வெளியிடப்பட்ட நேரம்: 15:54 (19/12/2017)

கடைசி தொடர்பு:17:23 (19/12/2017)

‘வடதிருநள்ளாறு’ பொழிச்சலூர் ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம்! #SaniPeyarchi2017

வ்வொரு கோளும் மனிதர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுவதால், அது வழிபாட்டுக்கு உரியதாக விளங்குகின்றது. நவகிரகங்களில் சனி மட்டுமே ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்க அதிகக் காலம் எடுத்துக் கொள்கிறது. சாதாரணமாக ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்க இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் சனி கிரகம், இந்த முறை மட்டும் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்குள் பிரவேசிக்க அபூர்வமாக 3 ஆண்டுகளை எடுத்துக் கொண்டுள்ளது என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள். கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சனிப்பெயர்ச்சிக்குப் பின்னர், 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ம் தேதியான இன்றுதான் சனிப்பெயர்ச்சி நடைபெற்றது. சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்று காலை 10.01மணிக்கு இடம் பெயர்ந்தார். இதையொட்டி தமிழகம் முழுக்க இருக்கும் சிவாலயங்களில் இருக்கும் சனிபகவானுக்கு சிறப்பு பூஜைகளும், ஹோமங்களும் நடைபெற்றன.

சனிப்பெயர்ச்சி குறித்து முழுத்தகவல்களும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் ..

வடதிருநள்ளாறு

வடதிருநள்ளாறு என்று போற்றப்படுவது பொழிச்சலூரில் உள்ள ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம். இது பல்லாவரம் - குன்றத்தூர் சாலையில் பம்மலை தாண்டியதும் 2 கி.மீ தொலைவில் அமைந் துள்ளது. ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் அகத்தியர் காலத்தில் அமைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. தொண்டைமண்டல புகழ்நாட்டில், புகழ்சோழநல்லூர் என்று சோழர்கள் காலத்தில் அழைக்கப்பட்டது. பல்லவர்கள் காலத்தில் பொழில் சேர் ஊர் என்று அழைக்கப்பட்டு அதுவே மருவி, பொழிச்சலூர் என்றானது என வரலாறு கூறுகிறது. அகத்திய மாமுனி தனது தென்னக யாத்திரையின்போது தொண்டைமண்டலம் முழுக்க பல இடங்களில் சிவலிங்கங்களை ஸ்தாபித்து ஆலயங்களை எழுப்பி வந்தார். இந்த பொழிச்சலூர் தலத்தில் தங்கியிருந்த அகத்தியருக்கு, ஈசனே சுயம்புவாக தோன்றி காட்சியளித்தார். அதனால் இங்குள்ள ஈசன் அகத்தீஸ்வரராகவும், அம்பிகை ஆனந்தவல்லி என்றும் திருநாமம் கொண்டு அருள் செய்கின்றனர்.

சனீஸ்வரன்

சனிப்பெயர்ச்சி குறித்து முழுத்தகவல்களும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் ..

இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சனிபகவான் மிகவும் வரப்பிரசாதி என்று போற்றப்படுகிறார். சனீஸ்வர பகவானே இத்தல இறைவனை பூஜித்து வழிபட்டார் என தலவரலாறு கூறுகிறது. எனவே திருநள்ளாறுக்குச் சென்று பரிகாரம் செய்ய இயலாதவர்கள் இங்குள்ள சனீஸ்வரனுக்கு அந்த பரிகாரங்களைச் செய்கின்றனர். சனிபகவான் திருநள்ளாறு திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பதைப்போலவே இங்கும் தனியாக எழுந்தருளி சின்முத்திரையுடன் காட்சியளிக்கின்றார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ அரசர்களால் கஜ பிருஷ்ட விமான வடிவில் அமைக்கப்பட்ட இந்த ஆலயத்தில் சிவனைப்போலவே சனிபகவானுக்கு தனி வழிபாடுகள், பூஜைகள் செய்யப்படுகிறது. விநாயகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சந்நிதிகள் இங்கிருக்கின்றன.

சனிப்பெயர்ச்சி

வடக்கு வாசல் வழியே உள்ளே நுழைய இடது பக்கமாக, சம்ஹார மகா காலபைரவர் சந்நிதி அமைந்துள்ளது. அதன் பின்புறம் விளக்கேற்றும் பகுதியில் ஏராளமான பக்தர்கள், இன்று சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு எள் தீபம் ஏற்றிக்கொண்டிருந்தனர். அதைத்தாண்டி பலிபீடம், நந்தியைச் சுற்றி வெளிப் பிராகாரத்தில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பக்தர்களுக்காக ஹோமம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் அங்கே சனிபகவானிடம் வேண்டிக்கொண்டு சங்கல்பம் செய்து கொண்டிருந்தனர். பொழிச்சலூரே மக்கள் வெள்ளத்தில் திளைத்திருக்க, ஆலயத்தின் உள்ளேயோ மக்கள் கூட்டம் வழிந்து கொண்டிருந்தது.

சனிப்பெயர்ச்சி

ஒன்பது கிரகங்களில் சனிபகவான் நடுநிலை தவறாத நீதிமான் என்பதாலும், துல்லியமான பலன்களைக் கொடுப்பவராகப் போற்றப்படுகிறார் என்பதாலும், பக்தர்கள் கூட்டம் அவரை பக்திபூர்வமாக வணங்கிக் கொண்டிருந்தது. தீபமிட்டும், பிரசாதம் வழங்கியும், ஹோமங்களில் கலந்து கொண்டும், அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் செய்தும் என்று பல வகைகளிலும் பக்தர்கள் சனிபகவானை வழிபட்டுக்கொண்டிருந்தார்கள். திரளான மக்கள் கூடியிருந்ததால், கோயில் முழுவதும் பரபரப்பாகக் காணப்பட்டது. ஏழரைச் சனி, பாதச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி என எந்த சனிதோஷம் இருந்தாலும் பொழிச்சலூரில் இருக்கும் அகத்தீஸ்வரரையும், சனிபகவானையும் வணங்கி வழிபட்டால் தோஷநிவர்த்தி அடையலாம் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்..

பொழிச்சலூர் சனீஸ்வரன்

நெஞ்சில் நீதியும், செயலில் நேர்மையும், வாக்கில் துணிவும் கொண்டவர்களுக்கு எந்நாளும் நலமே அருளும் சனிபகவான், இங்கு வந்து வணங்குபவர்களுக்கு நலமும், வளமும் அருள பிரார்த்திக்கிறோம். ஈசனை சரணாகதி அடைந்த எவருக்கும் நவகிரகங்கள் எதுவும் செய்வதில்லை. அதைத்தான்

'வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி

சனிபாம்பி ரண்டு முடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியா ரவர்க்கு மிகவே.'

என்று கோளறு பதிகமும் தெரிவிக்கிறது. இன்று பெயர்ச்சி அடைந்த சனிபகவான் எல்லோர் வாழ்விலும் நன்மை புரியட்டும்.


டிரெண்டிங் @ விகடன்