வெளியிடப்பட்ட நேரம்: 12:29 (09/12/2017)

கடைசி தொடர்பு:12:47 (09/12/2017)

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3

 

கடவுளைத்தேடி

இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தைப் படிக்க ......

இந்தத் தொடரின் இரண்டாம் அத்தியாயத்தைப் படிக்க ......

உயரம் எதற்கான குறியீடு? மேன்மை, சிறப்பு, புகழ், வளர்ச்சி... அடுக்கிக்கொண்டேபோகலாம். கந்தன் குடிகொண்ட மலைகளின் உயரம் உணர்த்தும் குறியீடு வேறு. மலையைப் பார்க்கும்போதெல்லாம், `இதில் ஏறித்தான், இதைக் கடந்துதான் முருகனைத் தரிசிக்க முடியும்’ என்கிற எண்ணம் பக்தனுக்கு வரும். `இந்த உயரத்துக்கு முன் நான் சிறியேன்’ என்கிற நினைப்பு அழுத்தமாக மனதில் பதியும். உயரமான மலையைத் தன் திருப்பாதங்களால் அழுத்தி நின்றுகொண்டிருக்கும் கந்தப்பெருமானின் பெருமை, மனத்துக்கு தெளிந்த நீராகப் புலப்படும். கந்தவேலை தரிசித்து முடித்து, மலையிலிருந்து இறங்கும்போது, விடுவிடுவென கீழிறங்குவோம். கனிந்துருகி கந்தனை வழிபட்டதற்கு இயற்கையும் இறைவனும் காட்டும் கருணையின் அடையாளம் அது. 

ஞானமலை அத்தனை உயரமில்லை. சின்னஞ்சிறு குன்று என்றே சொல்லலாம். மொத்தமே 150 படிகள்தான். அடிவாரத்திலிருந்து பார்த்தபோதே, அழகான படிகள் நம்மை `வா... வா...’ என அழைத்துக்கொண்டிருந்தன. மலையைச் சுற்றி இயற்கையின் பசுமை, பச்சை மையைத் தரையெங்கும் தீற்றியதுபோல ரம்யமாக இருந்தது. பொட்டல்காட்டைக்கூட பட்டா போட்டுவிடும் ஆக்கிரமிப்புகளைச் சுற்றிலும் காண முடியவில்லை.  மொத்தத்தில் இயற்கை, ஒரு குழந்தையைப்போல ஆர்ப்பரித்துக்கொண்டிருந்ததாகத் தோன்றியது. 

ஞானமலை பயணம்

ஐவகை நிலங்களில் மூத்தது குறிஞ்சி. மலையும் மலைசார்ந்த இடமுமே குறிஞ்சி. அதன் கடவுள் முருகன். கற்சிலைகளாகவும், உலோகச் சிலைகளாகவும் வடிக்கப்பட்ட கடவுளர்களை வணங்குவது, வழிபடுவது பக்தியின் ஆரம்பநிலை. இயற்கையின் ஒவ்வொரு துளியிலும் ஆண்டவன் உறைகிறான் என்பதே நிஜம். அந்த வகையில், ஞானமலையின் இயற்கைத் தோற்றம் முழுவதிலும் இறைவன் வியாபித்திருந்தான். `காக்கைச் சிறகில், அதன் கறுமை நிறத்தில் கண்ணனை பாரதியால் எப்படிப் பார்க்க முடிந்தது’ என்பதை ஞானமலையில் நம்மால் உணர முடிந்தது.  ஒவ்வொரு புல்லிலும், பூவிலும் குமரன் தன் அழகுக்கோலத்தை உள்ளேயிருத்திக் காட்சி தந்துகொண்டிருந்தான். 

கடவுளைத் தேடி

அடிவாரத்தில் இருந்த 'ஞானமலை ஞானாச்ரம’த்தைச்  சுற்றிவந்தோம். அமைதி தவழும் இடமாக இருந்தது ஆஸ்ரமம். அங்குதான் ஞானமலை முருகப்பெருமானின் உற்சவ மூர்த்தியை வைத்திருக்கிறார்கள். மிக எளிமையான அந்த ஆஸ்ரமத்தில், மயில் வாகனத்தில் மிடுக்காக அமர்ந்து காட்சிதருகிறார் முருகப்பெருமான்.  200 கிலோ எடைகொண்ட, பஞ்சலோகத்தால் ஆன சிலை. 'குறமகள் தழுவிய குமரன்' , தன் இடது தொடையில் வள்ளிப்பிராட்டியை அமர்த்தி, அணைத்தபடி தரிசனம் தருகிறார். வள்ளிப்பிராட்டியின் வலதுகரம், முருகப்பெருமானின் முதுகைத் தொட்டுச் சேர்த்தணைத்தபடி இருக்கிறது. மனமொத்த தம்பதிகளின் ஏகாந்த வடிவம் அது. 

முருகன் வள்ளி

மயில் வாகனத்தின் காலுக்குக் கீழே படமெடுத்த நிலையில் நாகம். முருகனை மனமுருக தியானித்த நிலையில், நின்ற கோலத்தில் அருகே அருணகிரிநாதர். ``அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல் ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் கோலத்தின் அடிப்படையில்தான் இந்த உற்சவர் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சி தந்த கோலமும் இதுதான்’’ என்றார், ஆஸ்ரம நிர்வாகி ஒருவர்.  திருமுருகனோடு, அழகிய பிரதோஷ மூர்த்தி, அம்பாளுடன் உற்சவ சிலைவடிவில் அருள்பாலிக்கிறார். 

