1 கிலோ உப்பு 35 ஆயிரம், 5 தேங்காய் 16 ஆயிரம்... கரூர் நோன்புத் திருவிழாவின் ‘காஸ்ட்லி’ ஏலம்

கோயில் திருவிழாக்கள், நோன்புகள், விரதங்கள் இவை எல்லாவற்றுக்கும் பின்னணியில் தனிமனித சந்தோஷம், மகிழ்ச்சி மட்டும் அல்லாமல், சமூகத்தின் ஒருங்கிணைப்பும் பரஸ்பர அன்பு பாராட்டுதலும் நிச்சயம் இருக்கும். இதைத்தான் ‘எல்லோரும் இன்புற்றிருப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே’ எனத் தாயுமானவர் சொன்னார். இதற்கு பெருமை சேர்க்கும் விதமாக, கரூர் வாழ் நகரத்தார் சமூக மக்களிடையே ஆண்டுதோறும் பிள்ளையார் நோன்பு கடைப்பிடிக்கப்படுகின்றது. 

திருவிழா

இந்த விழாவில், ஒரு கிலோ உப்பு 35 ஆயிரம் ரூபாய்க்கும், 300 ரூபாய் மதிப்பிலான ஆண் குழந்தை சட்டை 21 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் போன சுவாரஸ்ய நிகழ்வும் நடந்தது.

கரூர் நகரத்தார் சங்கத்தின் சார்பில் சமுதாய நோன்பான, ‘பிள்ளையார் நோன்பு’ விழா வருடாவருடம் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருடமும் விழா களைகட்டியது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற இவ்விழாவில் கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பிள்ளையார் நோன்பு

இந்தப் பிள்ளையார் நோன்பு, பெரிய கார்த்திகை என்று கூறப்படும்,  திருவண்ணாமலை தீபத்தன்று தொடங்கி, சஷ்டியும், சதய நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் கொண்டாட்டத்தோடு நி்றைவடையும். உலகெங்கும் நகரத்தார் சமுக மக்கள் வாழும் பகுதிகளில், ஒன்று கூடி, இவ்விழாவை நடத்துகின்றனர். 

கரூரில் நடைபெற்ற விழாவில் மாவிளக்கில் 21 நூல்கள் திரியிட்டு, சமூதாயப் பெரியவர்கள் ராமையா, வைரவன் ஆகியோர்  இழை (திரியுடன் கூடிய மாவிளக்கை சுடர் ஏற்றி ) எடுத்துக்கொடுக்க கலந்துகொண்ட 600 க்கும் மேற்பட்டோர் அதைச் சுடரோடு விழுங்கி, நோன்பு களைந்தனர்.

நோன்பு களையும் நிகழ்ச்சி நடந்து முடிந்ததும், பூஜையில் பயன்படுத்தப்பட்ட மங்களப் பொருள்கள் ஏலம் விடப்பட்டன. 

ஏலம்

குறிப்பாக, உப்பை ஏலத்தில் எடுத்தால் செல்வம் பெருகும், மஞ்சள் எடுத்தால் ஆரோக்கியம் பெருகும், மாலை எடுத்தால் திருமணம் கைகூடும், சட்டை எடுத்தால் குழந்தை பிறக்கும் என்பது காலங்காலமாக இருந்துவரும் நம்பிக்கை.

ஒவ்வொரு மங்களப் பொருள்களை ஏலத்தில் எடுப்பதற்கும் ஒரு காரணமும் பலனும் உண்டு என்பதால், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு மங்களப்பொருள்களைப் போட்டிப் போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர்.

சங்கத்தின் செயலாளர் மேலை.பழனியப்பன் ஏலத்தை நடத்தினார். மொத்தம் 2 லட்சத்து, 87 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. அதிகப்பட்சமாக, ஒரு கிலோ உப்பு 35 ஆயிரம் ரூபாய்க்கும், 300 மதிப்புள்ள ஆண் குழந்தை சட்டை 21 ஆயிரம் ரூபாய்க்கும், வெண்கல விளக்கு 21 ஆயிரம் ரூபாய்க்கும், 5 தேங்காய்கள் ரூ 16 ஆயிரம் ரூபாய்க்கும், 12 எலுமிச்சைப் பழங்கள் 6 ஆயிரத்து 700 க்கும் ஏலம் விடப்பட்டன.

கலந்து கொண்ட மக்கள்

ஏலத்தில் கிடைக்கும் பணத்தைக்கொண்டு சமுதாயத்தில் படிக்க வசதியில்லாமல் சிரமப்படும் மாணவர்களுக்கு உதவி செய்கிறார்கள்.பழனியப்பன்  இதில் கரூர், வேலாயுதம்பாளையம், புலியூர், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், திருச்சி மாவட்டம், முசிறியிலிருந்தும் ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 

 பின்னர் இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து 13 பேருக்கு தலா ரூ 3 ஆயிரம் கல்வி உதவித்தெகை வழங்கப்பட்டது. வருகை தந்த அனைவருக்கும் காளாஞ்சி (பிரசாதம்) வழங்கப்பட்டது.  

இதுபற்றி, கரூர் நகரத்தார் சங்கச் செயலாளர் மேலை பழனியப்பனிடம் பேசினோம். 

“இந்த நிகழ்ச்சி கடந்த 31 வருடங்களாக கரூரில் நடைபெறுகிறது. இங்கு மட்டுமல்ல, அதே நாளில் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும், கனடா, அமெரிக்கா, லண்டன், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளிலும் நடைபெறும்.

விநாயகரை வணங்கி நோன்பு கழிப்பதுதான் இந்தச் சடங்கு. அதோடு, இங்கு பூஜையில் வைத்து பூஜிக்கப்படும் பொருள்களை ஏலம் எடுத்தால், அதனால் அதை வாங்குபவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. 

கல்வி உதவித் தொகை

அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குச் செலவு செய்வோம். இந்த வருஷமும் 18 பூஜைப் பொருள்களும் மொத்தம்  2,86,000 ரூபாய்க்கு ஏலம் போயின" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!