வெளியிடப்பட்ட நேரம்: 17:57 (10/12/2017)

கடைசி தொடர்பு:17:57 (10/12/2017)

காரிய சித்தி, கடல் கடந்த பயணம், வியாபார வெற்றி அருளும் மயிலை ஸ்ரீஆஞ்சநேயர்!

சென்னையில் இருக்கும் ஆன்மிக அன்பர்கள் 'லஸ் ஆஞ்சநேயர்' கோயில் என்றால் உடனே தெரிந்து கொள்வார்கள். சுமார் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த மயிலாப்பூர் வீர ஆஞ்சநேயர் கோயில் மயிலை- ராயப்பேட்டை சாலையில் லஸ் பகுதியில் சம்ஸ்கிருத கல்லூரிக்கு அருகே உள்ளது. முன்பு இந்த ஆலயத்தின் அருகே மிகப்பெரிய தண்ணீர்த்துறை மார்க்கெட் இருந்து வந்தது. இப்போது அந்த மார்க்கெட் சுருங்கி விட்டாலும், சிலர் தண்ணீர்த்துறை மார்க்கெட் ஆஞ்சநேயர் கோயில் என்றும் அழைத்து வருகிறார்கள். 

லஸ் ஆஞ்சநேயர்

சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடாகாவின் மைசூர் பகுதியில் இருந்து வணிக குலத்தைச் சேர்ந்த மக்கள் இந்த பகுதிக்கு குடியேறினர். மைசூரில் நிலவி வந்த மன்னராட்சிக் குழப்பங்களினால் அந்த மக்கள் செழுமையான மயிலாப்பூர் பகுதிக்கு வந்தனர். அப்போது அவர்களது குல தெய்வமான ஆஞ்சநேயர் ஸ்வாமியையும் கொண்டு வந்து தற்போது கோயில் இருக்கும் இடத்தில் வைத்து வணங்கினர். அப்போது இந்த கோயில் அனுமந்தராயர் கோயில் என்று அழைக்கப்பட்டது. கன்னட வணிகர் குல மக்களின் தெய்வமாக விளங்கிய இந்த வீர ஆஞ்சநேயர் பின்னர் மெள்ள மெள்ள உள்ளூர் மக்களின் இஷ்ட தெய்வமாகவும் மாறிவிட்டார். பக்கிங்ஹாம் கால்வாய் உருவான பிறகு, இந்த பகுதி பரபரப்பான தண்ணீர்த்துறை மார்க்கெட் பகுதியானது. அப்போது இங்கிருந்த வீர ஆஞ்சநேயர் தான் வணிக மக்களின் ராசியான  கடவுளாக இருந்து அவர்களை பாதுகாத்து வந்தார். 

லஸ் ஆஞ்சநேயர் கோயில்

மேற்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயம் காஞ்சி பரமாசாரியார் உள்ளிட்ட பல ஞானிகளின் வருகையைக் கண்ட புண்ணிய தலம். ராஜாஜி எழுதிய புகழ்பெற்ற 'சக்கரவர்த்தித் திருமகன்' என்ற ராமாயண புத்தகம் முதன்முதலில் இங்குதான் பூஜைக்கு வைக்கப்பட்டு வாசிக்கப்பட்டது. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் எதிரே காட்சியளிக்கிறார் வீர ஆஞ்சநேயர். அன்னை சீதையை தேடிச்செல்வத்தைப் போல தெற்கு நோக்கி செல்லும் கோலத்தில் அழகாக காட்சி அளிக்கிறார் இந்த அஞ்சனை புத்திரன்.

ஆஞ்சநேயர்

வலது கை பக்தர்களுக்கு அபயம் அளிக்க, இடது கை கதையை தாங்கி உள்ளது. தீர்க்கமான விழிகளில் நம்மை நோக்கும் வாயு புத்திரன் நம்மோடு பேசுவதைப்போலவே காட்சி தருகிறார். கமல பீடத்தில் நின்றிருக்கும் ஆஞ்சநேயரின் திருவால் தெற்கு நோக்கி உயர்ந்து உள்ளது. ஆஞ்சநேயரின் சந்நிதிக்கு அடுத்து அவரது ப்ரிய நாயகரான ஸ்ரீராமச்சந்திர பகவானின் சந்நிதி அமைந்துள்ளது. சீதாதேவி, லக்ஷ்மணரோடு இணைந்து ராமபிரான் அருள்பாலிக்கிறார் இங்கே. அவரது சந்நிதியைச் சுற்றிலும் தசாவதார வடிவங்கள் உலோகத்தில் வடிக்கப்பட்டுள்ளது. கோயிலின் சுற்றில் ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி உற்சவ மூர்த்திகளும் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது.

ஆஞ்சநேயர்

இந்த ஆலயத்தின் விசேஷம் என்றால் அது 'வடைமாலை' தான் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். வேண்டுவோருக்கு வேண்டியதை அருளும் ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமான் இங்கு வீர ஆஞ்சநேயராக வீற்றிருக்கிறார். காரிய சித்தி வேண்டுவோர் இவரை வந்து வணங்குகிறார்கள். முக்கியமாக வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் இங்கு வந்து கடல் கடந்து சென்ற ஆஞ்சநேயரின் தெற்கு நோக்கிய தரிசனத்தை கண்டு பலன் பெறுகிறார்கள். சகல சௌபாக்கியங்களையும் அருளும் இந்த வீர ஆஞ்சநேயஸ்வாமி உங்களின் எல்லா வேண்டுதல்களையும் அருளுவார். மயிலாப்பூர் செல்பவர்கள் இவரை ஒருமுறை தரிசித்துவிட்டு வாருங்கள். 

 

 

 


டிரெண்டிங் @ விகடன்