``மலை மேல் உற்சவ, அபிஷேக சிலைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது என்பதால்தான், கீழே ஆஸ்ரமத்தில் வைத்திருக்கிறோம். அபிஷேகத்தின்போதும், விழாக்காலங்களிலும் சிலைகளை மலைமீது கொண்டுபோய்விடுவோம்’’ என்கிறார்கள் நிர்வாகிகள்.  மலை வாயிலை அடைந்தோம். `ஞான பண்டித சுவாமி திருக்கோயில்’ அலங்கார நுழைவு வாயில் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. அதன் இடதுபுறத்தில் அமைந்திருக்கிறது ஊர் கிராம தேவதையின் ஆலயம். `பொன்னியம்மன்’ என்ற பெயரில், அமர்ந்த கோலத்தில், நான்கு கரங்களோடு திருக்காட்சி தருகிறாள் சக்தி. அவளை மனதாரப் பிரார்த்தித்துக்கொண்டு பயணத்தைத் தொடங்கினோம். 

பொன்னியம்மன்

மலையின் தொடக்கத்திலேயே வலது புறத்தில் விநாயகர். சின்னஞ்சிறு சந்நிதியில் 'ஞான சித்தி கணபதி' அருள்பாலிக்கிறார். பரசு, மாங்கனி, கரும்புத்துண்டு, பூங்கொத்து எனப் பல அபூர்வப் பொருள்களைத் தனது கரங்களில் ஏந்தியபடி, ஞானமே வடிவாகக் காட்சி தருகிறார் கணபதி. நேர்த்தியான விநாயகரின் உருவம், சிற்பக்கலையின் உன்னதத்தை நமக்கு உணர்த்தியது. பிள்ளையாரின் அழகில் மயங்கி, சற்று நேரம் கரம்கூப்பியபடி அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம். பிறகு, கணபதியை வணங்கி உத்தரவு பெற்றுக்கொண்டு மலை ஏறத்தொடங்கினோம். 

ஞான கணபதி

சற்று தூரத்தில் ஒரு பிரமாண்டமான பாறையைத் தழுவி, படர்ந்து வளர்ந்திருந்தது ஓர் ஆலமரம். பார்ப்பதற்கு அப்படியே சோமாஸ்கந்தரை நினைவுபடுத்தும் தோற்றம். சிவ, சக்தி, சுப்ரமணிய திருக்கோலத்தை நம் கண்முன்னே காட்சிப்படுத்திக்கொண்டிருந்தது அந்த மரம்.

ஞானமலை யாத்திரை

மலையெங்கும் விதவிதமான,  மிக அரிதான மரங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அரிதாகிப்போன வெப்பாலை, குடசப்பாலை, கல்லாலம் உள்ளிட்ட பல மரங்கள், இங்கே சாதாரணமாக வளர்ந்து நிற்கின்றன. மரங்களைக் கடந்து வரும் காற்று, நம் உடலையும் மனதையும் ஒருசேர குளிர்விக்கிறது. 25 ஏக்கர் நிலப்பரப்பில், 2 கிலோமீட்டர் சுற்றளவில்  பரந்து விரிந்திருக்கிறது ஞானமலை. முருகப்பெருமானை தரிசிக்க வரும் பக்தர்களைத்தான் எழுந்துநின்று வரவேற்க முடியாது என்ற காரணத்தால் மலைமகள், குளிர்ந்த காற்றை அனுப்பி நம்மை வரவேற்றுக்கொண்டிருந்தாள். மலை வளத்தையும், மலைப்பாதையின் வழியே அந்த ஊரின் நில, நீர் வளங்களையும் பார்த்து ரசித்தபடி பயணத்தைத் தொடர்ந்தோம். 

``இந்த மலையின் வடமேற்குப் பகுதியில் வள்ளிமலை, வடக்கில் சோளிங்கர் மலை, வடகிழக்கில் திருத்தணிகை மலை அமைந்திருக்கின்றன. வள்ளிமலை, சோளிங்கர், திருத்தணிகை மூன்று மலைகளையும் ஒரே நாளில் காலை, நண்பகல், மாலை  என மூன்று வேளைகளில் தரிசிப்பது விசேஷம்’’ என்றார் நம்முடன் வந்தவர். ``இந்தப் புகழ்பெற்ற மூன்று திருத்தலங்களுக்கு வரும் அன்பர்கள் ஞானமலைக்கும் வர வேண்டும். ஞானமலையின் அமைதியும் இயற்கைச் சூழலும் அலாதியானது என்பதை வந்தவுடன் உணர முடியும். முருகப்பெருமானின் திருவடிகளைத் தாங்கி நிற்கும் இந்த மலை, இறையனுபவத்திலும் மிக மிகச் சிறப்பான மலைதான்’’ என்றார் நம் நண்பர். 

பரவசப் பயணம்

மலை உச்சிக்கு, படிகளின்  வழியாக பக்தர்கள் ஏறிச்செல்ல ஒரு வழி, வாகனங்கள் சென்று வர ஒரு வழி என இருவழிகள் இருந்தன. நாம் படியேறி மலைமீது செல்லத்துவங்கினோம். படிகள் முடிவுற்ற இடத்தில், வலது புறமாக ஒருவர் தவமிருந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் நாங்கள் அப்படியே நின்றுவிட்டோம். யார் அவர்? அடுத்த பகுதியில்...

பயணிப்போம்...

 

படங்கள் - ச.வெங்கடேசன்


டிரெண்டிங் @ விகடன்