வெளியிடப்பட்ட நேரம்: 05:28 (10/12/2017)

கடைசி தொடர்பு:05:28 (10/12/2017)

நல்ல நிலத்தில் விழும் விதைகள் தப்பாமல் முளைக்கும்! #BibleStories

கிறிஸ்தவர்களின் வேதாகம நூலான பைபிளில் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து கூறிய `பைபிள் கதைகள்' உலகம் முழுவதும் உள்ள மக்களால் பெரிதும் விரும்பிப் போற்றப்படுபவை. 

மனிதர்களாகப் பிறந்த எல்லோரும் அறிவார்ந்தவர்களாக இருக்க முடியாது. எல்லோரும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களாகவும் இருந்துவிட முடியாது. ஆனால், நாம் கடவுளுடன் தொடர்ந்து உரையாடுவதன்மூலம் நமக்கான வழிகளைத் தேர்வு செய்ய முடியும். 

 

இயேசு


அனுபவம், கல்வி, கேள்வி போன்றவற்றில் நாம் பெற்ற அறிவை ஞானமாக மாற்ற வேண்டும். ஆனால் அந்த ஞானத்தை மிக எளிதாகப் பெற ஒருவழி இருக்கிறது. இதைத்தான் 'கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் முதல்படி' என்று கூறப்படுகிறது. கடவுள் பயமுள்ளவர்கள் நிச்சயம் தீமையிலிருந்து விலகி இருப்பார்கள். அதனால், அவர்கள் குற்ற உணர்வுடன் எதையும் செய்யமாட்டார்கள்.   

நல்ல நிலம்

'உங்களில் ஞானத்தில் குறைபாடு உடையவன் தேவனிடத்தில் கேட்கக்கடவன்' என்கிறார் இயேசு கிறிஸ்து. அதற்குக் காரணம், திருவசனங்களின் வாயிலாக, தேவனுக்கு உரிய காரியங்களைச் செய்வதற்கும் உலகப்பூர்வமான விஷயங்களில் மனிதன் நடக்க வேண்டிய வழிமுறைகளையும்  அவர் மிகத் தெளிவாகக் கூறுகிறார்.

பைபிள் வசனங்களை உவமைகளாகவும் உருவகங்களாகவும் கதைகளாகவும் சொல்கிறார். அப்படி அவர் கூறும்போது, 'கேட்பதற்கு காது உள்ளவன் கேட்கக்கடவன்' என்று அடிக்கடி கூறுவார். காதுகள் இருந்தும் திருவசனங்களைக் கேட்காமலும், கேட்டும் அதன்படி நடக்காமலும் இருப்பவர்களைப் பற்றி ஒரு கதை மூலம் விளக்குகிறார்.

விதைக்கிறவர் ஒருவர்  விதைக்கவேண்டிய விதைகளை எடுத்துக்கொண்டு வயலை நோக்கிச் செல்கின்றார். அவர் செல்லும்போது கூடையிலிருந்து சில விதைகள் வழியிலேயே கீழே விழுந்து, பலரது கால்களிலும் மிதிபட்டுப்போயின. வேறு சில விதைகளைப் பறவைகள் கொத்திச்சென்று தங்களுக்கு இரையாக்கிக்கொண்டன.

விதைப்பவர் தொடர்ந்து நடந்து செல்லும்போது மலைப்பாதையில்  இருந்த பாறைகளின் நடுவே விழுந்தன. பாறைகளின் அருகே இருந்த மண்ணும், சுனை நீரின் ஈரப்பதமும் விதைகளை எளிதாக முளைக்கச் செய்தன. ஆனால், அவற்றின் வேர்கள் கீழே சென்று வேர் பிடிக்கமுடியாமல் பாறைகள் தடுத்துவிட்டன. இதனால் சிலநாட்களிலேயே அவை காய்ந்து போயின.

 

இயேசு

இன்னும் சில விதைகள் வேலியின் ஓரத்திலிருந்த முள்புதர்களுக்கு அருகே இழுத்துச்செல்லப்பட்டன. வேலியின் ஓரத்தில் விழுந்த விதைகள் நன்றாக வளர்ந்தன. ஆனால், அவற்றைச் சுற்றிலும் இருந்த முள்புதர்கள் அதை நெருக்கித் தள்ளின. அதனால், அவை எந்தப் பயனும் தராமல் சில மாதங்கள் கழித்து முறிந்துபோயின.  

வேறு சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன.  அவை நல்லமுறையில் விளைந்தன. அவை நூறு, ஆயிரம், பதினாயிரம் என அவை பல்கிப்பெருகி பலன் தந்தன.

நல்ல நிலம் நல்ல பலன்


 இந்தக் கதையில் கூறப்படும் விதை தேவனுடைய வசனங்களாகும். வழியிலேயே விழுந்த விதை எதைக் குறிக்கிறது? தேவனுடைய வசனங்களைக் கேட்கின்ற மனிதர்களுக்கு ஒப்பானது. ஆனால் அதை அவர்கள் தங்கள் காதுகளில் கேட்டாலும் மனதுக்கு அருகே கொண்டு செல்லவில்லை.

பாறை இடுக்குகளில் விழுந்த விதைகள் தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டு, மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிற மனிதர்களைப் போன்றவை. ஆனால், இவர்களின் மனதுக்குள் சென்றாலும் கொஞ்ச நாள்கள் அதன்படி இருப்பார்கள். பிறகு தங்களின் சுபாவத்துக்கு மாறிவிடுவார்கள்.

முள்புதர்களுக்கு  நடுவே விழுந்த விதைகள், தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டு சிலகாலம் அதன்படி நடந்தன. ஆனாலும் உலகப்பூர்வமான விஷயங்களான செல்வம், ஆடம்பர வாழ்க்கை, சுயநலம் ஆகியவற்றில் சிக்கி இறைவாழ்வில் இருந்து விலகிப் போய்விடுவார்கள். 

நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் எதைக் குறிக்கின்றன? அவை கர்த்தரின் வார்த்தைகளை தூய்மையான இதயத்துடன் கேட்கும் மனிதர்களுக்கு ஒப்பானவையாக இருக்கின்றன. அவர்கள்  திருவசனங்களைக் கேட்டு நடப்பதுடன் நில்லாமல் கடவுளுடன் எப்போதும் உரையாடிக்கொண்டு களிப்புடன் இருப்பார்கள். தங்களுக்குக் கிடைத்த அந்த மகிழ்ச்சியை, மனச் சமாதானத்தை  மற்றவர்களுக்கும்  கொடுப்பவர்கள் ஆவார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்