வெளியிடப்பட்ட நேரம்: 20:57 (08/12/2017)

கடைசி தொடர்பு:07:43 (09/12/2017)

திருப்பதி யாத்திரை முழுமைபெற இவரை வணங்க வேண்டும்! #Tirupathi

"பள்ளியாவது பாற்கடல் அரங்கம்

இறங்கவன் பேய்முலை

பிள்ளையாய் உயிருண்ட எந்தை

பிரான் அவன் பெருகுமிடம்

வெள்ளியான் கரியான்

மணிநிற வண்ணன் என்று எண்ணி

நாள்தொறும் தெள்ளியார் வணங்கும் மலைத்

திருவேங்கடம் அடை நெஞ்சமே"...

(பெரிய திருமொழி)

உலகமெல்லாம் ஸ்ரீநாராயணனின் திவ்யரூபம் வியாபித்திருந்து அருளாட்சி செய்து வந்தாலும் அவன் விரும்பி உறையுமிடம் திருப்பதி திருமலைதான். பாற்கடல், திருவரங்கம் உள்ளிட்ட எல்லா தலங்களிலும் திருமால் வீற்றிருந்தாலும், அவர் வளர்ந்துகொண்டே இருக்கும் திருத்தலம் திருப்பதி திருமலைதான் என்று மேற்கண்ட பாசுரம் கூறுகின்றது. பக்தவத்சலனாக, பரமதயாளனாக வீற்றிருக்கும் திருமலை வேங்கடேச பெருமாள் வேண்டியதை வேண்டுமளவுக்கு தரக்கூடிய கலியுக வரதன். அதனாலேயே நாள்தோறும் அங்கு கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளது. எனினும் அங்கு செல்லும் எல்லா பக்தர்களுமே பெருமாளை நின்று நிதானித்து வணங்க முடிவதில்லை. காரணம் அங்கு கூடி இருக்கும் எண்ணிலடங்காத பக்தர்களின் கூட்டம்தான்.

திருமலை வேங்கடேசர்
 

கருவறையில் சற்று நேரம் கண்குளிரக் காண முடியாத வேங்கடேச பெருமாளை பக்தர்கள் வெளியே வந்து ஓர் இடத்தில் கண்குளிர தரிசித்து அருள் பெறுகிறார்கள். அவர்தான் விமான வேங்கடேச பெருமாள். ஆகமப்படி வீற்றிருக்கும் இந்த அழகிய பெருமாள் விமான சீனிவாசர் என்றும் விமான வேங்கடேஸ்வரர் என்றும் வணங்கப்படுகிறார். திருமலை திருப்பதியில் வேங்கடேச பெருமாள் கருவறையில் இருப்பதைப்போலவே நின்றிருக்கும் கோலத்தில் நான்கு திருக்கரங்களோடு, பின்புறக் கரங்கள் சங்கு சக்கரம் ஏந்தியிருக்க, முன் வலக்கை அபயஹஸ்தமாகவும், முன் இடக்கை இடுப்பில் வைத்தவாறும் விமான வேங்கடேஸ்வரர் காட்சி தருகிறார். இவரின் இடப்புறம் ஆஞ்சநேயரும், வலப்புறம் கருடபகவானும் வீற்றிருக்கிறார்கள்.

திருப்பதி பெருமாள்

திருமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோயில் சுமார் 2.20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மூன்று பிராகாரங்கள் கொண்டுள்ளது. திருமலை வேங்கடேச பெருமாள் உறையும் கருவறைக்கு மேலே உள்ளதுதான் ஆனந்த விமானம் என்னும், பொன்னாலான அழகிய விமானம். பார்த்த நிலையிலேயே ஆனந்தத்தை அளிக்கும் தெய்விக விமானம் என்பதாலேயே இது ஆனந்த விமானம் என்று அழைக்கப்பட்டது போலும். கலசத்துடன் சுமார் 88 அடி உயரமான இந்த விமானம் எப்போது உருவானது என்று அறிய முடியவில்லை. பொன்மயமான மேருமலையே ஆனந்த விமானமாக மாறி திருமலையில் அமைந்ததாக திருமலைப் புராணம் கூறுகின்றது.

திருமலை வேங்கடேசர்

ஜடாவர்மன் சுந்தர பாண்டிய அரசரால் இந்த விமானம் கிபி 12-ம் நூற்றாண்டில் புனரமைக்கப்பட்டதாகக் கல்வெட்டு தெரிவிக்கிறது. வீரநரசிங்கராயர் என்ற அரசர், அவருடைய உடல் எடைக்கு நிகராக தங்கத்தை துலாபாரம் அளித்தார் என்றும், அந்தத் தங்கத்தால்தான் இந்த ஆனந்த விமானம் பொன்னால் வேயப்பட்டது என்றும் கல்வெட்டு கூறுகிறது. இந்த விமானத்தின் பெருமையே அதில் சுயம்புவாக எழுந்தருளி இருக்கும் விமான வேங்கடேசர் திருவுருவம்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆனந்த விமானத்தில் சுயம்புவாக வீற்றிருக்கும் விமான வேங்கடேச பெருமாளை தரிசனம் செய்தால் மூலவரான வேங்கடேச பெருமாளை தரிசித்ததற்கு இணையானது என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது. கருவறை பெருமாளை வணங்கிவிட்டு வெளிச்சுற்றில் வரும்போது விமானத்தின் வடகிழக்கு மூலையில் வீற்றிருக்கும் இந்த விமான வேங்கடேச பெருமாளை கட்டாயம் வணங்க வேண்டும். இவரை மனமார வணங்கி வேண்டினால் எல்லா பாவங்களும் நீங்கி குடும்ப ஒற்றுமை வளரும் என்பது நம்பிக்கை.

விமான வேங்கடேசர்

(போட்டோ -   விக்கிபீடியா) 

வெள்ளி திருவாசியோடு வேயப்பட்ட இந்த பொன்னாலான வேங்கடேசர் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஶ்ரீவியாசராய தீர்த்தரால் வணங்கப்பட்டவர். இவரே திருப்பதி வேங்கடவன் கோயிலின் வழிபாட்டு முறைகளை நெறிப்படுத்திக் கொடுத்தவர். ஏழுமலையானின் மீது பக்தி கொண்ட இந்த பெரியவர் விமான வேங்கடேசரை வணங்கி முக்தியடைந்தார். இவர் விமான வேங்கடேசரை தரிசித்த மண்டபம் இன்றும் ஸ்ரீ வியாசராயர் மண்டபம் எனப்படுகிறது. 1958-ம் ஆண்டு ஆனந்த விமானம் புனரமைக்கப்பட்டபோது, விமான வேங்கடேசரும் இன்னும் கூடுதல் ஒளியுடன் பிரகாசிக்கத் தொடங்கினார்.

அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் வைகுண்ட ஏகாதசி நாளில் சொர்க்கவாசல் திறப்பின்போது வடக்கு நோக்கி எழுந்தருளும் பெருமாள், திருமலையில் மட்டுமே எப்போதுமே வடக்கு நோக்கி காட்சி தரும் விமான வேங்கடேசராகக் காட்சி தருகிறார். இவரை தரிசிப்பதன் மூலம் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். விமான வேங்கடேசரை தரிசித்து வழிபட்ட பிறகுதான் திருமலை திருப்பதி யாத்திரை பூரணத்துவம் பெரும் என்பது ஐதீகம்.


டிரெண்டிங் @ விகடன்