எதிர்பார்ப்பு மனிதர்களுக்கு மட்டும்தானா? கிறிஸ்துமஸ் சொல்லும் செய்தி! #Christmas | The Best Way to Celebrate Christmas

வெளியிடப்பட்ட நேரம்: 05:38 (21/12/2017)

கடைசி தொடர்பு:09:04 (21/12/2017)

எதிர்பார்ப்பு மனிதர்களுக்கு மட்டும்தானா? கிறிஸ்துமஸ் சொல்லும் செய்தி! #Christmas

`மனுசனாப் பொறந்தா கஷ்டங்களை அனுபவிச்சுத்தான் ஆகணும்''

``எனக்கு இன்னொரு பிறவின்னு ஒண்ணு இருந்தா கண்டிப்பா மனுஷனா மட்டும் பிறக்கவே மாட்டேன்பா. எதாவது ஒரு குருவியாவோ, பட்டாம்பூச்சியாவோ பிறப்பேன்''

- நம்மில் சிலர் இதுபோன்ற வசனங்களைச் சொல்லக் கேட்டிருப்போம். அப்படியானால் மனிதப்பிறவி என்பது அவ்வளவு மோசமானதா? இதற்கெல்லாம் ஒரே விடை, இயேசு கிறிஸ்து. ஆம்... இறைவனே மனிதனாகப் பிறந்து, யாரும் நினைத்துப்பார்க்கக்கூட முடியாத வேதனைகளை அனுபவித்திருக்கிறார். அதன் மூலம் மனிதர்களுக்கு அவர் கொடுத்திருக்கிற படிப்பினைகள் ஏராளம். 

கிறிஸ்துமஸ்

`மனிதர்கள் செய்யும் பாவங்களுக்காக, மனிதர்களை மீட்பதற்காக பிறந்த இயேசு, நமக்காக இறந்தார்' என்று மிக எளிதாகச் சொல்லிவிட்டு கடந்து சென்றுவிடுவோம். ஆனால், அவருக்காக அவரது அன்புக்காக அவருக்கு நாம் என்ன செய்தோம்? என்ன செய்யப்போகிறோம்? என்பதே கேள்வியாக முன் நிற்கிறது. நாம் யாரிடமாவது அன்பு செலுத்தும்போது அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்றால் நமக்கு எப்படி இருக்கும்? 

`நான் எப்படியெல்லாம் அன்பு காட்டினேன். கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தேனே. பதிலுக்கு ஒண்ணும் செய்யாம, என்னைக் கண்டுக்காம போய் விட்டானே' என்று புலம்பித் தீர்த்துவிடுவோம். இந்த எதிர்பார்ப்பு மனிதனாகப் பிறந்த நமக்கு மட்டும்தானா? கடவுளுக்கு  அந்த எதிர்பார்ப்பு வரக்கூடாதா? அவருக்காக நாம் ஏதும் மெனக்கெடுகிறோமா? ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமா? அவரை மகிழ்ச்சியாக வைக்க வேண்டும் என்று எண்ணுகிறோமா?

கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸ் பண்டிகை வந்ததும் வீடுகளை சுத்தம் செய்கிறோம், சுண்ணாம்பு அடிக்கிறோம், வர்ணம் பூசுகிறோம், குடில் அமைக்கிறோம், நட்சத்திர விளக்கு போடுகிறோம். சீரியல் பல்புகளை வீடுகளின் முகப்பில் தொங்கவிடுகிறோம். வகை வகையாக பலகாரங்கள் செய்கிறோம், புத்தாடைகள் வாங்குகிறோம், நண்பர்களை வீட்டுக்கு அழைக்கிறோம், விருந்து பரிமாறுகிறோம். 

மற்றவர்களில் இருந்து எப்படி வித்தியாசமாகக் கொண்டாடலாம் என்றெல்லாம் யோசிக்கிறோம். ஆனால், நம் ஆன்ம வீட்டை முற்றிலும் மறந்துவிடுகிறோம். அதை சுத்தப்படுத்துகிறோமா? அலங்கரிக்கிறோமா? அதிலும் ஒரு குடில் அமைத்து பாலன் இயேசுவை வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோமா? நள்ளிரவு வழிபாட்டுடன் அவரை மறந்துவிட்டு வழக்கம்போல நம் காரியங்களில் கண்ணும் கருத்துமாக இருக்கிறோமா?

நம்மில் ஏதாவது ஒரு மாற்றத்தை ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு நாளும் கொண்டு வந்துகொண்டே இருக்க வேண்டும். அவருக்கும், நமக்குமான இடைவெளி குறைந்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழா அர்த்தமுள்ளதாக இருக்கும்.

உம்மை எங்களுக்காகத் தந்த இறைவா! உமக்கு நாங்கள் எங்களை உடனடியாகத் தராவிட்டாலும் பரவாயில்லை. உம்மை நோக்கி எங்கள் கவனத்தைத் திருப்பி எங்கள் பாதங்களை உம்மை நோக்கி நடக்க வரம் தாரும். அதுவும் வரவிருக்கும் உம்முடைய பிறப்பு விழாவைக் கொண்டாட எங்களையே நாங்கள் முழுமையாகத் தயாரித்து உம்மோடு கொண்டாடுவதற்கான வரத்தைத் தாரும், இறைவா...!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்