வெளியிடப்பட்ட நேரம்: 00:33 (20/12/2017)

கடைசி தொடர்பு:00:33 (20/12/2017)

 திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி வழிபாடு ஏற்பாடுகளில் குளறுபடி! - பக்தர்கள் அவதி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தனிச் சன்னதியில் வீற்றிருக்கும் சனீஸ்வர பகவான், விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம்பெயரும் சனிப்பெயர்ச்சித் திருவிழா இனிதே நடந்து முடிந்தது.  

சனிப்பெயர்ச்சி

"அப்பாடா! ஒருவழியாய் சனி இன்றோடு என்னைவிட்டு விலகிவிட்டது" என்று சில இராசிக்காரர்கள் மகிழ்ந்தார்கள். "அய்யோ, சனியின் பிடியில் அகப்பட்டுக் கொண்டேனே" என்று சில இராசிக்காரர்கள் அலறுகிறார்கள்”.  இப்படி சனிபகவான் எல்லோரையும் ஆட்டுவிப்பதால் அனைத்து ராசிக்காரர்களுமே இந்நாளில் சனீஸ்வரனை வந்து தரிசித்துப் பலனடைய விரும்புகிறார்கள். சிறப்புப் பேருந்துகள், இணைப்பு ரயில் பெட்டிகள், ஆயிரக் கணக்கான தனியார் வாகனங்கள் என முதல்நாளே லட்சக் கணக்கான பக்தர்கள் திருநள்ளாறு வந்து குவிந்துவிட்டனர். அன்று இரவு அலங்கரிக்கப்பட்ட தங்க வாகனத்தில் அமர்ந்து சனீஸ்வரர் அருளாசி தந்தார். அனைத்து விடுதிகளிலும் பக்தர்கள் தங்க இடமின்றி நிரம்பி வழிந்தன.  

தீர்த்தம்

முதலில் நளன் குளத்தில் நீராடி, கலிதீர்த்த விநாயகரை தேங்காய் உடைத்து வணங்கிய பிறகு, சனீஸ்வரரை தரிசிக்க வேண்டும் என்பதால், இன்று அதிகாலை ஒரு மணி முதல் பக்தர்கள் நளன் குளத்தில் நீராட ஆரம்பித்துவிட்டனர்.  நளன் குளத்தைச் சுற்றிலும் படிகட்டுகள் அமைத்து ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் நீராட வசதி செய்யப்பட்டிருக்கிறது. அழுக்கு நீர் வெளியேறவும், புதிய நீர் உட்புகவும் மோட்டார்கள் பொறுத்தப்பட்டுள்ளன.  குளத்தைச் சுற்றிலும் இலவசக் கழிப்பறைகள், பெண்கள் உடைமாற்றும் அறைகள் என வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.  குளத்தில் பழைய ஆடைகளை விடுவது தவறான அணுகுமுறை என்று அறிவுறுத்தப்பட்டப் போதிலும், பக்தர்கள் அதே தவறை மறுபடியும் செய்திருந்தனர்.  

சனீஷ்வர பகவான்

முன்பெல்லாம் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் சனிபகவானை மட்டுமே தரிசிக்க முடியும்.  தற்போது அமல்படுத்தப்பட்ட புதிய முறையால் ரூ.200, ரூ.500 கட்டணம் செலுத்தும் பக்தர்களைப் போலவே இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்களும் சுவாமி, அம்பாள், சனீஸ்வர பகவானை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஆனால், இதிலுள்ள குளறுபடிகளைச் சரிசெய்ய தவறிவிட்டார்கள்.  
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ”இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்குக் கழிவறை, குடிநீர், சிற்றுண்டி என வசதிகள் செய்துக் கொடுத்திருக்கிறார்கள்.  முதியவர்கள், நீண்ட நேரம் நிற்கமுடியாத நோயாளிகள் சிரமின்றி தரிசிக்கத்தான் ரூ.500 கட்டணம் செலுத்தி வருகிறோம். ஆனால், எங்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. ஐந்து மணிநேரம் கால்கடுக்க நின்றும் பிரதான வாசலைக்கூட அடையமுடியவில்லை. எங்களுடன் வந்த முதியவருக்கு இரண்டு கால்களுமே வீங்கிவிட்டன. இதற்குக் காரணம், போலீஸ்காரர்களுக்கு வேண்டியவர்கள் எல்லாம் எவ்வித கட்டணமுமின்றி வி.ஐ.பி. கேட் வழியாக உள்ளே விடுவதுதான். காவலுக்கு வந்தவர்கள் எங்கள் தரிசனத்தை கெடுப்பது என்ன நியாயம்?” என்று குமுறினர்.

’நளன் தீர்த்தத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி, என்னை தரிசனம் செய்வோருக்கு என்னால் துன்பங்கள் நேராது என்றும், தன்னை வழிபடுவோருக்க தோஷ நிவர்த்தி அளித்து, நீண்ட ஆயுளையும், நற்பலன்களையும் தருவேன் என்றும் இங்குள்ள சனீஸ்வர பகவான் வரமளித்துள்ளார்’ என்கிறது தலப்புரணம்.  

பலவண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சனீஸ்வர பகவான் சன்னதிக்கு காலை 9.25 மணிக்கு தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் மேளதாளத்துடன் அழைத்துவரபட்டார். அங்கு புதுவை அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், புதுவை டி.ஜி.பி. சுனில் கவுதம், மாவட்ட கலெக்டர் கேசவன், கோயில் நிர்வாக அதிகாரி விக்ரந்தராஜா ஆகியோர் வரவேற்றனர். சனீஸ்வரருக்கு பல்வேறு வகையான வாசனைப் பொருள்களால் சிறப்பு அபிஷேக அராதனைத் தொடங்கியது.  சரியாக 10.01 மணிக்கு சனீஸ்வர பகவான் இடபெயர்ச்சியடைந்ததை உணர்த்தும் விதமாக மகாதீப ஆராத்தி காட்டப்பட்டது. சுமார் 4 லட்சம் பக்தர்கள் சனிபகவானை தரிசனம் செய்தார்கள். 

சனீஸ்வரன்

மதியம் 2.00 மணி வரை வானம் மேகமூட்டமாய் பக்தர்களுக்கு வெயில் இல்லாமல் ஒத்துழைத்தது. அதன்பின் லேசான மழைச்சாரல் என்றாலும், அதனைப் பொருட்படுத்தாமல் பக்தாகள் சனீஸ்வர பகவானை தரிசித்த வண்ணம் இருந்தனர். தற்போது தனுசு ராசிக்கு வந்துள்ள சனிபகவான், இரண்டரை ஆண்டுகாலம் வாசம் செய்தபின் அடுத்து 2020 டிசம்பர் 27ம் தேதி மகர ராசிக்கு இடம்பெயர்வார் எனக் கூறப்படுகிறது. 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க