வெளியிடப்பட்ட நேரம்: 19:34 (20/12/2017)

கடைசி தொடர்பு:21:03 (20/12/2017)

இயற்கை சீற்றங்களிலிருந்து காக்க திருவையாறு ஐயாரப்பருக்கு 1,08,000 ருத்ராட்ச அர்ச்சனை!

யற்கைச் சீற்றங்களால் மக்களுக்குப் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. பொதுவாக நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் சுனாமி, பெருமழை, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு, மக்களுக்குப் பல வகைகளிலும் நஷ்டங்களையும் கஷ்டங்களையும் தருகிறது. இதுபோன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படாமல் இருப்பதற்கும், இயற்கைச் சீற்றங்களிலிருந்து மக்களையும், மற்றுமுள்ள ஜீவராசிகளையும் காப்பதற்கும், உலகம் செழிக்கவும் தமிழகத்தில் ருத்ராட்ச அர்ச்சனை நடத்தப்பட்டு வருகிறது.

ருத்ராட்ச பூஜை

சிவபெருமானுக்கு நடத்தப் பெறும் ருத்ராட்ச பூஜையை 'தமிழ்நாடு சிவனடியார்கள் குழுவினர்,  தமிழகத்தின் முக்கிய கோயில்களில் செய்து வருகின்றனர். அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம். ''கடந்த வருடங்களில் எல்லாம் இந்த ருத்ராட்ச அர்ச்சனையை மிகவும் எளிமையாக  நடத்தி வந்தோம். ஆனால், இப்போது இயற்கைச் சீற்றங்கள் மிகப் பெரிய அளவில் ஏற்பட்டு, பேரழிவையும் பெருநஷ்டத்தையும் தந்துவிடுகிறது. எனவே, தற்போது பெரிய அளவில் ருத்ராட்ச அர்ச்சனை செய்து வருகிறோம். தமிழகத்தின் முக்கியக் கோயில்களில் இந்தப் பூஜையை நடத்தி வரத் திட்டமிட்டுள்ளோம்.

ருத்ராட்ச அர்ச்சனை

ஏற்கெனவே, அச்சிறுப்பாக்கம் ஆட்சிபுரீஸ்வரர், திருநின்றவூர் இருதயாலீஸ்வரர், குற்றாலம் குற்றாலநாதர் ஆலயங்களில் நடத்தி உள்ளோம். 10,008 சங்க நாதங்கள், கயிலாய வாத்தியங்கள் முழங்க மிகச் சிறப்பாக ருத்ராட்ச அர்ச்சனையை நடத்தி முடித்து விட்டோம். வரும் 24-ஆம் தேதி திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்திலும், 31-ஆம் தேதி பாண்டிச்சேரி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும் நடைபெற உள்ளது. அதிலும் திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெறவிருக்கிறது இந்த அர்ச்சனை. காரணம் கயிலையை தரிசிக்க விரும்பிய அப்பர் சுவாமிகளுக்கு சிவபெருமான் கயிலை தரிசனம் அருளிய மகத்தான தலம் அல்லவா திருவையாறு!'' என்றவர்கள், தொடர்ந்து திருவையாறில் நடைபெற இருக்கும் ருத்ராட்ச அர்ச்சனையின் சிறப்பு மற்றும் ருத்ராட்ச அர்ச்சனை செய்வதன் நோக்கம் பற்றி விளக்கமாகக் கூறினார்கள்.

ருத்ராட்சம்


“திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்தில், 1,08,000 ருத்ராட்சத்தால் இந்த அர்ச்சனை வெகு விமர்சையாக நடைபெறவிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் 23-ஆம் தேதியே தொடங்கும் இந்த விழாவில் ஐந்து வயதுக்குள் உள்ள 54 பெண் குழந்தைகளுக்குப் புது ஆடை அணிவித்து, மஞ்சள் குங்குமம் பூசி அம்மனாக பாவித்து கன்னியா பூஜை நடைபெறும். அதன் பிறகு ருத்ர மந்த்ர ஜபம் செய்யப்படும். 24-ஆம் தேதி காலை பக்தர்கள் அனைவருக்கும் பாக்கு மட்டை கொடுக்கப்படும். அதில் ருத்ராட்சத்தை வைத்து தலை மேல் ஏந்தி கோயிலை வலம் வர வேண்டும். பிறகு சந்நிதிக்கு வந்து ஒவ்வொருவரும் தனியாக அர்ச்சகரிடம் கொடுப்பார்கள். தொடர்ந்து  ஐயாறப்பருக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படும். பூஜைகள் முடிந்த பிறகு, பல பகுதிகளிலிருந்து வந்திருந்த சிவனடியார்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூடி இருக்க ருத்ராட்ச அர்ச்சனை நடைபெறும்.

ருத்ராட்சம்

வரவிருக்கும் காலங்களில் இயற்கைச் சீற்றங்கள் பெரிய அளவில் ஏற்பட வாய்ப்பிருப்பதாக சிவனடியார்கள் கணித்துள்ளார்கள். அதிலிருந்து காப்பதற்காக இமயமலையிலிருந்து கொண்டுவரப்பட்ட சாயம் பூசாத ஐந்து முக ருத்ராட்சங்களைக் கொண்டு சிவனுக்கு ருத்ராட்ச அர்ச்சனை செய்தால் இயற்கை சீற்றத்தை கட்டுப்படுத்தலாம் என்பதுடன், மக்களையும் காக்கலாம் என்பது நம்பிக்கை.
பொதுவாக இந்த மார்கழி மாதம் தட்சிணாயனக் காலம் முடியும் காலம் என்பார்கள். இயற்கைச் சீற்றம் அதிகம் ஏற்படும் காலம். இந்த மாதத்தில் பண்டிகைகள் எதுவும் இல்லாததாலும், சுபநிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என்பதாலும், முழுக்க இறை வழிபாட்டுக்கு உகந்த மாதமாகத் திகழ்கிறது. இந்தக் காலத்தில் நாம் இறைவனை வழிபட்டு, இயற்கைச் சீற்றங்களிலிருந்து மக்களையும் நாட்டையும் காப்பாற்றி அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்யும்போது, இறைவனின் அருளால் இயற்கைச் சீற்றம் குறையும், மக்களுக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என்பது நம்பிக்கை.

நாம் இயற்கையை மிகவும் சிதைத்துவிட்டோம். இன்னும் சிதைத்து வருகிறோம். நீர்நிலைகள் எல்லாமே கான்க்ரீட் கட்டடங்களாக மாறிவிட்டன. அதன் காரணமாக ஒரு காலத்தில் செழித்து ஓடிய ஆறுகள்கூட இன்று வறண்டு காணப்படுகின்றன. 
இதனாலேயே பெரிய அளவில் இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுகின்றன. இதிலிருந்து நாம் மீள்வதற்காகவே பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றின் தலைவனாகப் போற்றப்படும் சிவனுக்கு ருத்ராட்ச அர்ச்சனை செய்யப்படுகிறது. இதன் மூலம் மக்களை  இயற்கை அன்னையிடமிருந்து காப்பதோடு, இனியேனும் இயற்கையை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்பு உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தவுமே இந்த ருத்ராட்ச அர்ச்சனை நடத்தப்படுகிறது'' என்று விளக்கமாகவே கூறினார்கள். 

இயற்கையை இம்சிக்காமல் இருப்பதே நாம் அவற்றுக்குச் செய்யும் மிகப் பெரிய நன்றிக்கடன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்