வெளியிடப்பட்ட நேரம்: 03:07 (22/12/2017)

கடைசி தொடர்பு:10:20 (22/12/2017)

'இலவசமாகப் பெற்றீர்கள்... இலவசமாகக் கொடுங்கள்' #BibleStories

பைபிளின் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து உவமைகளாகவும் உருவகங்களாகவும் கூறிய கதைகள், உலகம் முழுவதும் உள்ள மக்களால் பெரிதும் விரும்பிப் போற்றப்படுபவை.  

இயேசு

ராஜா ஒருவர் தனது அரசாங்கக் கணக்கு வழக்குகளைப் பார்ப்பவரை அழைத்து யார் யார்? எவ்வளவு தரவேண்டும்? என்று கணக்கைப் பார்க்கத் தொடங்கினார். அதுமட்டுமல்லாமல், கடன் பெற்றவர்களிடம் வசூல் செய்து கொண்டுவர அரசாங்க சேவகர்களையும் அனுப்பிவைத்தார். 

கடன் வசூலிக்கக் கிளம்பிப் போனவர்கள், நடுத்தரமான குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனைப் பிடித்து அழைத்து வந்தார்கள். அவனோ அரசருக்கு 100 தங்கக் காசுகள் தரவேண்டி இருந்தது. நீண்ட நாள்களாகியும் அவன் கடன் தொகையைத் தராமல் இழுத்தடித்தான். இது ராஜாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. உடனே, ' அவனது சொத்துகளை எல்லாம் விற்று, நமக்குச் சேர வேண்டியதுபோக மீதமுள்ளதை அவனிடம் கொடுத்து விடுங்கள்' என்றார். 

அவன் ராஜாவின் அரசாங்கத்தில் ஒரு பணியாளனாக இருந்ததால் ராஜாவின் கால்களில் விழுந்து, தன்னையும் தனது கடனையும் மன்னிக்கும்படி வேண்டினான். திடுதிப்பென பலர் முன்னிலையில் தனது தவற்றை உணர்ந்து அவன் மன்னிப்புக் கேட்டதால் அவன்மீது இரக்கம் கொண்டு, அவனது கடனை மன்னித்து அவனை விடுவித்தார்.

இயேசு


 அந்தப் பணியாளன் தனது வீட்டுக்குப் போகும்வழியில் வறியநிலையில் இருந்த ஒரு மனிதனை மிரட்டி,  'நீ வாங்கிய 10 வெள்ளிக்காசுகளை உடனே தந்துவிட்டு மறுவேலையைப் பார்' எனக் கூறி மிரட்டிக் கொண்டிருந்தான். அரசாங்கப் பணியாளனின் கால்களில் விழுந்து அந்த மனிதன் கதறினான். ஆனால், இவனோ மனம் இரங்கவில்லை. மிரட்டிய அந்த மனிதன் வேறு யாருமல்ல ராஜாவிடம் கடன் தொகை பெற்று திரும்பச் செலுத்த முடியாதவன். மிரட்டப்பட்டவன் அவன் வீட்டில் வேலைகள் செய்பவன்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள்  அரசாங்கப் பணியாளனைப் பிடித்து இழுத்துக்கொண்டுபோய் அரசரிடம் கொண்டுபோய் விட்டனர். 
அப்போது அரசர்,

''பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால், அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனை எல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான். நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னிக்காமல்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்'' என்றார். 

இயேசு

கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்த வேளையில், இறை வாழ்வுக்குள் (Prayer Life) வருகின்றவர் எப்படியிருக்கவேண்டும், எவற்றையெல்லாம் கைக்கொள்ளவேண்டும் என்பதை இயேசு கிறிஸ்து தனது பிரசங்கம் முழுவதும் கூறி இருக்கிறார்.  

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஒரு கிறிஸ்தவன் ஈடுபடுவதற்குமுன் எல்லோருடனும் அன்பும் சமாதானமும் சுதந்திரமும் பாராட்ட வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.  நம்மால் இயன்ற அளவு வறியவர்களுக்கு உதவிடவேண்டும். இதைத்தான் 'இலவசமாகப் பெற்றீர்கள் இலவசமாகக் கொடுங்கள்' என்று கூறுகின்றார். 

எல்லோரையும் சகோதரர்களாக எண்ணி அன்பாயிருக்க வேண்டும். இந்த ஆண்டில் எவருடனாவது பிணக்கு ஏற்பட்டால், அவருடன் சமதானமாகிவிட்டு கிறிஸ்துவை வணங்கவேண்டும்.  இதை,''உன் சகோதரன், உன்னை அவனோடு ஏழு மைல் வரவேண்டும் என்று கூறினால், அவருடன் ஏழு எழுபது மைல் செல்வாயாக'' என்னும் திருவசனத்தின் வாயிலாகக் கூறுகிறார். 

 

இயேசு
 

எவரெல்லாம் பாக்கியவான்கள் என்பதை ஒரு பட்டியலாகக் கூறுகிறார். 

*  ஆவியில் எளிமையுள்ளவர்கள், பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.

*  துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.

* சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

* நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.

* இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

* இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

* சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள்.

* நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

இவற்றைக் கடைப்பிடிக்க நமக்குச் சிரமமாக இருந்தாலும் அதனால் கிடைக்கும் பலன்கள் மிகுதியானவை. 
அப்படியானால் மனிதர்களாகிய நாம் செய்யும் பாவங்களை அவர் மன்னித்து நம்மை ஏற்றுக் கொள்வாரா என்னும் கேள்வி நம் இதயத்தில் எழலாம். நிச்சயம் ஏற்றுக்கொள்வார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்