திருப்பதியில் டோக்கன் சிஸ்ட தரிசனத்துக்கு ரிகர்சல்! என்ன நடக்கிறது? #Tirupati

திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க தினமும் குறைந்தபட்சமாக 60 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். அரசு விடுமுறை நாள்கள் மற்றும் பள்ளிக்கூட விடுமுறை நாள்களில் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் வரை திரள்கிறார்கள். சேவைகளில் பங்கேற்று தரிசனம், சிறப்பு தரிசனம், திவ்ய தரிசனம் (மலைப்பாதையில் நடந்து வருபவர்களுக்கான தரிசனம்), சர்வ தரிசனம் (இலவச தரிசனம்) எனப் பல வகையான வழிகளில் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். 

திருப்பதி

இவர்களில் இலவச தரிசனம் செய்பவர்கள் மணிக்கணக்காக,  அங்குள்ள காத்திருப்பு அறைகளில் பல மணி நேரங்கள் காத்திருக்கவேண்டி உள்ளது. இதைத் தவிர்ப்பதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானம், நேரம், நாள் குறிப்பிடப்பட்ட  புதிய டோக்கன் தரிசன முறையை அடுத்த ஆண்டு (2018) பிப்ரவரி அல்லது மார்ச்  மாதத்தில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக, இன்று (18-ம் தேதி) திங்கள்கிழமை தொடங்கி, வருகிற 23 -ம்தேதி (சனிக்கிழமை) வரை இந்தப் புதிய டோக்கன் முறையை அறிமுகம் செய்துள்ளது. 

 

 

திருமலையில் பக்தர்கள் கூட்டம்

இந்தப் புதிய தரிசன முறையின் வாயிலாக இரண்டு மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யமுடியும். இந்தப் புதிய அனுமதிச் சீட்டுகள் திருமலையில் 14 இடங்களில் 117 கவுன்டர்களில் வழங்கப்படுகின்றன. திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இதற்கான ஏற்பாடுகளைச் செய்திட உத்தரவிட்டுள்ளார். 
திருமலையில் செய்யப்படும் தரிசன ஏற்பாடுகளை, தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு  பார்வையிட்ட பிறகு நிருபர்களிடம் தேவஸ்தானம் செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பற்றி தெரிவித்தார். 

பக்தர்கள்

''வைணவர்களுக்கு மிகவும் முக்கியமான விரதமான 'வைகுண்ட ஏகாதசி விரதம்' டிசம்பர் 29-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி வைணவக் கோயில்களில், 'சொர்க்கவாசல் திறப்பு' நிகழ்ச்சி சீரும் சிறப்புமாக நடைபெறும்.
திருமலை திருப்பதிக்கும் ஏராளமான பக்தர்கள் வரவிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து ஆங்கிலப் புத்தாண்டும் பிறப்பதால் டிசம்பர் 22-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. புரோட்டோக்கால் வி.ஐ.பி. தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

புத்தாண்டு தரிசனம்

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க விரும்பும் பக்தர்கள் டிசம்பர் 28-ம் தேதி காலை 10 மணி முதல் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸின் கம்பார்ட்மென்ட்டுகளில் அனுமதிக்கப்படுவார்கள். 
பக்தர்கள் தரிசனம் செய்ய தாமதம் ஏற்பட்டால், அவர்களுக்கு காபி, டீ, மோர், மற்றும் உணவு வகைகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் காலை 8 மணி முதல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு, வைகுண்ட வாயில் வழியாக வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு வெள்ளிக்கிழமையில் வைகுண்ட ஏகாதசி வருவது குறிப்பிடத்தக்கது.

வைகுண்ட ஏகாதசி, துவாதசி முடிந்ததும் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால், அப்போதும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள். இதனால், டிசம்பர், 29 தொடங்கி ஜனவரி 2-ம் தேதி வரை சிபாரிசுக் கடிதங்கள், நன்கொடையாளர்களுக்கு வழங்கும் தரிசனம், கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள், மூத்தக் குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள், மலைப்பாதையில் நடந்து வருபவர்கள் ஆகியோருக்கு வழங்கும் சிறப்புச் சலுகை முறையிலான தரிசனங்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

ஆனால்,  பக்தர்களின் வசதிக்காக நடந்து மலை ஏறி வர விருப்பமுள்ளவர்களுக்காக இந்த நாள்களில் திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்'' என்றும் தெரிவித்தார்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!