வெளியிடப்பட்ட நேரம்: 19:07 (22/12/2017)

கடைசி தொடர்பு:13:01 (29/12/2017)

நல்ல மழைப்பொழிவு, சிறப்பான விளைச்சல்... 2018, ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள்!

2018 - ஆங்கிலப் புத்தாண்டு, நிகழும் ஹேவிளம்பி வருடம், மார்கழி மாதம் 17 - ம் தேதி, திங்கள்கிழமை பிறக்கிறது. ஜோதிட ரீதியாகச் சொல்ல வேண்டுமென்றால், தட்சிணாயன காலம், ஹேமந்த ருது, வளர்பிறை சதுர்த்தசி திதியில், சமநோக்கு கொண்ட மிருகசீரிடம் நட்சத்திரம், ரிஷப ராசி, கன்னி லக்கினம், சித்தயோக நன்னாளில் நள்ளிரவு 12.00  மணிக்கு 1.1.2018 - ஆம் ஆண்டு பிறக்கிறது. சுக்கிரனின் வீடான ரிஷப ராசியில் இந்த ஆண்டு பிறக்கிறது. எண் கணித ஜோதிடப்படி சந்திரனின் ஆதிக்கத்தில் (2+0+1+8 = 2) இந்த ஆண்டு பிறப்பதால்  2017 -ம் ஆண்டைப் போல்  மந்தமாக இல்லாமல், பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும். 

ராசிபலன்

புதன் ஆண்டு முழுவதும் நன்றாக இருக்கிறார். இதனால் தொழில்நுட்பம் சார்ந்த புதிய பொருள்களின் அறிமுகம் இருக்கும். வாகன உற்பத்தி அதிகரிக்கும். கம்ப்யூட்டர், கார், டி.வி., ஃபிரிட்ஜ், ஏ.சி மற்றும் சமையலறைச் சாதனங்களின் விலை குறையும். காய்கறி விலை குறையும். 

ஆபரணங்களின் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும். தங்கம் இறக்குமதி அதிகரிக்கும். வெள்ளி விலை உயரும். கண்ணாடி, சிமென்ட், மின்னணு சாதனங்கள், செங்கல், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை உயரும்.

புத்தாண்டு

ரிஷப ராசிக்கு ஆறாம் இடமான துலாம் ராசியில் குருவும் செவ்வாயும் மறைந்திருப்பதால், உலகமெங்கும் வேலையில்லா திண்டாட்டம் சற்று அதிகரிக்கும். ரிஷப ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சனி இருப்பதால், வாகனங்கள் ஓட்டும்போது கவனமாக இருப்பது நல்லது.  இந்த வருஷம் முழுவதுமே பூமிகாரகனான செவ்வாய் அவ்வளவு நன்றாக இல்லை. 

குறிப்பாக மார்ச் மாதம் 10 - ம் தேதியிலிருந்து மே மாதம் 2 - ம் தேதி வரைக்கும் செவ்வாயும் சனியும் சேர்ந்திருப்பார்கள். அந்தக் காலகட்டத்தில் அரசியல் மாற்றங்கள், ஆட்சிக்கவிழ்ப்பு, எல்லையில் போர் ஏற்படுவது போன்ற அசம்பாவித நிகழ்வுகள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. இவைத் தவிர சின்னச்சின்ன இயற்கைச் சீற்றங்கள் நடக்கவும் வாய்ப்பு உள்ளது. 

ராசிகள்

மே மாதம் 2-ம் தேதியிலிருந்து, அக்டோபர் மாதம் வரை செவ்வாய் ஞானக்காரகனான கேதுவுடன் இருக்கிறார். இதனால் உலகின் பல இடங்களில் சின்னச்சின்னதாக வன்முறைகள் வெடிக்கும் வாய்ப்புகள் ஏற்படும். 

கலைத்துறைக்கு காரகத்துவம் பெற்ற சுக்கிரன் இந்த ஆண்டு சரி இல்லாத நிலையில் இருக்கிறார். குறிப்பாக, செப்டம்பர் தொடங்கி, டிசம்பர் மாதம் வரை ராசிக்கு 12-ம் இடத்தில் மறைகிறார். 30.8.18 முதல் 28.12.18 வரை சுக்கிரன் வக்கிரமாகி அமர்வதால், சினிமாத் தொழில் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. 

சினிமா

திரைக்கலைஞர்கள் அரசியலுக்கு வந்து தோல்விகளைச் சந்திப்பார்கள். நடிகர், நடிகைகளுக்குள் ஒற்றுமை குறையும். முன்னணி நடிகர், நடிகைகள் சில சிக்கல்களிலும் விமர்சனங்களிலும் சிக்கிக்கொள்வர். சின்ன பட்ஜெட் படங்கள் நல்ல வெற்றியைப் பெறும்.  

பூமியின் விலை குறையும். நகரத்தைக் காட்டிலும் நகரத்தையொட்டியிருக்கும் பகுதிகள் நவீனமாகும். விளைநிலங்கள் வீட்டு மனையாவதைத் தடுக்க சட்டம் வரும். வீடு, மனை வாங்கும்போது தாய்ப்பத்திரம், நகராட்சி அப்ரூவல், பட்டா முதலியவை சரியாக இருக்கிறதா எனப் பார்த்து வாங்கவேண்டும். தவறான நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

விவசாயம்

ஆண்டு இறுதியில் வழக்கம்போல், சென்னை உள்ளிட்ட பெருநகரங்கள் மற்றும் மலைப்பகுதி நகரங்களுக்குப் பெருமழை, வெள்ளம் ஆகியவை சவாலாக இருக்கும்.

மழைப்பொழிவு நன்றாக இருக்கும். அதனால் விளைச்சல் சிறப்பாக இருக்கும். மரப்பயிர்கள் நல்ல லாபம் தரும். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விஷயங்கள் நடைபெற்றாலும், நடுத்தர வர்க்கம் மற்றும் பாமரர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கொஞ்சம் விழிப்பு உணர்வுடன் செயல்பட்டால், எல்லாமே சிறப்பான பலன்கள் அமையும். 

 

 

(2018 புத்தாண்டு ராசி பொதுப்பலன்களை இங்கு வீடியோவில் பார்க்கலாம்)

ஆண்டு முழுவதும் ஒரு 'பாசிட்டிவ் வைப்ரேஷன்' இருக்கும். இதை மனதில் உள்வாங்கிக் கொண்டு நாம் செயல்களைச் செய்தால், இந்தப் புத்தாண்டு எல்லா வகையிலும் நலமும் வளமும் தருவதாக அமையும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்