சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு ஏற்பாடுகள்! #SaniPeyarchi2017

வகிரகங்களில் ஒருவரான சனிபகவான், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவதை சனிப்பெயர்ச்சி விழாவாகக் கொண்டாடிவருகிறோம். அதேபோல் இந்த முறை சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சியானது நாளை காலை 10:01 மணிக்கு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிபகவானுக்கு சிறப்பு அர்ச்சனை, அலங்காரம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. இந்த ஆலயத்தின் இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர், இறைவி பிராணேஸ்வரி. தேவார மூவராலும் பாடப் பெற்ற தலம் இது. காவிரி ஆற்றின் தென்கரைத்தலங்களில் இது 52-வது சிறப்புத்தலம்.

திருநள்ளாறு

சனிப்பெயர்ச்சி பலன்களைப் படிக்க... இங்கே க்ளிக் பண்ணவும்.

தேவர்கள் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தையும் சாபத்தையும், திருநள்ளாறு கோயிலில் உள்ள புனித தீர்த்தத்தில் நீராடி, தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபட்டு, சாப விமோசனம் அடைந்தார்கள் என்பது ஐதீகம். இதேபோல் மகாராஜா நளன், சனிபகவான் பாதிப்பால் பெருந்துன்பமுற்று நாடு, மனைவி, மக்கள் என அனைத்தையும் இழந்து, இறுதியில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார் என்பதும் திருநள்ளாறு தல வரலாறு சொல்லும் செய்தி.

சனிபகவான் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத கிரகம். இவர் குள்ளமானவர். கருமை நிறம் கொண்டவர். தாங்கித் தாங்கி நடப்பவர். மேற்குதிக்கில் இருப்பிடம் கொண்டவர். வில்வ ஆசனம் இவருக்குரியது. மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு ஆதிபத்தியம் உடையவர். நவதானியங்களில் எள்ளு இவருக்குப் பிரியமானது. இவரின் வாகனம் காக்கை. வேங்கடாசலபதி, ஐயப்பன், எமதர்மன் ஆகிய தெய்வங்களை அதிபதியாக உடையவர்.

இத்தகையச் சிறப்புகளை உடைய சனிபகவான் கோயில்கொண்டிருக்கும் திருநள்ளாற்றில் பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், நளதீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இந்தத் தீர்த்தங்களில் காலை வேளையில் நல்லெண்ணெய் ஸ்நானம் செய்து, சனிபகவானை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

சனிப்பெயர்ச்சி

நாளை நடைபெறும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாமல், பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்பதால், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நள தீர்த்தம் தூய்மையாக்கப்பட்டு, பக்தர்கள் புனித நீராடப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு ராசிக்காரர்களும் இங்கு வந்து தங்களுக்குரிய சனிப்பெயர்ச்சிப் பலன்களுக்கேற்றவாறு வேண்டிக்கொள்ளலாம். தீர்த்தமாடி, எள்தீபம் ஏற்றி, கறுப்பு வஸ்திரம் சார்த்தி, சனிபகவானின் தோஷத்தில் இருந்து விடுபடலாம். `சனியைப்போல கொடுப்பவரும் இல்லை, சனியைப்போல கெடுப்பவரும் இல்லை’ என்பார்கள். `சனி கொடுத்தால் யார் தடுப்பார்?’ என்ற பழமொழியையும் நீங்கள் அறிந்திருக்கலாம். நாளை நடைபெறவிருக்கும் சனிப்பெயர்ச்சியில் பக்தர்கள் இங்கு வந்து சிறப்புப் பூஜைகள் மற்றும் யாகங்களில் கலந்துகொண்டு, சனிபகவானின் அருளைப்பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

சனிப்பெயர்ச்சி பலன்களைப் படிக்க... இங்கே க்ளிக் பண்ணவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!