபூர்வ மருந்துகளைக் கண்டறிந்துள்ளார். இருவரும் நீண்ட நாள் வாழக்கூடிய கற்ப ஔடதங்களை உண்டிருக்கின்றனர். பல ஆச்சர்யமான சித்தாடல்களைப் புரிந்துள்ளனர்.

ககன மார்க்கமாக கோரக்கரும் போகரும் சீனதேசம் சென்று வந்திருக்கின்றனர். மீண்டும் நாகை வடக்குப் பொய்கை நல்லூருக்கு கோரக்கர் வருகிறார். அவரை சடையப்ப கவுண்டர் வர வேற்றிருக்கிறார். பர்விரத்தியாண்டு 408 ஐப்பசி மாதம், தசமி திதி, பரணி நட்சத்திரம் தினத்தில் வடக்குப் பொய்கை நல்லூரில் இரண்டாம் முறையாக சமாதி எய்தி இருக்கிறார். எவ்வித உடல் சிதைவும் இன்றி நறுமணம் கமழ சமாதியிலிருந்து வெளிப்பட்டு, ''எனக்கு இந்த பூமியில் சாவு இல்லை!'' எனச் சொல்லியுள்ளார். மேற்கண்ட கோரக்கரின் பாடல்கள் வழியே நாம் இந்தச் செய்திகளை அறிய முடிகிறது.

சித்தர்கள் ஜீவசமாதி

 

இதேபோல் சித்தர் போகரும், தனக்கும் தன் குரு காலாங்கிநாதருக்கும் உள்ள உறவு குறித்தும் தன் சீடர் புலிப்பாணி குறித்தும் தன் சப்த காண்டம் நூலில் குறிப்பிடுகிறார். (போகர் - 7000)

தான் கற்ற மந்திரம், யந்திரம், தந்திர முறைகளில் தேர்ந்து, அதன் ஆற்றல்களால் உலகின் எட்டுதிசைகளுக்கும் சென்று வந்ததாகவும் கூறுகிறார்.

தான் கற்ற யோகக் கலையின் மூலம், மூன்று யுகங்களாக நெடுந்தவம் இயற்றி வரும் சித்தர் திருமூலரைச் சமாதி நிலையில் கண்டதாகவும் குறிப்பிடுகிறார். போகர், திருமூலரைச் சமாதி நிலையில் கண்டபோது அவர் எப்படியிருந்தார் என்பதை வர்ணிக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.

திருமூலரின் உடலை ஒரு ஜொலிக்கும் ஒளிப்பிழம்பாக கண்ணுற்றதாகவும், அவர் எழுந்து நின்ற சமாதியைச் சுற்றி ஒளிவட்டம் வீசியதாகவும், அவரின் உடலிலிருந்து பல அபூர்வ மலர்களின் நறுமணங்கள் வீசியதாகவும் பரவசமாகக் குறிப்பிடுகிறார்.

போகர் 7000 நூலில் இன்னும் பல ஆச்சர்யமான, அமானுஷ்யமான தகவல்களையும் அவர் குறிப்பிடுகிறார்.

ஜெருசலத்திற்கு தன்னுடைய புகை ரதத்தில் (Rail) சென்றதாகவும், இயேசு கிறிஸ்துவின் சீடர்களைக் கண்டதாகவும், அங்கிருந்து ரோமாபுரிக்குச் சென்று இயேசுநாதரின் சீடர்களின் சமாதிகளைக்கண்டதாகவும் கூறியுள்ளார் (மூன்றாவது காண்டம் செய்யுள்: 215)

இம்மானுவேல் என்ற பெயரைக் குறிப்பிட்டு, இயேசுவின் சமாதியில் தான் தியானம் செய்ததையும் குறிப்பிடுகிறார் (செய்யுள் 216)

அங்கிருந்து புறப்பட்டு மெக்கா சென்றடைந்ததாகவும், முகமது நபியின் சீடர்களைப் பார்த்ததாகவும் கூறுகிறார் (செய்யுள் 228-230)

அங்கு யாகோபு சித்தரைக் கண்டதாகவும், அவர் தன்னிடம் தீட்சை பெற விரும்பியதாகவும் குறிப்பிடுகிறார்.

போகர் குறிப்பிடும் இந்த நிகழ்ச்சிகளை அறிவியல் சார்பாளர்கள் கற்பனைக் கதை எனக் குறிப்பிடலாம். ஆனால், அவர் கூறிய இந்த அபூர்வமான தகவல்கள் எல்லாம், அவர் சமாதி நிலையில் இருந்தபோது, மெய்யுணர்வின் உச்சநிலையில் அகக் கண்ணில் கண்ட காட்சிகள்!

போகரின் க்ரியா யோகத்தினால் இறந்தவரை பிழைக்க வைக்க முடியும் என்று கூறுகின்றனர். மனதின் மீதும் மரணத்தின் மீதும் நுண்ணிய ஆதிக்கம் செலுத்தி உயிர்த்தெழும் அற்புதங்கள் நிகழ்த்த முடியும் என்பது க்ரியா யோகத்தின் மகா ஆற்றல் எனச் சொல்லப்படுகிறது.

இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு மரித்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததே அவர் பயின்ற க்ரியா யோகத்தின் அற்புதம் என்றும் சில யோகிகளால் கூறப்படுகிறது.

-பயணம் தொடரும்...

இத்தொடரின் பிற அத்தியாயங்கள் : அத்தியாயம் 1அத்தியாயம் 2 | அத்தியாயம் 3 | அத்தியாயம் 4   

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

நீங்கள் கீழே விழுபவரா, கெட்டியாகப் பற்றிக்கொள்பவரா? - பாசிடிவ் வார்த்தைகளின் பலம் உணர்த்தும் கதை! #MotivationStory
Advertisement

MUST READ

Advertisement